Published : 03 Apr 2017 11:30 AM
Last Updated : 03 Apr 2017 11:30 AM

இப்படிக்கு இவர்கள்: நமக்கான ஞானியின் தன் வரலாறு!

தமிழ் இலக்கிய வெளியில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கிக்கொண்டிருக்கும் கோவை ஞானியின் வாழ்க்கைப் பதிவுகளை இன்றைய தமிழ்ச் சூழலுக்கு அறியத் தந்திருக்கும் ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள் (நூல்வெளி, ஏப்.1). மார்க்ஸிய அறிஞரும், சிறந்த இலக்கிய - அரசியல் விமர்சகருமான ஞானி, தமிழ் நெடும் பரப்பில் ஓர் புத்தாக்கச் சிந்தனையாளராவார். மார்க்ஸியத்திலிருந்து, தமிழ் தேசியத்துக்கு அவர் வந்தடைந்திருக்கும் பாதையை வரலாற்றியலாளர்களும், நுண்ணரசியல் பேசுவோரும் கவனித்தாக வேண்டும்.

தமிழ் இலக்கியங்களை அவர் மீள் வாசிப்பு செய்தார். மனித வரலாற்றைப் போன்றே இலக்கிய வரலாறும் பகுதியானதல்ல; அது வரலாற்றின் நெடும் குருதியோட்டத்தின் தொடர்ச்சி என்றே பேசுகிறார், எழுதுகிறார். சிறு பத்திரிகை உலகைத் தன்வசம் வைத்திருந்த ஞானி, பல பெண் எழுத்தாளர்களை உயர்த்தியவர். சந்திக்கும்போதெல்லாம் உங்கள் வரலாற்றைப் பதிவுசெய்யுங்கள் என்று யாதொருவரையும் கேட்டுக்கொள்வது ஞானியின் பண்பில் ஒன்று. நாம் சொல்லும் ஒன்று, பிறருக்கு வழியாக அமையலாம் என்பது அவரது எண்ணம்.

பார்வைத் திறனற்ற நிலையிலும் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய உலகிலும் தமிழ் சிந்தனைப் பரப்பிலும் புதிய ஒளிபாய்ச்சும் ஞானியின் தன் வரலாறு நிச்சயம் நமக்கானதுதான்.

- இரா.மோகன்ராஜன், முத்துப்பேட்டை.



‘நீட்’ தேர்வும் அரசின் செயல்படாத்தன்மையும்!

மார்ச் 30-ல் வெளியான ‘நீட்’ தேர்வு குறித்த தலையங்கம் வாசித்தேன். தமிழக அரசு, மாணவர்கள் மேற்படிப்பில் தற்போதுள்ள குழப்பத்துக்குத் தீர்வு காணும் முயற்சியில் சிறிதுகூடக் கவனம் செலுத்தவில்லை. ஆனால், உட்கட்சி விவகாரத்திலும் இடைத்தேர்தலிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இது, தமிழக மாணவர்களை ஏமாற்றத்தில் கொண்டு தள்ளிவிடும். போர்க்கால நடவடிக்கையாக இந்தக் கல்வியாண்டில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு வாங்குவதுடன், வரும் கல்வி ஆண்டு முதல் ‘நீட்’ தேர்வை எதிர்நோக்கும் நிலைக்கு மாணவர்களைத் தகுதி உள்ளவர்களாக்க வேண்டியது அரசின் கடமை. அரசுக்குத் தொலைநோக்குச் சிந்தனை வேண்டும். மாணவர்களையும் கல்வியையும் உதாசீனப்படுத்தாமல் அரசு செயல்பட வேண்டும்.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

இப்படிச் செய்யலாமே?

குடிமராமத்து சரியாக நடைபெறாததைச் சுட்டிக்காட்டி உள்ளார், டி.எல்.சஞ்சீவிகுமார் (உள்ளாட்சித் தொடர் - மார்ச் 30). சோமாலியாவில் ஆளாளுக்குக் கொள்ளையடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். அந்த நிலைதான் தமிழகத்தில் இன்று உள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநில விவசாயக் கூலித் தொழிலாளர்களின் உயிரைக் காத்த திட்டம். ஆனால், தமிழகத்தில் இத்திட்டத் தொழிலாளர்களில் சரிபாதி வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர்கள். வேலையும் கடினமாக இல்லை. இரண்டு மணி நேரம்கூட அவர்கள் வேலை செய்வதில்லை. கட்டுரையாளர் குறிப்பிட்டதுபோல ஆறு, குளங்கள், ஏரிகளை மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பணியாளர்களைக் கொண்டே தூர்வாரிவிடலாம். வேலையாட்கள் இல்லாமல் இயந்திரங்களைப் பயன்படுத்தி வேலை செய்யக்கூடாதே தவிர, அத்தனைத் தொழிலாளர்களோடு இயந்திரங்களையும் பயன்படுத்தி பணி செய்ய எந்தத் தடையும் இருக்க முடியாது.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x