Published : 15 May 2017 10:39 AM
Last Updated : 15 May 2017 10:39 AM
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘தி இந்து’வில் ‘என் கல்வி, என் உரிமை!’ தொடர் வெளிவந்த தருணத்தில், என்னுடைய பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தது குறித்து எழுதியிருந்தேன். அரசு ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் தங்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் மட்டுமே, அரசுப் பள்ளிகள் மீதான கவனிப்பையும் தரத்தையும் உயர்த்த முடியும் என்பதை உணர்ந்த தருணம் அது. அந்த முடிவைப் பிள்ளைகளும் விரும்பி ஏற்றார்கள். இப்போது மகள்கள் இருவரும் +2 தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் இரு இடங்களில் தேறியிருக்கிறார்கள்.
தனியார் பள்ளியில் படித்திருந்தால் இதைக் காட்டிலும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள் என்று சொல்ல ஏதுமே இல்லை. அரசுப் பள்ளியில் சேர்த்ததால், எங்களுடைய பிள்ளைகள் எங்கள் அருகிலேயே இருந்தார்கள். வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டார்கள். தொலைக்காட்சி கூடாது, பத்திரிகைகள் கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளை அவர்கள் சந்திக்கவில்லை. பாடப்புத்தகங்கள் வாசித்தபோது ஏற்பட்ட மன இறுக்கத்தைக் களைய, அவர்கள் விரும்பும் இலக்கியப் புத்தகங்களையும் படித்தார்கள்.
பன்னிரண்டாம் வகுப்புக்கான மன அழுத்தங்கள் ஏதுமின்றி இயல்பான சூழலில் தேர்வை எதிர்கொண்டார்கள். அரசுப் பள்ளி எவ்வளவு சுதந்திரத்தைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கின்றன என்பதை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்களே பேசினார்கள். கல்வித் துறை வணிகத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றால், அரசுப் பள்ளிகள் மீட்சி பெற வேண்டும். அதற்குக் குறைகளை.. தவறுகளைத் தட்டிக்கேட்கும் அல்லது போக்கும் நிலையில் உள்ளவர்கள் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் - குறிப்பாக அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும். இதை இனி ஊரெல்லாம் பேசுவேன். தார்மிகரீதியிலான பலத்துடன்!
- அ.வெண்ணிலா, கவிஞர் - அரசுப் பள்ளி ஆசிரியர், வந்தவாசி.
வணிகப் பெயருக்குத் தடை
மே 4-ல் வெளியான, ‘ஜெனரிக் யுத்தம்’ எனும் மருந்து குறித்த விழிப்புணர்வு கட்டுரை அருமை. ‘டாக்டர் சீட்டில் குறிப்பிட்டுள்ள மருந்து இல்லை. அதேவகையான மருந்துதான் இது’ என்று மருந்துக் கடைக்காரர் குறிப்பிடுவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் லாப நோக்கத்தை. மத்திய அரசின் ‘பீரோ ஆஃப் பார்மா’ அமைப்பு ஜெனரிக் மருந்துக் கடை திறக்க உரிமம் வழங்கி, 2.50 லட்சம் மானியமும் அளிக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அண்டை மாநிலமான கேரளத்தில் 50-க்கும் மேற்பட்ட ஜெனரிக் மருந்துக் கடைகள் உள்ளன. தமிழகத்திலும் உருவாக்கப்பட வேண்டும். இந்தியர்கள் மருத்துவத்துக்கு செலவிடும் தொகை அதிகம். எனவே, மருந்தில் சரியான எம்.ஆர்.பி. விலை குறிப்பிட வேண்டும். மருத்துவர்கள் மருந்துகளின் வணிகப் பெயரை எழுதாமல், மருந்தின் மூலக்கூறு பெயரை எழுத வேண்டும் என்ற விதியைச் சட்டமாக மாற்ற வேண்டும்.
- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT