மே -12 அன்று வெளியான, ‘ஏமாற்றம் தரும் எய்ட்ஸ் மசோதா’ தலையங்கம் படித்தேன். நம் நாட்டில் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ள சூழலில், இம்முறை எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான நிதி ஒதுக்கீடு 30% வரை அதாவது ரூ.1,300 கோடி குறைத்துள்ளது மத்திய அரசு. இத்தனைக்கும் எச்.ஐ.வி. மற்றும் காச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் நாம் முன்னணியில் இருக்கிறோம். மத்திய அரசு செயல்படுத்திவரும் தாராளமயக் கொள்கையால் இந்தியா பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவருகிறது.
உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கான மருந்தின் விலை ஒரே வருடத்தில் 2,000 டாலர்கள் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இந்நிலையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் எச்.ஐ.வி.- எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் மசோதாவில் எய்ட்ஸ் நோயாளிகள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெரும் உரிமையை உறுதிப்படுத்தவில்லை என்பதுடன், அந்நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதைப் படிப்படியாகக் கைவிடும் அபாயமும் உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவை என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.
- மா.சேரலாதன், மாநிலச் செயலாளர், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம்.
உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?
கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய, ‘அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும்’ என்னும் கடிதம் காலத் தேவையை உணர்ந்து சரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மட்டுமின்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. அநேக நடுத்தரக் குடும்பங்கள் கந்துவட்டிக் கொடுமையில் சிக்கிச் சீரழிவதற்கு தனியார் மற்றும் ஆங்கிலவழிக் கற்றல் மோகமே முதன்மைக் காரணம். ‘என்ன ஓட்டல் முதலாளி.. உங்க கடை சாப்பாடு நல்லா இருக்காதுன்னு பக்கத்துக் கடைக்கு பார்சல் வாங்கப் போறீங்களா?’ என்பது மாதிரியான நகைச்சுவையாக, ‘உங்க கற்பிப்பு மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லாமத்தானே தனியார் பள்ளிக்கு அனுப்பறீங்க..’ என்று கேட்கும் தருணம் வந்தேவிட்டது.
- க.குமாரகுரு, மயிலாடுதுறை.
அப்பா ...
மே -13 அன்று வெளியான, பிரபஞ்சனின் ‘அப்பா என்றொரு மனிதர்’ என்ற கட்டுரை வாசித்தேன். நினைத்தாலே நெஞ்சம் சிலிர்க்கின்றது; கண்கள் பனிக்கின்றன - அந்த உறவை நினைக்கும்போது. இந்த இயந்திர உலகில் ஒவ்வொரு அடியையும் மிகக் கவனமாக மிகுந்த மன அழுத்தத்துடன் எடுத்து வைக்கும்போதெல்லாம் நம்மைக் கவலையற்றுக் கரம்பிடித்து அழைத்துச்சென்ற அந்த உறவின் நினைவுகள் கண்ணீராய்க் கரைகின்றன. இனிய வார்த்தைகளாலேயே இவ்வுலகை அடிபணிய வைக்கலாம் என்பதைப் புரியவைத்ததும் அப்பா என்ற அந்த உறவுதான். நாம் தீங்கு செய்யாதவரை நம்மை தீங்கு நெருங்காது என வாழ்ந்து காட்டியதும் அதே உறவுதான். காலம் எல்லா மனத் துயரையும் ஆற்றிவிடும் என்று சொல்வார்கள். ஆனால், காலத்தாலும் நிரப்ப முடியாத இடம், ஒரு தந்தை விட்டுச்சென்ற வெற்றிடம்தான்.
- ஜே.லூர்து, மதுரை.
பஞ்சம் கற்றுத் தரும் பாடம்!
அ.நாராயணமூர்த்தி எழுதிய, ‘தண்ணீர் பஞ்சத்தைத் தவிர்க்க முடியாதா?’ கட்டுரை, தண்ணீர் பஞ்சத்துக்கான தீர்வுகளை முன் வைக்கிறது. நகர்மயமாதலும், தொழிற்சாலை அதிகரித்தலும் தண்ணீர் பஞ்சத்துக்கான காரணங்களில் அடங்கும். தண்ணீர் வணிக மயமாவதைத் தடுக்க வேண்டும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கட்டிடம் அமைக்கத் தடை விதிக்கலாம். தண்ணீரை மாசுபடுத்தாமல் பொதுச்சொத்தாகப் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.
WRITE A COMMENT