Published : 07 Mar 2017 09:52 AM
Last Updated : 07 Mar 2017 09:52 AM

இப்படிக்கு இவர்கள்: நூல் வலிமை!

மார்ச் 4 அன்று வெளியான நூல்வெளி தலையங்கமும், ‘ஸ்டாலினுக்காக வாங்கினேன், ஆனா நான் படிக்கப்போகிறேன்’ கட்டுரையும் வாசிப்பை நேசிக்கும் அனைவருக்கும் மகிழ்வைத் தந்திருக்கும். தனக்குப் பிறந்த நாள் பரிசாக வந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு அளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளது மற்றொரு நல்ல செய்தி. ஒருபுறம் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எந்த இழப்பும் ஏற்படாமல், நீதிமன்றம் மூலமாகத் தடுத்துக்கொண்டே, அந்நூலகத்துக்குத் தனக்கு வந்த புத்தகங்களை அளிக்கும் ஸ்டாலினின் செயல்பாடு பாராட்டத்தக்கது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.



கூடுதல் ரயில் இயக்கலாமே?

சென்ற வாரம் சென்னை புறநகர் ரயில் ஒன்றில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மூன்று இளைஞர்கள் சிக்னல் கம்பத்தில் மோதி கீழே விழுந்து மரணமுற்ற செய்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கோர சம்பவங்களால் ஆயிரக்கணக்கான இளம் உயிர்கள் பறிபோவதுடன் பலர் பலத்த காயங்களுடன் முடமாக்கப்படுகிறார்கள்.

இதற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு காண வேண்டியது அவசியம். நெருக் கடியான நேரங்களில் கூடுதல் ரயில்களை நேரம் தவறாமல் இயக்கிப் பணிக்குச் செல்வோரின் பிரச்சினைகளையும், இடர்பாடுகளையும் நீக்க வழி செய்ய வேண்டும். அதேசமயத்தில், பேருந்துகளிலோ அல்லது ரயில்களிலோ உள்ளே இடம் இருந்தால்கூட சிறிதும் பொறுப்பில்லாமல் படியில் தொங்கிக்கொண்டு செல்வோருக்கான தண்டனையையும் அதிகரிக்க வேண்டும்.

- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.



கண்ணியம் அவசியம்!

திமுகவில் இணைந்திருக்கும் நடிகர் ராதாரவியின் பேச்சு மாற்றுத் திறனாளிகளை வருத்தமடையச் செய்துவிட்டது. தான் செய்த தவறை உணர்ந்து, அதற்காக பகிரங்க வருத்தம் (மார்ச் 5) தெரிவித்திருக்கிறார் ராதாரவி. அதில், மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஒன்றுக்கு, தனது தந்தையின் பெயரால் ஒரு வகுப்பறையும் கட்டித்தந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை வேதனைப்படுத்தும் நோக்கத்தோடு அவர் பேசவில்லை என்றே வைத்துக்கொண்டாலும், பொதுவாழ்வில் இருப்போர், குறிப்பாக பிரபலங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு பாடம். மற்றவர்கள் கை தட்டுகிறார்களே என்பதற்காக கண்ணியக் குறைவாகப் பேசுவது பொதுவாழ்வில் இருப்போருக்கு இழுக்கையே ஏற்படுத்தும்.

- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி.



ராணுவமும் அறவுணர்வும்!

ராணுவ வீரர்கள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் கவலை தருகின்றன. ‘ராணுவத்தில் துன்புறுத்தப்படுவதாகப் பேட்டி கொடுத்த கேரள வீரர் ராய் மேத்யூ மர்ம மரணம்’ செய்தியை (மார்ச் 4) வாசித்து அதிர்ச்சியடைந்தேன். பொதுவாக, அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் சிலர், கீழுள்ள பணியாளர்களைத் தங்கள் சொந்த வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்கிறது. அதுகுறித்த தன் ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்ட மேத்யூ, அது ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இது தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசும் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

- ஆர்.சுந்தரம், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x