Published : 16 Mar 2017 10:39 AM
Last Updated : 16 Mar 2017 10:39 AM
மத்திய அரசின் பிடியிலிருந்து கலை, கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் நமக்கான உரிமையை இன்னும் முழுமையாகப் பெற முடியவில்லை. இப்பாகுபாடுதான், இளம் தலைமுறையினரிடையே ‘இந்திய ஒன்றியம்’ என்ற முரட்டு அதிகாரப் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற சிந்தனை தலைதூக்கக் காரணமாக அமைகிறது. அது ஆபத்தான பாதையும்கூட.
இச்சூழலில், நம்மை நாம் உயர்த்திக்கொள்வது எப்படி என்ற கேள்விக்கு விடையாக, இந்திய ஆட்சிப் பணிகளைக் கைப்பற்றுவது, அதற்காக நம் இளைஞர்களைக் கூர்தீட்டுவது என்ற மகத்தான பணியில் களமிறங்கியிருக்கிறது ‘தி இந்து’ நாளிதழ் (‘தமிழும் தமிழருமே முதன்மை அக்கறை!’ மார்ச் 10). அதிகாரச் செயலிகளாய்த் திகழும் தமிழ் ஐஏஎஸ்களின் எண்ணிக்கையை நாம் அதிகரித்தே ஆக வேண்டும். இப்பயிலரங்கில் பெருவாரியான எண்ணிக்கையில் நம் இளைஞர்கள் பங்கு பெறட்டும். அறிவுத்திறன் வழியே நமக்கான அதிகார இருக்கைகளைக் கைக்கொள்வோம்.
- பழ.அசோக்குமார், புதுக்கோட்டை.
வாசிப்பை வளர்த்தெடுப்போம்
நூல்வெளி தலையங்கம் (வாசிப்புப் பண்பாட்டை வளர்த்தெடுப்போம்! மார்ச் 11) வாசித்தேன். மதிப்பெண்களை மட்டுமே பிரதானமாகக் கொண்ட கல்விமுறையால், பாடப்பகுதியை மனப்பாடம் செய்யவைப்பது மட்டுமே தங்கள் பணி என பெரும்பாலான மொழி ஆசிரியர்கள் எண்ணும் நிலை உள்ளது. வாசிப்புப் பண்பாட்டை வளர்ப்பதில் தமிழ் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் மாணவர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி, அவற்றைப் படிக்க ஊக்கம் அளிக்க வேண்டும். பள்ளிகளில் தமிழ் இலக்கிய மன்றத்தின் மூலம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி எனப் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தினை வளர்த்தெடுத்தால் நல்லதொரு சமுதாயம் உருவாகும்.
- ப.வெங்கடாசலம், கிருஷ்ணகிரி.
நல்லவர்களுக்குக் காலமில்லை
மணிப்பூரில் அம்மாநில முதலமைச்சரை எதிர்த்து நின்ற இரோம் ஷர்மிளாவுக்கு, அவ்வூர் மக்கள் வெறும் தொண்ணூறு வாக்குகளை மட்டுமே அளித்து, தங்களின் மகத்தான ‘நன்றி உணர்ச்சியை’ வெளிப்படுத்தி உள்ளனர். இந்த மக்களுக்காகத்தான், 16 வருடங்கள் உணவு கூட உட்கொள்ளாமல் போராடித் தன் மொத்த இளமையையும் வீணடித்துக்கொண்டவர். ஒருவேளை, நல்லவர்கள் அரசியலுக்குத் தகுதி அற்றவர்கள் என்று மக்கள் முடிவுசெய்திருப்பார்களோ?
- மோகன் அனந்தராமன், சென்னை.
நெகிழ்வித்த கட்டுரை
மார்ச் 12-ல் சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு மற்றும் அவரது மகள் சஹிதா பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் எழுதியுள்ள கட்டுரை மனதை நெகிழ்விப்பதாக இருந்தது. டாக்டர் கிச்சுலு, டாக்டர் சத்யபால் இருவரையும் ஆங்கிலேய அரசு பஞ்சாபிலிருந்து வெளியேற்றியதைக் கண்டித்துதான் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக்கில் (ஜெனரல் டயர் கொடுஞ்செயல் புரிந்த) அந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது புதிய செய்தி. சுதந்திரப் போராட்டம் என்றாலே காந்தி, நேரு, வல்லபபாய் பட்டேல், திலகர், கோகலே போன்றவர்களுடைய பெயர்கள்தாம் நினைவுக்கு வரும். டாக்டர் சைபுதீன் கிச்சுலுவை நினைவூட்டியதற்கு நன்றி!
- எம்.ஆர்.சண்முகம், மொடச்சூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT