Published : 24 Jan 2017 10:30 AM
Last Updated : 24 Jan 2017 10:30 AM
கரும்பு ஆலைகள் 2013 முதல் 2016 வரை விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கித் தொகை ரூ.1,850 கோடி. இதை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினோம். தொழில்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மூன்று முறை உறுதியளித்தார். முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் முறையிட்டோம். இன்னும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் கரும்புச் சாகுபடி குறைந்துவருகிறது. நாட்டின் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்திலிருந்து நான்காம் இடத்துக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.
நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க, தமிழக அரசு முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். 2016-17-க்கான கரும்பு கொள்முதல் விலையை ரூ.3,500 அறிவிக்க வேண்டும். கூட்டுறவு, பொதுத் துறை ஆலைகளைத் தனியார்மயப்படுத்தும் முயற்சியைக் கைவிட்டு, அரசே நடத்த வேண்டும். - எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு அமலாக்க வேண்டும். தேசிய வேளாண் ஆணையத்தின் பரிந்துரைகளையும் அமலாக்க வேண்டும். அப்போதுதான் கரும்பு விவசாயிகளின் வாழ்வைப் பாதுகாக்க முடியும்.
- கே.வி.ராஜ்குமார், தலைவர். தென்னிந்தியக் கரும்பு விவசாயிகள் சங்கம்.
ஒட்டுமொத்த நலனுக்கான போராட்டம்!
தற்போது நடைபெற்றுவரும் போராட்டம், ஜல்லிக்கட்டுக்கும் அப்பாற்பட்டது என்ற கணிப்பு சரியானதே. கூட்டாட்சித் தத்துவத்தினின்று வெகுவாக விலகித் தம் கொள்கைகளை மாநிலங்களின் மீது திணிக்கும் நடுவண் அரசின் போக்குக்கு எதிரானதே. பொதிகையில் தமிழாக்கம் செய்யப்பட்ட நடுவணரசு விளம்பரங்கள் இன்று இந்தியிலேயே வருகின்றன. செய்தியை விட மொழி மேலானது என்பதன் வெளிப்பாடாகவே கருதலாம்.
நாடு முழுமைக்கும் ஒரே வரி, ஒரே மொழி, ஒரே பாடத்திட்டம், உயர் கல்வி பெற பொதுத் தேர்வுகள் போன்றவை இளைஞரை வெகுவாகப் பாதிக்கின்றன. தாம் இரண்டாம் நிலைக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டோமோ என்ற எண்ணம் தலைதூக்கியுள்ளது. பெயரளவுக்காவது மாநில அரசுகளுக்குப் பங்கு இருந்த திட்டக் குழுவும் கலைக்கப்பட்டது ஒரு துருவச் செயல்பாடே. செஸ் என்ற பெயரில் நேரடியாக நடுவணரசு வரி பெறுவதும், மாநிலங்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் கூட்டாட்சிக்கு முரண்பட்ட செயல்கள். ஜல்லிக்கட்டைப் பாராதவர்களே பெரும்பான்மையான போராட்ட வீரர்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நலனுக்கான போராட்டமாக எடுத்துச் செல்வதே இன்றைய தேவை.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
இந்திய அரசியலமைப்பும் பாரம்பரியமும்
ஜல்லிக்கட்டுக்காக கல்லூரி இளைஞர்கள் பட்டாளம் தமிழகம் முழுவதும் எழுச்சிகரமாகப் போராடியது பாராட்டுக்குரியது. இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 51ஏ கூறும் அடிப்படைக் கடமையான ‘நமது பழம் பெருமைமிக்கப் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும்’ என்பதைச் செவ்வனே செய்துவரும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி.
- லேனா இளையபெருமாள், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT