Published : 05 Apr 2017 10:09 AM
Last Updated : 05 Apr 2017 10:09 AM

இப்படிக்கு இவர்கள்: வரவேற்கப்பட வேண்டிய வரலாற்று நிகழ்வு!

சாலையோர மதுக் கடைகளை மூடுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 3,316 மதுக் கடைகள் மூடப்பட்டன (ஏப்.2) என்ற செய்தியை வாசித்து மகிழ்ந்தேன். இந்த உத்தரவால் விபத்துகள் குறையும், குடிப் பழக்கத்திலிருந்து கணிசமானோர் விடுபடுவர், ஏழை எளிய குடும்பங்கள் வறுமையிலிருந்து மீளும். கும்பகோணத்திலும், அப்துல் கலாம் பிறந்த ராமேஸ்வரத்திலும் அனைத்து மதுக் கடைகளும் மூடப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வு. ‘கள்ளுண்பவர், அறிவு மங்குவதால் நஞ்சு உண்பாரோடு ஒப்பர்’ என்றார் திருவள்ளுவர். அவருக்கு குமரிக் கடலில் பிரம்மாண்ட சிலை வைத்தோம், மகாத்மா காந்திக்கு ஊர்தோறும் சிலைவைத்தோம். ஆனால், அவர்கள் சொன்ன மதுவிலக்கை மட்டும் நாம் அமல்படுத்தாமல் இருக்கிறோம்.

- எஸ்.பரமசிவம், மதுரை.



விழித்துக்கொள்ளும் நேரமிது

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தமிழகத்தில் இத்தனை ஆறுகளா?’ கட்டுரை வாயிலாகத் தமிழகத்தில், மாவட்ட வாரியாக இருக்கின்ற நதிகளைப் பற்றித் தெரிந்துகொண்டோம். முன்பு 50,000 ஆக இருந்த நீர்நிலைகள், இன்று 20,000 ஆகக் குறைந்திருக்கின்றன. இவை அனைத்திலும் மக்களாகிய நமக்கும் பங்கு இருக்கிறது. செய்த தவறைத் திருத்திக்கொள்ள வேண்டிய நேரமிது. இதுவரையில் எப்படியோ, இனியாவது நீர்நிலைகளைப் பாதுகாக்க மக்களே அரசை வலியுறுத்த வேண்டும். நம் சொந்த ஊரில் உள்ள நீர்நிலைகளைக் காக்க நமக்கே இல்லாத அக்கறை, வெளியூரிலிருந்து பணி நிமித்தம் வரும் அதிகாரிகளுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் வரும் என்று நினைப்பது எப்படிச் சரியாகும்?

- சு.சந்திரகலா, சிவகங்கை.



இன்றைய தலைமுறை

ஏப்ரல் - 2 அன்று ‘காலத்தின் வாசனை’ பகுதியில், ‘அது வேறு காலம்... அது வேறு காக்கை’ என்ற கட்டுரையில், அன்றைய தஞ்சையின் மண் வாசனை வீசியது. ‘அன்றைய பரந்துவிரிந்த ஓட்டு வீடுகள் எங்கே? இன்றைய குருவிக்கூடு அபார்ட்மெண்ட்கள் எங்கே? உறவின் மத்தியில் வளர்ந்த அன்றைய குழந்தைகள் எங்கே? இன்று தனிக் குடித்தனத்தில் அப்பா - அம்மாகூட உடனில்லாமல் காப்பகத்தில் வளரும் குழந்தைகள் எங்கே?’ என்று ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. இதுபோன்ற கட்டுரைகள் மூலமாக, உறவுகள் பற்றிய அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்ற இன்றைய தலைமுறைகள்தான், உறவுகளை வாரி அணைத்துப் பேணக் கற்றுக்கொள்ள வேண்டும்.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.



மக்கள் கேள்வி

தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், மீண்டும் அரசுப் பணியில் சேர்ந்துள்ளது குறித்த தலையங்கம் (ஏப்.3) வாசித்தேன். மாநில அரசாக இருந்தாலும் மத்திய அரசாக இருந்தாலும் மக்களின் குறைந்தபட்ச நியாயமான கேள்விகளுக்கு விடையளிக்காத நிலையில், அரசின் செயல்பாட்டை மக்கள் விமர்சிப்பது நியாயமே. தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய ராம மோகன ராவ் அலுவலகத்தில் சோதனை, அவரின் மறுப்பு, வருமான வரித் துறையின் பதில், அவருக்கு மீண்டும் பதவி அத்தனையும் சாதாரண குடிமகனைக்கூடக் குழப்பிவிடும் தொடர் நிகழ்வுகள். இத்தகைய குழப்பங்களை நீக்காமல் மத்திய, மாநில அரசுகள் வாளாவிருப்பது வருந்தத்தக்கதே.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x