Published : 30 Mar 2017 10:25 AM
Last Updated : 30 Mar 2017 10:25 AM

இப்படிக்கு இவர்கள்: சமுதாயப் புரட்சி!

மார்ச் 27 அன்று வெளியான ‘ஜோலார்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் இயற்கை முறையில் விவசாயம்’ என்ற செய்தியை வாசித்தேன். மாணவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, அவர்களை அதில் பங்கேற்கச் செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி பாராட்டுதலுக்குரியது. விவசாயம் செய்வோர் குறைந்துவரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு விவசாயக் களப்பணி அனுபவத்தையும், ஆர்வத்தையும் கொடுத்திருப்பது ஒரு சமுதாயப் புரட்சிதான்.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், ராசிபுரம்.



அசோகமித்திரனும் அங்கீகாரமும்

மாபெரும் எழுத்தாளரும் இறுதிவரையில் எழுத்தையே முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவருமான அசோகமித்திரனின் மறைவு, தமிழ் இலக்கிய உலகில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. தம் படைப்புகளில் நடுத்தர, எளிய மனிதர்களின் செயல்களை மையப்படுத்தி, அவர்களின் உணர்ச்சிகளை நேரடியாக வாசகர்களுக்குப் பரிமாற்றம் செய்யும் லாகவம் அவருக்கே உரித்தானது. வெற்றிபெற்ற மனிதர்களைவிட, வாழ்க்கையில் தோல்வியுற்று அதை மீட்க விரும்புகின்ற அவரது மாந்தர்களின் கதை, நம்பிக்கையூட்டும் எண்ணங்கள் கொண்டு ஏற்படுத்தப்படும் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுக்கிறது. அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கத் தவறியது தமிழ் மொழி வளர்ச்சிக்கு நாம் செய்த துரோகம்.

- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.



கல்விமுறையில் மாற்றம் தேவை!

அந்தக் காலப் பாடத்திட்டத்தில் புத்தக வாசிப்புக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து, ச.சீ.ராஜகோபாலன் எழுதியிருந்த கடிதம் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.

நான் மாணவியாக இருந்தபோது, எங்கள் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறிய அலமாரியில் கதைப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அந்தப் புத்தகங்களைக் கற்பனை வளத்தோடு படிக்கும்போது ஆர்வமாக இருக்கும். இன்றைய வகுப்பறைகளில் அவை இல்லை. குழந்தைகளை வாசிக்கச் சொல்லவும் ஆளில்லை. அதனால், குழந்தைகள் சிறுவயதிலிருந்தே வீடியோ கேம் விளையாடுகின்றனர். நம் கல்வி முறையிலேயே மாற்றம் தேவை.

- ஹர்ஷவர்த்தினி, திண்டுக்கல்.



தமிழைக் கொண்டாடுவோம்!

மார்ச் 27-ம் தேதி நாளிதழில், சிங்கப்பூர் தமிழ் திருவிழா ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ந்தேன். கூடவே, தமிழகத்தில் இப்படி தமிழுக்கு விழா எடுக்க ஆளில்லையே என்றும் வருந்தினேன். “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் எங்குமில்லை” என்று எட்டு மொழிகளை அறிந்த பாரதியார் பாடியிருக்கிறார். “சாவெனில் தமிழுக்காகச் சாக வேண்டும்; என் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்றார் பாரதிதாசன். இப்படித் தமிழைப் போற்றியவர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணில், தமிழுக்காக விழா இல்லையே? சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், உலகத் தமிழ்ச் சங்கம் கட்டப்பட்டுள்ளது. அங்கேனும் ஆண்டுதோறும் தமிழுக்கு விழா எடுக்க அரசு முன்வருமா?

- எஸ்.பரமசிவன், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x