Published : 19 Jun 2017 10:03 AM
Last Updated : 19 Jun 2017 10:03 AM
செல்வ. புவியரசன் எழுதிய, ‘எழுவர் விடுதலை: நடப்பது ஜெயலலிதா ஆட்சியா.. இல்லையா?’ (ஜூன்.15) என்ற கட்டுரை வாசித்தேன். நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. ஏனென்றால், ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது, ‘நீட்’ எதிர்ப்பு, ஜி.எஸ்.டி. எதிர்ப்பு, மாநில உரிமை எனப் பல வகைக்கும் குரல்கொடுத்தவர். அதில் ஒன்றுதான் எழுவர் விடுதலையும். அவர் எதிர்த்த திட்டங்கள் எல்லாம் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு உகந்தவை ஆகிவிட்டன. நிறைவேறிக்கொண்டிருக்கின்றன. கொள்கையில் உறுதியிருந்தால்தான் எதையும் நிறைவேற்ற முடியும். ஆட்சியைத் தக்கவைப்பதே குறி என்றிருப்பவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.
- மு.முபீன், சென்னை.
ஆண்டவனுக்கே வெளிச்சம்!
திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கும், நவக்கிரகப் பரிகார தலத் திருக்கோயிலுக்கும் (சந்திரன்) சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு என்ற செய்தியைப் படித்ததும் திகைப்பு ஏற்பட்டது. ஒரு ஊரிலுள்ள கோயிலில் மட்டுமே ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது என்றால், தமிழ்நாட்டிலுள்ள சிறியதும் பெரியதுமான பல கோயில்களின் சொத்துகள் பல ஆயிரம் கோடியைத் தாண்டுமே. இந்து சமய அறநிலையத் துறை, தன்வசம் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சொந்தமாக உள்ள நிலங்களின் மதிப்பு விவரங்களை வெளிப்படையாகத் தெரிவித்தால், ஏராளமான நிலங்கள் மீட்கப்படலாம். இன்னும் கோயில் சொத்துகள் எங்கே.. எவரிடம் உள்ளதோ? எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.
ஆக்கபூர்வமான பங்களிப்பு
கல்விப் புலம் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் படைப்புத் தளத்திலும் ஆய்வுத் தளத்திலும் ஒருசேர இயங்குகிற வாய்ப்பைப் பெற்றவர்கள் என்ற செய்தியை பாரதிபுத்திரன் என்கிற பாலுசாமியின் படைப்புப் பின்னணியோடு, கட்டுரையாளர் சாம்ராஜ், கலைஞாயிறு (ஜூன் 18) கட்டுரையில் அழகாக விளக்கியிருந்தார். கட்டுரையாளர் எடுத்துக்காட்டியிருக்கும் இரு கவிதைகளும் அவரது மென்மையான கவிபுனையும் ஆற்றலுக்குச் சான்றாக அமைவன.
மீரா போல, பாலா போல, கவிக்கோ போல, சிற்பி போல மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்ததோடு கவிதைத் துறையிலும் ஆய்வுத் துறையிலும் ஒருசேர பங்களிப்புகளைத் தந்து நீங்கா இடம்பெற்றது போல பாரதிபுத்திரன் போன்றோர் கலை இலக்கியத் துறைகளில் செலுத்திவரும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பார்க்கும்போது தம்பிகள் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யலாம் என்று எழுதத் தோன்றுகிறது.
- செளந்தர மகாதேவன், திருநெல்வேலி.
சின்னமா.. மக்களா?
இந்திய தேசிய காங்கிரஸின் பழைய சின்னம், ‘நுகத்தடி பூட்டிய இரட்டைக் காளை மாடுகள்’. இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு சிண்டிகேட், இண்டிகேட் காங்கிரஸ் உருவானபோது, இருவரும் காங்கிரஸின் சின்னத்தைக் கோரினார்கள். தேர்தல் ஆணையம் அவர்களுக்கு முறையே ராட்டை சுற்றும் பெண் மற்றும் பசுவும் கன்றும் சின்னங்களை வழங்கின.
மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இரட்டை இலைக்கும் இதுபோன்ற சோதனை ஏற்பட்டு இரட்டைப் புறா, சேவல் சின்னங்கள் உருவானதும், பிறகு சின்னம் மீட்கப்பட்டதும் வரலாறு. மக்களின் ஏகோபித்த ஆதரவு வரும் தேர்தலில் தெரியவரும். வெல்லும் அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கிடலாம். ஒரு கட்சியின் உள்பிரச்சினைக்காக உள்ளாட்சித் தேர்தலையும், இடைத்தேர்தலையும் தள்ளிவைப்பது நியாயமற்றது.
- எஸ்.மாணிக்கம், மின்னஞ்சல் வழியாக
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT