Published : 29 Mar 2017 10:43 AM
Last Updated : 29 Mar 2017 10:43 AM

இப்படிக்கு இவர்கள்: ஊர் கூடித் தேரிழுப்போம்!

டி.எல்.சஞ்சீவிகுமார், உள்ளாட்சி பற்றிய தொடரில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும் எழுதிவருகிறார். இத்திட்டம் துவங்கிய 2006-07 காலகட்டத்தில், உயர் தொழில்நுட்பம் வளராததால், பயனாளிகளுக்கு ஊதியம் ரொக்கமாக வழங்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் சிலர் அதில் தவறு புரிந்தனர். ஆனால், 2012 முதல் மின்னணுப் பரிமாற்றம் மூலம் பயனாளிகளின் கணக்குக்கே ஊதியம் ஈடுசெய்யப்படுவதால் தவறுகள் குறைந்தன. நடைபெறும் பணிகள் தரமற்று இருப்பதற்குக் காரணம், அரசும் உயர் அலுவலர்களுமே. இத்திட்டத்தை இலக்கு சாராமல் அளவுப்படி ஊதியம் என்பதில் அரசும் உயர் அலுவலர்களும் கறாராக இருந்தால், ஓரளவுக்காவது நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பயனுடைய திட்டமாகத் திகழும். ஆட்சியாளர்கள், உயர் அலுவலர்கள், பயனாளிகள் என ஊர் கூடித் தேரிழுத்தால் மட்டுமே இத்திட்டம் லட்சியத்தை நோக்கி நகரும்.

- ந.சேகர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், பெரணமல்லூர்.



அரசியலின் எதிர்காலம்?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வழக்கமான ஒன்றாக இல்லாமல், தமிழக அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும்’ என்று கே.கே.மகேஷ் எழுதியிருப்பது (மார்ச் 23) முற்றிலும் உண்மை. 70-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருந்தாலும் போட்டி, பிளவுபட்ட அதிமுகவுக்கும் திமுகவுக்கும்தான். ஏனையோர் போட்டியிடுவதெல்லாம் ஏனோதானோ வகை. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இந்தத் தேர்தலில் பலமான வேட்பாளரை நிறுத்தாமல், கட்சியில் அதிகம் அறியப்படாத சாதாரணமான ஒருவரை நிறுத்தியிருப்பதற்கான காரணங்களை மிகச் சரியாக அலசியிருக்கிறார், கட்டுரையாளர். ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டாலும், முடிவுகள் அவ்வளவு எளிதாக ஊகிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றன.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.



வேகத்தடை விபத்துகள்

மார்ச் 20-ல் வெளியான, ‘எதையும் பரபரப்பாக்க விரும்பும் உளவியல்’ கட்டுரை, விபத்துகள் குறித்த நல்ல பார்வை. இன்னொரு விஷயத்தையும் நாம் பேசியாக வேண்டும். எல்லா இடங்களிலும் 24 மணி நேரமும் வேகத்தடைகள் தேவைப்படுவது இல்லை. முக்கிய சாலைகளில், வேகத்தடை தேவையில்லாத நடு இரவு இரண்டு மணிக்குக் கோர விபத்தை எதிர்கொள்கிறோம். எனவே, தேவைப்படும் நேரங்களில் மட்டும் தற்காலிக வேகத் தடைகளை நிறுவுவது பற்றிப் பரிசீலிக்கலாம்.

- ராமச்சந்திரன், திருச்சி.



அரசு செய்ய வேண்டியது

கிணற்றுத் தண்ணீரைக் கையால் அள்ளிய காலம் போய், மோட்டாரால் உறிஞ்சக்கூடத் தண்ணீர் இல்லாமல் போனதற்கு, எண்ணற்ற ஆழ்துளைக் கிணறுகளும், விவசாயத்துக்கு வெள்ள நீர்ப்பாய்ச்சு முறையைப் பயன்படுத்தியது போன்றவையும் ஒரு காரணம். ‘பயிர்வாரிச் சாகுபடி முறையை விவசாயிகள் யோசிக்க வேண்டும்’ கட்டுரையில் (மார்ச் 22) குறிப்பிட்டுள்ளதுபோல கேழ்வரகு போன்ற பயிர்களைப் பயிரிட வேண்டுமெனில்… நெல், கரும்புக்கு வழங்குவதுபோல கேழ்வரகுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு வழங்க வேண்டும். சம்பா குறுவை இடுவதற்கு முன்பே அரசின் அறிவுரை முகாம்களைக் கிராமங்கள்தோறும் நடத்த வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்புப் பாசனம் போன்ற தண்ணீர் சிக்கன நடவடிக்கைகளை விவசாயிகளிடத்தில் கொண்டுசெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

- மா.சிவகுரு பிரபாகரன், பட்டுக்கோட்டை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x