Published : 17 Jan 2017 09:50 AM
Last Updated : 17 Jan 2017 09:50 AM
பொங்கல் விழா நடைபெறும் நேரத்தில், சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழா புத்தகப் பொங்கலாகவே தெரிகிறது. இந்நிகழ்வு, இளைய தலைமுறை வாசகர்களுக்கு உற்சாகத்தையும் தரமான நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தையும் தந்துள்ளது.
‘தி இந்து’வும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று, நல்ல நூல்கள் குறித்துப் பக்கம் பக்கமாய் எழுதுவதைக் காணும்போது மனநிறைவு ஏற்படுகிறது. நவீன இலக்கிய நூல்கள் அதிகமாய் புத்தகத் திருவிழாவில் கிடைக்கின்றன என்ற செய்தியும் கூடுதல் மகிழ்ச்சி தருகிறது. பண நெருக்கடியால் முந்தைய ஆண்டுகளைவிட விற்பனை சற்றுக் குறைவதாகச் செய்திகள் வருகின்றன. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு, நூல்கள் வாங்கக் கல்லூரிகளுக்குத் தரும் தொகையைக் கொண்டு, தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளின் நூலகங்களுக்கு இந்த நேரத்தில் நூல்கள் வாங்கினால், அது பதிப்பாளர்களுக்குப் பேருதவியாய் அமையும்.
அதுமட்டுமல்லாமல், அடுக்ககங்களில் குடியிருக்கும் மக்கள் இணைந்து நூல்கள் வாங்கி, சிறுவர் நூலகங்களை அந்தப் பகுதியில் உருவாக்கலாம். புத்தகத் திருவிழாவில் சிறந்த படைப்பாளர்களுக்குப் பரிசுகள் தருவதுபோல் அதிகமாய் நூல்களை வாங்கிய கல்லூரிக்கு அல்லது தனி மனிதர்களுக்குச் சிறப்பு விருதுகளை வழங்கிப் பாராட்டலாம். எந்த அரங்கில், எந்தெந்த நூல்கள் கிடைக்கின்றன என்ற செய்தியை புத்தகத் திருவிழா இணையதளத்தில் வெளிட்டால், அலைந்து திரிவது மிச்சமாகும். மிகப்பெரிய முயற்சியை முன்னெடுத்துள்ள அமைப்பாளர்களை நம் வருகையால் பாராட்டலாம்.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
ஸ்டாலின் செய்ய வேண்டியவை
ஸ்டாலின் செயல் தலைவராக ஆகி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் மதிக்கத்தக்க நல்ல தலைவராகத் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். மொழி வெறி, இன வெறி யூட்டும் செயல்களைச் செய்யாமல் இருக்க வேண்டும். ‘கடமை, கண்ணி யம், கட்டுப்பாடு’ செயலிலும் இருக்க வேண்டும். மக்கள் எந்த மதமோ, வகுப்போ, அதை அவர்கள் பின்பற்றட்டும். அவற்றில் தலையிட வேண்டாம். தமிழகம், அனைத்துத் தரப்புச் சாதியினரும் பங்குகொண்டு பாடுபட்டு உருவாக்கியது.
ஒரு தரப்புக்கு மட்டுமே சொந்தமோ, உரிமையோ கிடையாது. அரசு சார்ந்த அலுவலர்கள், மக்களுக்கு உதவும் கரங்களாக, லஞ்ச லாவண்யம் இல்லாமல் பொறுப்புடன் செயல்பட வைக்க வேண்டும். வியக்கத்தக்க முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ ஆவன செய்ய வேண்டும். பிறகு, தளபதியை மிஞ்சக்கூடிய தலைவர் எவரும் இருக்க முடியுமா என்ன?
- வி.ராமசாமி, மின்னஞ்சல் வழியாக…
நாம் மண்புழுவா, வெட்டுக்கிளியா?
டெல்டா விவசாயியின் வியர்வையில் விளைந்த அரிசிச் சோற்றை உண்டவன் என்ற நன்றிக் கடனோடும் கண்ணீரோடும் இதை எழுதுகிறேன். யானை கட்டிப் போரடித்த தஞ்சைத் தரணியிலே இன்று தண்ணியில்லே. ஊரெல்லாம் உலை வைத்துப் பொங்கல் வைக்க உழைத்த உழவனிடம் இப்போ உசிரில்லே. கழனியெல்லாம் பண்படுத்தி கதிர் விளைத்த கைகளிலே ஒண்ணுமில்லே.
வயலே வாழ்க்கை, வரப்பே படுக்கை என்று வாழ்ந்தவன் வீழ்ந்துவிட்டான். எலியை வாயில் கவ்விக்கொண்டு போராடுகிற விவசாயியைப் பார்த்து லேசாக இரக்கப்பட்டுவிட்டு, நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விவசாயம் தழைக்க வேண்டும். விவசாயி பிழைக்க வேண்டும். அதற்கு நம்மால் ஆனதைச் செய்ய வேண்டாமா? மண்புழு உழவனின் நண்பன். பயிர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மண்ணைவிட்டு நீங்காது. வெட்டுக்கிளி உழவனின் எதிரி. பயிர் கருகிவிட்டால் பறந்துவிடும். நாம்..?
- ஸ்ரீதர், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT