Published : 25 Jan 2017 10:06 AM
Last Updated : 25 Jan 2017 10:06 AM
ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பில் ‘தி இந்து’வில் ஜன.24 அன்று வெளியான ‘தமிழக அரசியல்வாதிகளே போராட்டத்தைப் படியுங்கள்’ கட்டுரையை வாசித்தேன். தமிழகக் கட்சிகளுக்கு நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறார் கட்டுரையாளர். கட்டுரையில் ஒரு சின்ன தகவல் பிழையை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ‘மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவிக்கச் சென்றபோது, அதை ஏற்க மறுத்துத் திருப்பியனுப்பினார்கள் மாணவர்கள்’ என்று ஒரு வரி வருகிறது. மாணவர்களின் போராட்டத்துக்குத் தார்மிகரீதியிலான திமுகவின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலேயே போராட்டக் களம் சென்றேன்.
அந்தப் போராட்டக் களத்திலேயே அமரும் நோக்கமோ, அதைத் திமுகவினுடையதாகத் திருப்பும் நோக்கமோ இல்லை. ஆகையால், திட்டமிட்டபடி ஆதரவு தெரிவித்துவிட்டு, உடனடியாகத் திரும்பிவிட்டேன். போராட்டக் களத்தை நான் வசப்படுத்தச் சென்ற மாதிரி ‘மாணவர்கள் திருப்பியனுப்பினார்கள்’ என்று வெளியான செய்தி, சமூக வலைதளங்களில் கிளப்பிவிடப்பட்ட வதந்தி. அதேசமயம், போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் மாணவர்கள் மீது தமிழகக் காவல் துறையினர் தாக்குதல் தொடங்கியபோது, அதைத் தடுக்கும் எல்லா முயற்சிகளிலும் திமுக ஈடுபட்டது. என்றைக்கும் மாணவர்களுக்குத் திமுக துணை நிற்கும்.
- மு.க.ஸ்டாலின், திமுக செயல் தலைவர்..
'ஏவல் துறையான காவல் துறை!
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் - காவல் துறையினர் தொடர்பான எனது முகநூல் பதிவு ஒன்று ‘தி இந்து’வில் (ஜன.24) வெளியாகியிருந்தது. அது முன்னதாக, காலை 10 மணி அளவில் கலவரங்கள் தொடங்கும் முன் பதிவிடப்பட்டது. பின்னர், தொடர்ந்தும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள், காவல் துறையினரின் தாக்குதல் தொடர்பாக இரவு ஒரு பதிவிட்டேன். “எதற்குப் போராட அவசியமில்லையோ அதற்கான போராட்டம் இது. எப்படி முடியக்கூடாதோ அப்படி முடிந்திருக்கிறது. போராட்ட முடிவில் நம் முன் நிற்கும் இரு முக்கிய கேள்விகள் இவைதான். 1. தலைமையற்ற அரசியல் முதிர்ச்சியற்ற கூட்டத்தைத் திரட்டினால், அதில் பயனடைவது எப்படிப்பட்ட சக்திகள்? 2. ஆளுங்கட்சியின் ஏவல் கருவியாக மட்டுமே இயங்கிப் பழகியிருக்கும் காவல் துறை தானே வன்முறையைத் தொடங்கிவைக்கும் சக்தியாகத் தொடர்ந்து செயல்படுவதை எப்படி மாற்றுவது? இவைதான் மெய்யான சிவில் சமூகத்தின் கவலைகளாக இருக்க முடியும்.” இதுவே இந்தப் போராட்டம், அதன் இறுதியில் நடந்த வன்முறை தொடர்பிலான என்னுடைய கருத்து.
- ஞாநி, பத்திரிகையாளர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT