Published : 16 Feb 2017 10:41 AM
Last Updated : 16 Feb 2017 10:41 AM

இப்படிக்கு இவர்கள்: ஒரே கட்சிதான் வேண்டுமா?

இந்தத் தீர்ப்பு சசிகலாவுக்கு மட்டும் அல்ல ஜெயலலிதாவிற்கும்தான். விரைவில் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளிலும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். குடிமக்கள் அனைவரும் ஒரு கட்சியைச் சாராமல் நல்ல தலைவர்களைத் தேர்தெடுக்க வேண்டும். நான் திமுககாரன், நான் அதிமுககாரன் என்று சொல்லி அந்தக்கட்சி தலைவர்கள் செய்யும் அட்டூழியங்களை நியாயப்படுத்தாமல் நல்ல அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதே குடிமகனுக்கு அழகு. நம் ஓட்டுரிமையைப் பரம்பரைப் பரம்பரையாக ஏன் ஒரே கட்சிக்கு அடகு வைக்க வேண்டும்? ஊழல் வழக்கில் சிறை சென்ற அவர்கள் வெட்கப்படுகிறார்களோ இல்லையோ, அவர்களைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் வெட்கப்பட வேண்டும். சசிகலாவின் வற்புறுத்தல் காரணமாக, ஆளுநர் சற்று அவசரப்பட்டு இருந்தால் ஒரு ஊழல் குற்றவாளி இரண்டு நாட்களாவது மாண்புமிக்க முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருப்பார்.

-ஜவஹர், ‘தி இந்து’ இணையதளம் வழியாக.



எளியவர்களுக்கும் சிகிச்சை…

மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் புதிய தொழில்நுட்பத்தின் பலனாகவும் வெளிவந்திருக்கும் ‘கேப்சூல் பேஸ்மேக்கர்’ பற்றிய கட்டுரை (பிப்.14) அருமை. கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதுபோல், இதுபோன்ற மருத்துவச் சாதனங்கள் எளிய மக்களிடம் சென்று சேரும் வகையில் அரசே அவற்றைத் தயாரிக்க முன்வர வேண்டும்.

- ஆர். ரங்கராஜன், கோயம்புத்தூர்.



இனி என்ன?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. சசிகலா உட்பட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்ப நிலை ஓரளவுக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. அதேசமயம், முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்திருக்கும் நிலையில், அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பது, ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண் டும். இதுபோன்ற நிச்சயமற்ற சூழல் நீடிப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

- எல். ராமநாதன், மின்னஞ்சல் வழியாக..



நம்பிக்கை தரும் நாளிதழ்

பரபரப்பான அரசியல் சூழலிலும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகச் சட்டம் கேட்டுப் போராடும் மூத்த தலைவர் நல்லகண்ணு பற்றிய பதிவு (பிப்.14) ஆறுதல் தருகிறது. பொது வாழ்வில் நேர்மையானவர்களை மக்கள் மறந்தாலும், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடர்ந்து ஆதரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

- அலர்மேல் மங்கை, சென்னை.



எங்கு தவறு?

‘ஏழு வயதுச் சிறுமியின் மரணமும் நம்மை உலுக்காதா?’ (பிப்.13) என்ற தலையங்கம் படித்தேன். இந்தத் தலைமுறை எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று கவலை யாய் இருக்கிறது. வீடுகளில் பெண்மையைக் கொண்டாடிய சமூகம் இன்று அதே பெண்மையை மிதித்து நாசமாக்குதைப் பொறுத் துக் கொள்ள முடியவில்லை.பச்சிளம் சிறார்கள்கூடப் பாலியல் கொடுமைக்குப் பலியாவது மனித மனம் வக்கிரம் ஆவதைத்தான் காட்டுகிறது. வீட்டிலா, பள்ளியிலா, கல்லூரியிலா, சமூகத்திலா எங்கே தவறு? சட்டத்தினால் மட்டும் இந்தத் தவறைத் திருத்திவிட முடியாது. பெற்றோர்கள் ஆண் குழந்தைகளின் வளர்ப்பு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இது போன்ற குற்றத்திற்கு புலனாய்வு, விசாரணை மிக விரைவாகவும் நேர்மையுடனும் நடைபெற வேண்டும்.

- ஜீவன். பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x