Published : 13 Sep 2016 01:26 PM
Last Updated : 13 Sep 2016 01:26 PM
காவிரி இரு மாநிலங்களுக்கு இடையிலான ஆறு என்பதை ஏற்றுக்கொண்டுதான் காவிரி நடுவர் மன்றமே 1990 ஜூன் 2-ம் தேதி அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
அரசியல் சாசனத்தை மதிப்பதால்தான், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதாக கர்நாடக முதல்வர் கூறுவது உண்மை என்றால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஏன் நடந்துகொள்ள மறுக்கிறார்?
கர்நாடக மாநிலத்தின் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்பது உண்மையல்ல. அந்த மாநில அரசாங்கம் தனது இணையதளத்தில் அணைகளின் நீர் இருப்பு விவரத்தை 6.9.16-ம் தேதி வரை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்கும் அணைகளில் கே.ஆர்.எஸ். அணையைத் தவிர, ஹேரங்கி, ஹேமாவதி, கபினி ஆகிய அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன.
ஒரு வாதத்துக்காக நீர் குறைவாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டாலும், பற்றாக்குறை காலங்களில் நீரை எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடக மாநில அரசு நடந்துகொள்ள வேண்டாமா?
மேட்டூர் அணை பாசனத்துக்கு இந்த ஆண்டு இன்னும் திறக்கப்படவே இல்லை. ஆனால், கர்நாடகாவில் அணைகள் மூடப்படாமல் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இது எந்த விதத்தில் நியாயம்? கர்நாடகம் - தமிழ்நாடு இரு மாநிலங்களிலும் கொந்தளிப்பான நிலைமை இருக்கிறபோது மத்திய அரசு அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது சரியல்ல.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கும்வகையில் மத்திய அரசு, உடனடியாகத் தலையிட வேண்டும். தமிழக முதல்வர் அதற்கான முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
- பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
*
தவிர்த்திருக்க வேண்டாம்
விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலும், பெ.மணியரசன் முன்னிலையிலும் ‘காவிரிப் போராட்டக் குழு’ என்ற புதிய அமைப்பு கூடியதாகவும் அதில் திமுக, காங்கிரஸ், தமாகா, விசிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டதாகவும், டெல்டாவில் 16-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் செய்தி படித்தேன்.
அதில் இரு கம்யூனிஸ்ட்டுகள் பற்றி தகவல் ஏதும் இல்லை. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி என்ற முறையில், காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சினையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரித்துப் பார்க்கவே முடியாது. கம்யூனிஸ்ட்டுகளையும் இக்கூட்டத்துக்கு அழைத்திருக்க வேண்டும். துடிப்பான இடதுசாரிகளைத் தவிர்ப்பது, போர்முனையின் கூர்மையை மழுங்கச் செய்யும்.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
*
என்ன கொடுமை இது?
இப்போதெல்லாம், மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சனம் செய்தாலே சமூக வலைதளங்களில் நம்மைத் தேச விரோதிகள் என்கிறார்கள். தமிழக அரசைக் குறைகூறினால், அவதூறு வழக்கு போடுகிறார்கள். இவர்கள் தவறே செய்தாலும் ‘ஆஹா… ஓஹோ’வென்று புகழ்ந்தால், நாம் தேச பக்தியாளர்களாக ஆகிவிடுவோமா? என்ன கொடுமை?
நல்லவேளையாக ‘அரசை விமர்சிப்பது தேசத் துரோகம், அவதூறு ஆகாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
- ஆறுமுகப்பெருமாள், திருச்செந்தூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT