Published : 02 May 2017 09:54 AM
Last Updated : 02 May 2017 09:54 AM

இப்படிக்கு இவர்கள்: கல்வித் துறை சீர்திருத்தத்துக்காகக் காத்திருக்கிறது தமிழகம்!

புதிதாகப் பொறுப்பேற்கும் பள்ளிக் கல்விச் செயலர்கள், ‘துறையைப் பற்றி அறிந்துகொள்ளவே மூன்று மாதங்கள் தேவை’ என்று கூறுவர். இதற்கு மாறாக, பள்ளிக் கல்வியில் சீர்திருத்தங்கள் கொணர விரைந்து செயல்படும் உதயச்சந்திரன் பாராட்டுதலுக்குரியவர் (5 கேள்வி - 5 பதில், ஏப் 28). பள்ளிக் கட்டிடங்கள், வகுப்பறைகள், விளையாட்டுத் திடல் போன்ற பலவும் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. மக்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளை மக்கள் பள்ளிகளாக ஏற்கச்செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு, நீட், ஐ.ஏ.எஸ். தேர்வுகளை மட்டும் மையப்படுத்தித் திட்டம் தீட்ட இயலாது. 10 லட்சம் மாணவர்களில் சில ஆயிரம் பேரே அதனால் பயன்பெறக் கூடும். எனவே, மேனிலைக் கல்வி பெறாதவரது வேலைவாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவது என்பதிலும் கவனம் கொள்ள வேண்டும். 1970-களில் தமிழ்நாடு திட்டக் குழுவில் கல்வி உறுப்பினராக இருந்த முனைவர் மால்கம் ஆதிசேஷையா, ‘கற்கும் சமுதாயத்தை நோக்கி…’ என்ற அறிக்கையில், தமிழ்நாட்டுக்கான கல்வி நோக்கங்களை வகைப்படுத்தினார். அதனைப் புதுப்பித்து புதிய லட்சியங்களை அடையும் வகையில் பள்ளிக் கல்வி இயங்க வேண்டும்.

கீழிருந்து மேல்மட்டம் வரை புரையோடியுள்ள ஊழலைக் களைய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர், பெற்றோர் மட்டுமின்றி கல்வி அமைப்பில் தலையாய இடம்பெறும் மாணவரோடும் கலந்துரையாட வேண்டும். ‘நாட்டின் தலைவிதி அதன் வகுப்பறைகளில் நிர்ணயிக்கப்படுகிறது’ என்று கோத்தாரி கல்விக் குழு வலியுறுத்தியுள்ளது. அதற்கேற்ப எதிர்காலத் தமிழகத்தை ஒளிமிக்கதாக மாற, வகுப்பறைகள் இன்றே மாற வேண்டும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் பெரியாரும்!

கல்வெட்டுகளிலும் பனை ஓலைகளிலும் எழுதிவந்த தமிழ் எழுத்து, அச்சு வடிவத்துக்கு மாறும்போது, மரக் கட்டைகளில் செதுக்குவதற்குத் தகுந்தாற்போல் மாற்றம் பெற்றன. அச்சு வடிவம் வந்த பிறகு, பெருவாரியான வடிவ மாற்றங்கள் நிகழவில்லை. இந்திய மொழிகள் அனைத்திலும் கூட்டெழுத்துகள் இன்றும் பரவலாகப் பயன்பட்டுவரும் நிலையில், தமிழில் இருந்த கூட்டெழுத்துகளான லை, ளை, ணை, னை, ணா, றா, னா போன்றவற்றை நீக்கச் சொன்ன பெரியாரின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அச்சு முறையே காரணம்.

ஆனால், ஐ, ஔ என்ற கூட்டொலி கொண்ட எழுத்துகளையும் நீக்கிவிடலாம் என்ற அவரது கூற்று ஏற்கப்படவில்லை. ஐ, ஔ எழுத்துகளுக்கு தமிழில் இரண்டு மாத்திரை ஒலி அளவு. ஆனால், அய், அவ் என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை மட்டுமே ஒலியளவு கொண்டதாக அமையும் என்பதால், அக்காலத்திலேயே எதிர்ப்பு எழுந்தது. ‘நான் எனக்குத் தெரிந்தவற்றைக் கூறுகிறேன். அதில் நல்லது எது என்று கருதுகிறீர்களோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விட்டுவிடுங்கள்’ என்று பெரியார் சொன்னதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன்.

- வை.ராமமூர்த்தி, மின்னஞ்சல் வழியாக.



நல்ல வழிகாட்டி!

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதும் ‘தொழில் ரகசியம்’ தொடரைத் தொடர்ந்து படிப்பதோடு, பாதுகாத்தும் வருபவன் நான். சிக்கலான கோட்பாடுகளைக் கொண்ட தொழில் ஆலோசனைகளை இதைவிட எளிமையாகவும், சுவாரசியமாகவும் தமிழில் எழுத முடியுமா என்பது சந்தேகமே. சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘தெரிந்ததை விட்டால் வம்பு; தெரியாததைத் தொட்டால் சங்கு’ என்ற பகுதியைப் படித்து, அன்றைய தினம் தொழிலில் நான் எடுக்கவிருந்த ஒரு தவறான முடிவைக் கைவிட்டு, இழக்க இருந்த பணத்தைச் சேமித்தேன். ஏப்.29-ல் வெளியான, ‘அதிக வாய்ப்புகள் முடிவைத் தாமதப்படுத்தும்’ என்பதுகூட தொழிலில் என் தவறைத் திருத்திக்கொள்ள உதவியது. ஒவ்வொரு வாரமும் எனக்காகவே இவர் எழுதுகிறாரோ என்ற உணர்வை அவரது எழுத்துகள் தருகின்றன.

- ராஜன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x