Published : 15 Jun 2017 09:52 AM
Last Updated : 15 Jun 2017 09:52 AM

இப்படிக்கு இவர்கள்: தீர்வு தராத தீர்ப்பு

பல்வேறு சந்தேகங்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலாமல், நீட்தேர்வு முடிவுகளை வெளியிடவும் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தவும், அகில இந்திய மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தவும், நாடு தழுவிய அளவில் ஒரு பொது நுழைவுத்தேர்வுக்குப் பரிந்துரைத்தது நாடாளுமன்ற நிலைக்குழு (சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்: 92-வது அறிக்கை). அதன்படிதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதேசமயம், இந்தத் தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கவும் அந்த நிலைக்குழு பரிந்துரைத்தது. ஆனால், இவற்றை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.

மாடர்ன் பல் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கில், “மருத்துவ மாணவர் சேர்க்கை மத்திய அரசின் பட்டியலில் வருவதல்ல. பொதுப்பட்டியலில் உள்ள விஷயம். எனவே, இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அவசியம். இத்தகைய சூழல் எழும்போது மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசும் இணக்கத்துடன், சுமூகமாகவும்தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று இதே உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை.

நீட் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு கொண்டுவந்த சட்ட மசோதாக்கள் மூன்று மாத காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பது குறித்தும் எந்த விதக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. இந்நிலையில், மருத்துவக் கல்விச் சேர்க்கை பொதுப்பட்டியலில் வருமா வராதா, மாநில அரசுக்கு உரிமை உண்டா இல்லையா உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை காண தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் முயல வேண்டும்.

-முனைவர் நா.மணி, அமைப்பாளர்,
கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x