Published : 27 Mar 2017 09:30 AM
Last Updated : 27 Mar 2017 09:30 AM

இப்படிக்கு இவர்கள்: என்ன செய்கிறார்கள் நம் எம்.பி.க்கள்?

டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அரை நிர்வாணமாக அமர்ந்து, போராடும் காட்சியைப் பார்க்கும்போது கண்ணீர் வருகிறது. ஆனாலும், மத்திய அரசு நியாயமற்ற முறையில், நிவாரணத்தொகையைக் குறைத்து வழங்கியிருப்பது அதிர்ச்சி தருகிறது. நாடாளுமன்றத்துக்கு நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய உறுப்பினர்கள், இப்போராட்டம் குறித்து மக்களவையில் பேசுவதும் இல்லை; கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து போராடுவதும் இல்லை. மாறாக, காங்கிரஸ் உறுப்பினர் வேணுகோபால், “தமிழகத்தில் வறட்சி காரணமாகத் தற்கொலை செய்து கொண்டவர்களின் மண்டை ஓடுகளை ஏந்தியபடி விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்!” என்று பேசினார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, “வேணுகோபாலின் கருத்து ஆதாரமற்றது. விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது!” என்று பேசுவதை என்னவென்று சொல்வது? (மார்ச் 21). நமது உறுப்பினர்களின் நோக்கமும் லட்சியமும், தமிழக அதிமுக அரசுக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதில்தான் இருக்கிறதே தவிர, விவசாயிகளின் குறைகள் தீர வேண்டும் என்பதில் இல்லை. இனியாவது, அவர்கள் நாடாளுமன்றத்தில் முழு மூச்சாகப் போராட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

- கல்கிதாசன், எழுத்தாளர்.



மாநில உரிமை முக்கியம்

மார்ச் 21-ம் தேதி வெளியான, ‘ஏன் தோற்றார் இரோம் ஷர்மிளா?’ கட்டுரை நன்கு அலசி ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது. மக்கள், தங்களுக்காக 16 வருடங்கள் போராடிய ஷர்மிளா, குடும்ப வாழ்க்கையில் நுழைந்துவிட்டால் அவரது போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதனால் உலக அளவில் பேசப்பட்டுவந்த ‘மணிப்பூர் சிறப்பு அதிகாரச் சட்ட எதிர்ப்பு’ நீர்த்துவிடும் என்ற எண்ணமும்தான், அவர் மீதான நம்பிக்கையின்மைக்குக் காரணமாக அமைந்தது. தமக்காகப் போராடுபவர்கள் போராடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பது மாபெரும் தவறுதான் என்றாலும், அவர்களுக்குத் தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையைவிட, மாநில உரிமைதான் முக்கியம் என்று கருதுகிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.

-வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.



தனியாகப் போட்டியிட்டால்…

தமிழகத்தில் நிலைபெற காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும்? கட்டுரை மிகச்சிறந்த கருத்துகளை முன்வைத்தது. காங்கிரஸ் அடுத்தடுத்து திமுக, அதிமுக கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தற்போது மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் எனப் பேசிவருகிறது. சீமான், பாஜகவுக்கு இருக்கும் நம்பிக்கைகூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. காங்கிரஸ் மீண்டும் உயிர்பெற வேண்டுமெனில், தன்னைப் புதுப்பித்துக்கொண்டு தனியாகப் போட்டியிட்டால் மட்டுமே முடியும்.

- ராமசாமி, ‘உங்கள் குரல்’வழியாக.



விழித்துக்கொள்வோம்!

‘வறட்சியை எதிர்கொள்ள வழிகளா இல்லை?’ மற்றும் ‘அடுத்து வரும் தலைமுறைக்குப் பசுமை மாறாக் காடுகள் இருக்குமா?’ என்ற இரு கட்டுரைகளையும் படித்தேன் (மார்ச்-21). ‘காப்பி பயிரிட்டபோது, காடுகள் அழிவை அறியாமல் கும்பகோணத்துக்காரர்கள் காப்பி சுவையில் மயங்கியிருந்தனர்’என்ற வரிகளும், மனிதனுக்கு மட்டுமில்லாது விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் வனத்தை நம்பியே இருக்கின்றன என்ற இறுதி வரிகளும் சிந்திக்கவைத்தன.

- தம்பிதுரை, தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x