Published : 24 Feb 2017 09:16 AM
Last Updated : 24 Feb 2017 09:16 AM
பிப்ரவரி 21 அன்று வெளியான ‘பிம்ப அரசியலிலிருந்து விடுபட வேண்டிய தருணம்’ என்ற மருதனின் கட்டுரை மக்களின் அரசியல் விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தது. ஜனநாயகத்தில், வாக்களித்த மக்கள் வெறுமனே பார்வையாளர்கள் என்பதையே நடந்தேறும் நிகழ்வுகள் மூலம் அரசியல்வாதிகள் மக்களுக்கு உணர்த்திவருகிறார்கள்.
21 ஆண்டுகளாக நடைபெற்ற ஒரு குற்ற வழக்கில், தெளிவான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும்கூட, புனையப்பட்ட வழக்கு என்றும், சீராய்வு மனு மூலம் விடுவிக்கப்படுவது சாத்தியம் என்றும் ஆளும் தரப்பு ஒருபுறம் வாதங்களை முன்னெடுக்க, மறுபுறம் எம்.எல்.ஏக்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கூவத்தூரில் தங்கியிருந்தனர் என்று மாநில நிர்வாகம் சட்டரீதியாக முன்வைத்து, சட்டம் ஒரு இருட்டறை என்பதை நிரூபித்துவிட்டது.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பதவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஒருவரின் ஆலோசனையின் பேரிலேயே ஆட்சி நடத்தப்போகிறார் என்பதை என்னவென்று சொல்வது? இந்தச் சூழலில், தனது உழைப்பாலும் மக்கள் செல்வாக்கினாலும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியின் ஆட்சி என்பதனாலேயே, இது நீடிக்க வேண்டுமா என்பதை வாக்களித்த மக்கள் மட்டுமல்ல, தொண்டர்களும் கூடத் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.
- வி.சந்திரமோகன், பெரியநாயக்கன்பாளையம்.
சமூகம் உய்வடைய..
எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய ‘24x7 ஒளிபரப்புகளின் பின்னியங்கும் அரசியல்’ ஒரு நிமிடக் கட்டுரை, ஊடகங்கள் எதை முன்னிறுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளது. பரபரப்பான ஒளிபரப்புகளைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு மேடை அமைக்க வேண்டும் என்ற கூற்று வரவேற்கத்தக்கது. ஊடகங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதும், இந்தச் சமூகம் உய்வடைவதற்கு ஒரு வழி.
- ராஜாமணி, கரூர்.
தாய்மொழியின் அருமை
வீ.பா.கணேசன் எழுதிய ‘தாய்மொழி நாள் சொல்லும் மறக்கக் கூடாத வரலாறு’ கட்டுரை படித்தேன். இன்றைய உலகுக்கு அவசியத் தேவையான ‘ஒற்றைக் கலாச்சாரத்தைக் கனவு கண்டால் உங்களுடைய இருப்பே சிதறுண்டு போகும்; பன்மைத்துவத்தைப் பாதுகாத்திடுங்கள்’ என்ற உண்மையைக் கட்டுரை உரக்கச் சொன்ன விதம் அருமை. இது இந்தியாவில் சமீப காலமாக முன்னிறுத்தி வரும் மதம் சார்ந்த வற்புறுத்தலுக்கும் பொருந்திப்போவது கண்கூடு. சாதி, மதம், மொழி என எது ஒன்று ஆதிக்கம் செலுத்துமானாலும் ஒற்றுமை சிதறுண்டு போகும் என்பதை கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினை கண்முன் காட்டுகிறது. அந்நிய மொழிக் கலப்பின்றி அவரவர் மொழியைப் பேசும்போது மொழி வளர்வதோடு மொழி ஆளுமையும் பெருகும்.
தாய்மொழியை வளர்க்க வேண்டிய பொறுப்பு மற்றெல்லாரையும் விட ஆசிரியர்களுக்கு அதிகம் உண்டு. எனது தந்தையார் சத்தியநாதன் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் தமிழ் வகுப்புகள் எடுக்கும்போது, மாணவர்களைத் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பார். கட்டாயத்தின் பேரில் அல்லாமல் தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி இச்செயலைச் செய்ய வைத்ததால், அவருடைய மாணவர்கள் பலரும் இன்றளவும் அதனைப் பின்பற்றிவருகின்றனர். அப்பாவுக்கு இப்போது 82 வயதானாலும் அவருடைய மாணவர்கள் என்னைப் பார்க்கும்போது இதனை நினைவுகூர்கிறார்கள். இதனை ஒவ்வொரு மொழிப்பாட ஆசிரியரும் செய்யும்போது தாய்மொழியின் அருமை அவர்களுக்குத் தெரியவரும்.
- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT