Published : 08 Jun 2017 09:49 AM
Last Updated : 08 Jun 2017 09:49 AM
ஜூன் 6 அன்று வெளியான, ‘மாட்டிறைச்சி தடை விவகாரம்: மேகாலயாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் ராஜினாமா’ செய்தியை வாசித்தேன். சில நாட்களுக்கு முன்னர்தான் மேகாலயா மாநிலத்தின் மேற்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைவர் பெர்னார்ட் மார்க் மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது வடக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவர் பச்சு மராக்டோனும் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கட்சி வேறு, கலாச்சாரம், பாரம்பரியம் வேறு. மேகாலயா போல் கேரளா, கர்நாடகா, தமிழகம் போன்ற தென்மாநில பாஜகவினர் இதைக் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை. பாஜகவின் உத்தரவை விருப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டால், தேர்தல் காலத்தில் பின்விளைவுகளை இவர்களே எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
-முத்துச்சாமி, திருச்சி.
அரசு கையில் எடுக்குமா?
சேகர் குப்தா எழுதிய ‘கிரிக்கெட் அதிகாரம்: தெளியவிடாத போதை!’ (ஜூன் 6) கட்டுரை வாசித்தேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) பிரச்சினையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு தலையிட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அறுவைச் சிகிச்சை மேஜையில் உடலை வெட்டித் திறந்து போட்டுவிட்டு, பிறகு என்ன செய்வது என்று புரியாமல், கிடத்தப்பட்ட நோயாளி போல இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திணறுகிறது என்று கட்டுரையாளர் கூறியி ருப்பது மிகச் சரி. லாபம், அதிகார மிடுக்கு போன்றவற்றையே இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகிகள் இந்த வாரியத்தைச் சீரமைக்க விடவே மாட் டார்கள். மற்ற விளையாட்டுக்களைப்போல, கிரிக்கெட் வாரியத்தையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.
-முரளிதரன், ராஜபாளையம்.
இதுதான் அரசியல் நாகரிகமா?
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை அக்கட்சி, ஒரு அரசியல் அணிக்கான விழாவாக நடத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது வைரவிழா அல்ல. வயதானோருக்கான விழா என்றும், அரசியலில் ஓரங்கட்டப்பட்டவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட விழா என்றும், மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோற்றுப்போன விழா என்றும் அடுக்கடுக்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி யுள்ளார். விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதில் அரசியல் நாகரிகம் பேணப்பட வேண்டும். பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பெரும்பாலும் தரம்தாழ்ந்து யாரையும் விமர்சிப்பது கிடையாது. தங்கள் கட்சியிலேயே இருக்கும் இதுபோன்றவர்களைப் பின்பற்றுவதுதான் பொன் ராதாகிருஷ்ணனுக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
-அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.
சிறந்த ஆசிரியர்
ஜூன் 5 அன்று வெளியான ‘அரசுப் பள்ளி மாணவிகளை ஊக்குவிக்க விடு முறை ஊதியத்தைச் செலவிடும் ஆசி ரியர்’ செய்தியைப் படித்தேன். போட்டித் தேர்வுகளுக்கு மிக முக்கியமானதாகத் திகழும் சமூக அறிவியல் பாடத்தைப் பற்றிய புரிதலை மாணவிக ளிடையே ஏற்படுத்தவும், இப்பள்ளியை நாடி வரும் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாண விகளுக்கு உதவிடும் வகையிலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் பெறும் மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கிவரும் ஆசிரியர் பொன்.தங்கராஜ் பாராட்டுக்குரியவர்.
“மாணவப் பருவத்தில் நான் சந்தித்த வறுமையின் தாக்கமே இதற்குக் காரணம்’’ என்று கூறும் அவருக்கு 49 வயதில்தான் ஆசிரியர் பணியே கிடைத்திருக்கிறது. இவரைப் போல ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆசிரியர் இருந்தால், அவர்களது தன்னலமற்ற முயற்சிக்கு மிகப் பெரிய அளவில் பலன் கிடைக்கும். அவர்களிடம் உதவிபெற்ற பிள்ளைகள் அனைவரும், அதேபோல மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையுடன் வளர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
- ஜார்ஜ், இணைய தளம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT