Published : 05 Jul 2016 10:47 AM
Last Updated : 05 Jul 2016 10:47 AM
தேசிய கல்விக் கொள்கை வகுக்க, கருத்துரை வழங்க அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை நல்கியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை எவ்வித ஆய்வின் அடிப்படையிலும் அமையவில்லை என்று தோன்றுகிறது.
குறிப்பாக, தேர்ச்சிபெறாத மாணவரை அடுத்த ஆண்டும் அதே வகுப்பில் தக்கவைத்தல். நான் பணியாற்றிய பள்ளியில் ஐந்தாண்டுகளில் தக்க வைக்கப்பட்ட மாணவர்கள், அடுத்த ஆண்டில் முன்னேற்றம் கண்டுள்ளனரா என்று பார்த்தபோது பல உண்மைகள் வெளிப்பட்டன. தக்கவைக்கப்பட்டவர்களில் சரி பாதியினர் பள்ளியில் இருந்தே விலகினர். எஞ்சியவர்களிலும் ஓரிருவரைத் தவிர, மற்ற மாணவர் முந்தைய ஆண்டில் பெற்ற மதிப்பெண்களைவிடக் குறைவாகவே அடுத்த ஆண்டும் பெற்றனர்.
காரணம், இரண்டு ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவரை ஆசிரியர்கள் பார்க்கும் பார்வை.. அறிவிலிகள், உருப்படாதவன் போன்றே இருந்தது. அவர்களது தேர்ச்சிக்கு உதவுபவராக இல்லாதது பொதுவாகக் காணப்பட்டது. வயது வேறுபாடு காரணமாகப் பிற மாணவர்களில் பெரும்பாலானோர் தக்கவைக்கப்பட்ட மாணவரிடம் பழகத் தயங்கினர். தேர்ச்சிக்குரிய மதிப்பெண் 35-க்கும் குறைவாக இருந்தும், எல்லா நாட்களும் பள்ளிக்கு வந்த மாணவர் அந்த மதிப்பெண்ணைக்கூடப் பெற இயலவில்லையென்றால், பள்ளி அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கருதினேன்.
எனவே, மற்றொரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் முறை தவறிய ஒரு மாணவரை எங்கள் பள்ளியில் சேர்த்தேன். ஆனால், அந்த விவரத்தை யாருக்கும் ஆண்டு இறுதி வரை தெரிவிக்கவில்லை. அம்மாணவர் நல்ல மதிப்பெண்களோடு தேறி நடுவணரசுப் பணியில் சேர்ந்தார். முன்னரே தெரிவித்திருந்தால் மாணவரைச் சேர்ப்பதற்கே ஆசிரியர்கள் மறுத்திருப்பர். மேலும், வகுப்பறையில் முட்டாள் பட்டமும் கட்டியிருப்பர். ஆக, தக்கவைத்தல் மாணவர்களுக்கு நன்மை பயப்பதாக இருக்காது.
- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT