Published : 31 Aug 2016 03:57 PM
Last Updated : 31 Aug 2016 03:57 PM

இரங்கும் குணம் இருக்குமா?

தனியார் கல்வி நிறுவனங்களின் அத்தியாவசியத்தை >ஜி.விசுவநாதன் வலியுறுத்தியிருப்பதில் வியப்பில்லை. தமிழகத்தில் மிகச் சில தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்களே சமூக நோக்கோடு செயல்படுகின்றன. மற்றவற்றில் ‘வசதியுள்ள’ மாணவர்கள் மட்டுமே சேர முடிவதால், அவர்களைவிட திறமையிருந்தும் வறுமை காரணமாகப் பலர் கல்வி மறுப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும் பணம் கொடுத்துப் பட்டம் பெறுவோர் அதனை முதலீடாகவே கருதி அந்த முதலீட்டினை மீட்கும் வகையில் தான் செயலாற்றுவார்கள். சாதாரண மக்கள் கசக்கிப் பிழியப்படுவார்கள். மருத்துவம் என்பது எட்டாக்கனியாகும். தனியார் கல்லூரியில் நிறைய செலவழித்து ஆசிரியர் பட்டம்பெற்றவர்களிடம், எளிமை கண்டு இரங்கும் குணம் இருக்குமா?

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

*

விட்டதைப் பிடிக்கும் கல்வி!

தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு நிர்ணயிக்கும் தொகைக்கு ரசீது அளிக்கப்படுவதையும் மீதித்தொகை கருப்புப்பணமாக மாறிவிடும் என்பதையும் ஒப்புக்கொள்ளும் ஜி.விஸ்வநாதனின் பேட்டியில், இந்த நாடே லஞ்ச, லாவண்ய நாடாக இருக்கிற போது நாங்கள் மட்டும் ஏன் சமூக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிற தொனி வெளிப்படுகிறது.

விட்டதைப் பிடிப்பதற்காக அவர்கள் லஞ்ச லாவண்யத்தை நாடும் நிலையையும் இந்தக்கல்வி முறை உருவாக்கும். இதைப்பற்றிய அக்கறை எல்லாம் அந்தக் கல்வியாளருக்கு இல்லையே என்று வேதனையாக உள்ளது.

- எஸ்.துரைசிங், திண்டுக்கல், உங்கள் குரல் வழியாக.

*

தகுந்த மருந்து

புதிய கல்விக் கொள்கை பல்வேறு விவாதங்களையும், குழப்பங்களையும் உருவாக்கியுள்ள நிலையில், கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனின் நேர்காணல் தகுந்த நேரத்தில் தரப்பட்ட மருந்தாக இருந்தது.

உலகமயமான சூழலில், கல்வி எப்படிப்பட்ட வியாபாரப் பண்டமாய் மாறியிருக்கிறது என்பதையும், கல்வித் துறை அதிகாரிகளின் பொறுப்பற்றதனத்தையும் எடுத்துரைப்பதாக இருந்தது. சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்துக்குத் தூண்டுகோலாக இருக்க முடியும் என்பது சத்திய வார்த்தையாக ஒலிக்கிறது.

- ச.பூபதி நரேந்திரன், சென்னை.

*

ராஜகோபாலனின் பேட்டி, மொத்தப் பிரச்சினையையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொன்னதோடு, அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாகவும் இருந்தது. ஒரு கல்வியாளரின் நேர்கொண்ட பார்வை, ஆதங்கம், தீர்வு அனைத்தும் அற்புதம்.

- ஆர்.சனாபதி, மின்னஞ்சல் வழியாக.

*

கட்டுப்படியான விலை

சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தல் பற்றித் திட்டமிடும்போது, விவசாய நிலங்களையும் கணக்கில் கொள்வது நல்லது. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி, விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுக்கு மேல் 50% நிர்ணயிக் கப்பட வேண்டியது குறித்தும் கவனத் தில் கொள்ள வேண்டும். விவசாயம் கட்டுப்படி ஆகாததால் விளைநிலங் களில் சீமைக் கருவேல மரங்கள் வளர விட்டு விடுகின்றனர் விவசாயிகள்.

- ம.கதிரேசன், மதுரை.

*

பின்னியை சங்கம் மூடியதா?

மெட்ராஸ் தொடரில் பின்னி ஆலை மூடப்பட்டதற்குத் தொழிற்சங்கப் போராட்டமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளது உண்மைக்கு மாறான தகவல். ஆலை மூடப்பட்டது 1991-க்கு பிறகுதான். பின்னி ஆலையை ஒரு குடும்பத்தினர் வாங்கி, ஆலை நிலங்களை மனைகளாக்கி விற்றால் கோடிகோடியாகப் பணம் அள்ளலாமே என்று திட்டமிட்டார்கள். அன்றைய தமிழக அரசும் அதற்கு உடந்தையாக இருந்ததால்தான் ஆலை மூடப்பட்டதே தவிரத் தொழிற்சங்கப் போராட்டம் காரணமல்ல.

- எஸ். காசிநாதன், கொடுங்கையூர், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x