Published : 10 Apr 2017 10:14 AM
Last Updated : 10 Apr 2017 10:14 AM
ஏப்ரல் 7 அன்று வெளியான, ‘அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?’ கட்டுரையில், ‘நிலத்தை விற்றுவிடலாம். அடுத்து பிழைப்புக்கு என்ன செய்வது? தெரியாது. எந்த நகரத்துக்குச் செல்வது, திரும்பவும் எப்போது ஊர் திரும்புவது? தெரியாது - இப்படி நூற்றுக்கணக்கான பதிலற்ற கேள்விகளின் வெளிப்பாடு ஒரு விவசாயியின் போராட்டம் என்ற வரிகளைப் படித்தபோது, வழிந்தோடியது கண்ணீர். கொளுத்தும் கோடை வெயிலில், தலைநகர் டெல்லியில் அரசின் கவன ஈர்ப்புக்காக அய்யாக்கண்ணு என்ற முதுகிழவன் நடத்தும் போராட்டம் பலருக்கும் நகைப்பாகத் தெரிகிறது.
சுமார் ஒரு மாத காலமாகப் போராடும் அய்யாக்கண்ணு குழுவினரின் கோரிக்கைகளை அதிகார மையம் செவிமடுத்துக் கேட்கவோ, கண்கொண்டு பார்க்கவோ தயாராக இல்லை. இது, அய்யாக்கண்ணு என்ற ஒற்றை மனிதரின் தேவைக்கான போராட்டக் களம் அல்ல. இப்போராட்டத்தை அவர் முன்னெடுத்துச் செல்கிறார். அய்யாக்கண்ணுவைக் கேலி பேசுவதும், பழி சுமத்துவதும் ஒட்டுமொத்த விவசாயிகளையும் கேவலப்படுத்துவதற்குச் சமம். விவசாய இனத்தை இந்தியாவிலிருந்தே அழிப்பதுதான் அரசுகளின் பிரதான நோக்கம் என்றால், அழித்துவிட்டுப் பின்னர், சோற்றுக்கு என்ன செய்வீர்கள்?
- பழ.அசோக்குமார், புதுக்கோட்டை.
வரிச் சலுகை தேவையா?
ஏப்ரல் 4 அன்று வெளியான, பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தியின் ‘வறட்சியிலும் தேவையா வரிச் சலுகை?’ கட்டுரை மிகவும் பாராட்டுக்குரியது. பொதுவாக ஒரு கட்டுரை, அரசு சார்ந்தோ அரசியல் சார்ந்தோ இருப்பின் குற்றம் காண்பதே குறிக்கோளாக இருக்கும். இங்கு அவ்வாறில்லாமல், அரசின் தவறை கூறியதோடு செய்ய வேண்டிய பணிகளை, தவிர்க்க வேண்டிய சலுகைகளைக் குறிப்பிட்டுள்ளது வரவேற்புக்குரியது. போர்க்கால நடவடிக்கையில், மாநில அரசு செய்ய வேண்டியதை யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய வகையில் தெளிவாக தெரிவிக்கிறது கட்டுரை.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
எது மக்கள் அதிகாரம்?
ஏப்ரல் 4 அன்று வெளியான சோ.தர்மனின் கட்டுரையில் சொல்லப்படுவது நூற்றுக்கு நூறு உண்மை. 1950-கள் வரை கிராமங்கள் தன்னைத்தானே பராமரித்துக்கொண்டன. ஊர் மக்கள் தமது தேவைகளைக் கூட்டாக நிறைவேற்றினார்கள். எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் கண்மாய் நீர்தான் குடிநீர். கோடையில் முறை தவறாமல் தூர்வாருதல் நடக்கும். வீட்டுக்கு ஒரு ஆள் வர வேண்டும். வேலைசெய்ய இயலாதவர்கள் ஒரு கூலியாள் ஏற்பாடு செய்வார்கள். அரசின் நிதி ஒரு பைசா செலவில்லாமல் இரண்டு நாளில் தூர்வாரி முடித்தார்கள். இதுபோல் வீட்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் உழைப்புச் செலுத்தி, சரள் அடித்து, ஊரைச் சுற்றிச் சாலை அமைத்துத் தந்ததையும் சிறு வயதில் கண்டுள்ளேன்.
இப்போது கண்மாய் பராமரிப்பு என்றால் பொதுப்பணித் துறை; சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை என்று ஒவ்வொரு துறையும் ஊடே புகுந்ததால், ஊழல் புகுந்து நிலையாய் நிற்கிறது. 1960-களின் தொடக்கத்திலிருந்து அரசு இயந்திரத்தின் வலுவான ‘ஆக்டோபஸ் கரங்கள்’ அனைத்தையும் வளைத்துக்கொண்டன. எல்லாவற்றையும் தூக்கித் தன் கையில் அரசு வைத்துக்கொள்வது ஆங்கிலேயன் நமக்கு விட்டுச் சென்ற நிர்வாக முறை. மக்களுக்கானதை மக்களே நிறைவேற்றிக்கொள்ள அதிகாரம் அளிப்பதுதான், உண்மையான மக்கள் அதிகாரம்!
- பா.செயப்பிரகாசம், எழுத்தாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT