Published : 09 Jun 2016 10:37 AM
Last Updated : 09 Jun 2016 10:37 AM
கேரளாவில், கேஎஸ்எஸ்பி என்று சொல்லப்படுகிற கேரள அறிவியல் இயக்கம் மிகச் சாதாரணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.2 கோடிக்கு மேல் புத்தகம் விற்கிறது. தனது இயக்கப் பணிக்கான அனைத்துச் செலவுகளையும் அந்த வருமானத்திலிருந்தே நேர்செய்துகொள்கிறது.
இத்தகைய செய்திகளால் உந்தப்பட்ட எம்போன்றவர்களும் புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டு, தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் இடத்துக்குச் சென்றோம். புத்தகங்களை விரித்து ஆவலோடு காத்திருந்தோம். பெரும்பாலோர் புத்தகங்களைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. மொத்தமே 60 ரூபாய்க்குத்தான் புத்தகம் விற்றது. உடன் வந்த நண்பர்கள் நொந்துபோனார்கள். அடுத்த வாரம் ஒரு கிராமத்தின் வாரச் சந்தையில் புத்தகக் கடை விரித்தோம்.
3 மணி நேரத்தில் 4,000 ரூபாய்க்கு மேல் புத்தகம் விற்பனை. இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நூலகம் உண்டே தவிர, அதனைப் பெருவாரியான மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துவதே இல்லை. பாடத்திட்டதுக்குள்ளேயே பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புக் கலாச்சாரம் மேம்பட வழிவகைகள் செய்யப்பட வேண்டும். புத்தகங்கள் சமூக மாற்றத்துக்கான கருவி எனில், மாற்றத்தை விரும்பாத அரை நிலப்பிரபுத்துவச் சமூகம் பல வழிகளிலும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை நேரிடையாகவும் மறைமுகமாகவும் தடை செய்கிறதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
புத்தகங்கள் சக்களத்தியாவது இதன் நிமித்தமாகவும் இருக்கலாம். வாசிப்பு என்பது ஒரு தொடக்கப்புள்ளிதானே. அதனைக் கடக்கவே இத்தனை தடைகள் இருக்கும்போது, ஒட்டுமொத்த மனித குல மேன்மைக்கான வழிவகை எப்போது என்று எண்ணும்போது ஏக்கப் பெருமூச்சு வருகிறது.
- பேரா.நா.மணி, ஈரோடு.
வாழ்க்கை வாசிப்பு
புத்தக வாசிப்பு பொழுதுபோக்குக்கோ, வேலைவாய்ப்புக்கோ மட்டுமின்றி வாழ்க்கை மேம்பாட்டுக்கும் பெரிதும் உதவுகிறது என்பதை, ‘வாழ்க்கை வாசிப்பு’ பகுதியில் வெளியான பல்வேறு அனுபவங்கள் ஆழமாக உணர்த்துகின்றன.
- பாலாஜி, மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT