Published : 13 Jun 2016 10:38 AM
Last Updated : 13 Jun 2016 10:38 AM
தெறிக்க வைக்கும் நூலகங்கள்
'முடங்கும் பதிப்புத் தொழிலும் செல்லரிபடும் நூலகங்களும்' கட்டுரை படித்தேன். எனக்கு வயது 56. சிறு வயது முதல் பல்வேறு நூலகங்களைத் தொடர்ந்து பயன்படுத்திவருபவன். நூலகங்களுக்குப் புதிய புத்தகங்கள் வரும்போதெல்லாம் எனக்கு ஏமாற்றமே மிஞ்சும். திமுக ஆட்சியாக இருந்தால் கருணாநிதியைப் புகழும் நூல்களும், அதிமுக ஆட்சி என்றால் ஜெயலலிதா புகழ்பாடும் நூல்களும் இருக்கும். சமகால இலக்கியங்கள், புனைவுகள், இலக்கிய விமர்சன நூல்கள் மிகக் குறைவாகவே இருக்கும். எல்லோராலும் நூல்களை வாங்கிப் படிக்க இயலாது என்பதற்காகத்தான் அரசு சார்பில் பொது நூலகங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த நூலகமே இப்படி இருப்பது வேதனைக்குரிய ஒன்றல்லவா?!
- கே.எஸ்.முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.
*
சட்டத் திருத்தம் தேவை
சமீபகாலமாக நகரெங்கும் அதிகரித்துவரும் கொலை, கொள்ளைகள், குறிப்பாக பட்டப்பகலில் கூலிப்படைகளை ஏவிவிட்டு நிகழ்த்தப்படும் படுகொலைகள் பொதுமக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகின்றன. கூலிப் படைகளை ஒடுக்கவும் சட்டம் - ஒழுங்கைக் காக்கவும் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற தமிழிசை சௌந்தரராஜனின் கோரிக்கை நியாயமானது. ஆண், பெண் என இருபாலரும் வேலைக்குச் சென்றுவரும் இன்றைய கால கட்டத்தில், அச்சத்தைப் போக்குகிற வகையில் சட்டத் திருத்தம் அவசியம்.
- கு.மா.பா.கபிலன், சென்னை.
*
வாழ்வின் அங்கம் 'புத்தகம்
ஏன் சக்களத்தர் ஆகிவிடு கிறது?' என்ற கட்டுரை நல்ல கோணத்தில் எழுதப்பட்டிருக்கிறது. புத்தகம், பத்திரிகைகள் இரண்டும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். அவையிரண்டும் நம் வாழ்வின் ஓர் அங்கம். புத்தகங்கள் விலை ஒன்றும் பருப்பு, மிளகாய் விலைபோல் உயர்ந்துகொண்டே இருப்பதில்லை. இதை அனாவசியச் செலவு என்று கருதுவது அறியாமையே தவிர, வேறல்ல.
- வீ. யமுனா ராணி, சென்னை.
*
புத்தகங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்குரியவை; ஒவ்வொரு நூலுக்கும் வாசகர் உண்டு; ஒவ்வொரு வாசகருக்கும் நூல் உண்டு என்பன போன்ற ஐந்து கொள்கைகளை நூலக உலகுக்கு அறிமுகப்படுத்திய நூலகத் தந்தை ரங்கநாதன் பிறந்த தமிழ்நாட்டில், தற்போதைய வாசிப்பு நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது. இங்குதான் 40 வருடங்களுக்கு முன்பு தெருவுக்கு ஒரு வாசகசாலை என்ற புரட்சி நடந்து, வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிய வரலாறு நிகழ்ந்தது. புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலம் புதிய சிந்தனைகள் விதைக்கப்பட்ட காலமது. புத்தக்காட்சியில் ஒரு கோடி நூல்கள் இருக்கின்றன என்றால், ஒரு கோடிச் சிந்தனைகள் வாசகனை வளப்படுத்தக் காத்திருக்கின்றன என்றுதானே பொருள். வாசிப்பு ஆர்வம் பள்ளிப் பருவத்திலேயே உருவாக்கப்படுவதற்கான சூழ்நிலை தமிழகத்தில் இளம் மாணவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை; ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வாசிப்பு அனுபவத்தை உணர்த்தும் அளவுக்குத் தகுதியானவர்களா என்பதும் ஒரு புதிர்தான். ஒரு நல்ல ஆசிரியனே ஒரு நல்ல வாசகனை உருவாக்க முடியும் என்பதுதான் உலக நியதி.
- விளதை சிவா, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT