Published : 27 Feb 2017 09:53 AM
Last Updated : 27 Feb 2017 09:53 AM
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கோ.பழனிசாமி கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் ஒன்று, 500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படுவது தொடர்பானது. மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளும் எந்தக் கடையில் வியாபாரம் குறைவாக உள்ளது என அந்தந்த டாஸ்மாக் மாவட்ட அலுவலரிடம் கேட்டு, அவை மட்டுமே மூடப்படுகின்றன என்பதே யதர்த்த நடைமுறை. இப்படித்தான் சென்ற ஆண்டு ஜெயலலிதா உத்தரவிட்டார். நடந்தது என்ன? வியாபாரம் இல்லாத கடைகள் மட்டுமே மூடப்பட்டன - இது நேற்றைய வரலாறு. இன்று - ‘பள்ளி, கல்லூரி, வழிபாட்டுதலங்கள், பொதுமக்களுக்கு இடையூறாக அமைத்துள்ள கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து 500 கடைகள் மூடப்படும்’ என்று அரசாணை வெளியிட வேண்டும். முதல் கையெழுத்து மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும். மக்களை ஏமாற்றும் வேலையாக இருக்கக் கூடாது. செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா?
- எம்.கபார், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர், மதுக்கூர்.
தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு என்ன வழி?
‘அவகாசமே இல்லை… உடனே செயல்படுங்கள்!’ தலையங்கம் படித்தேன் (பிப்.21). கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாகத்தைத் தூக்கி நிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பு, புதிதாகப் பதவியேற்ற அமைச்சரவைக்கு உள்ளது. அதைவிட, தமிழகத்தில் ஏற்பட இருக்கும் தண்ணீர்த் தட்டுப்பாட்டினை எப்படி சரிசெய்யப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், பதவியேற்ற அமைச்சரவை சகாக்கள், குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டவரைச் சிறையில் சென்று பார்த்து ஆசிபெறுவதும், சட்டசபையில் பெரும்பான்மை பெற்றுவிட்ட அமைச்சரவை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அதனை முடக்க நினைப்பதும் தமிழகத்துக்கு ஒரு ஸ்திரமற்ற தன்மையை மேலும் நீட்டிக்கவே செய்யும்.
- வீ.சக்திவேல், கொடைக்கானல்.
தாமதமில்லா நீதி
மருதன் எழுதிய, ‘பிம்ப அரசியலிலிருந்து விடுபடவேண்டிய தருணம்’ (பிப்.21) கட்டுரை படித்தேன். தமிழக வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்திய இத்தீர்ப்பு, உரிய காலத்திலேயே கிடைத்திருந்தால் அண்ணா நூலகம், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றுக்குச் சிக்கல்கள் நேர்ந்திருக்காது. மேலும், அரசியல் சட்டத்தை நமக்கு வடிவமைத்துக் கொடுத்த தலைவர்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இப்போது அரசியலிலும், அரசுப் பதவிகளிலும் குற்றவாளிகள் நிரம்பிவருகிறார்கள். அவர்கள் மீதான வழக்குகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. உரிய நேரத்தில் நீதி கிடைத்தால், பல தவறுகளைத் தடுக்க முடியும் அல்லவா?
- பெருமாள் கிரிஜா, மின்னஞ்சல் வழியாக.
இதுதான் மக்களாட்சியா?
மீத்தேன் திட்டத்தைத் தமிழ்நாட்டின் தலையில் கட்டியது மத்திய அரசு. தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தினால் மீத்தேன் திட்டத்தை வாபஸ் வாங்கியதாகச் சொன்ன மத்திய அரசு, இப்போது அதே திட்டத்தை ‘ஹைட்ரோ கார்பன்’ என்று வேறு பெயரில் நிறைவேற்றத் துடிப்பது அதிர்ச்சி தருகிறது. மக்கள் எதிர்த்தால் என்ன, நாங்கள் நினைத்ததை நிறைவேற்றியே தீருவோம் என்பதற்குப் பெயர்தான் மக்களாட்சியா?
- நி.ஒஜிதுகான், முத்துப்பேட்டை,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT