Published : 31 Jan 2017 10:30 AM
Last Updated : 31 Jan 2017 10:30 AM
எதிர்பாராத ஒரு வரலாற்று எழுச்சிப் போராட்டம், ஒரு தயாரிப்பு இல்லாமல் போனதால்தான் தீர்மானிக்கப்பட்ட முடிவோடு அரசால் முடித்து வைக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். மத்திய - மாநில அரசுகளின் மீதான கோபத்தின் வெளிப்பாடே இப்போராட்டம். ஜல்லிக்கட்டு என்பது மையப்புள்ளி மட்டுமே. அரசின் வெவ்வேறு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைவரும் இதில் பங்கேற்றார்கள். வேலை இல்லாத இளைஞர்கள், வேலை இழந்த இளைஞர்கள், விவசாயம் செய்து இழப்பைச் சந்தித்தோர், அதிகமான கல்விக் கட்டணம் செலுத்த சிரமப்படும் மாணவர்கள் போன்றோரும் அதில் இணைந்தனர்.
இப்படி பலதரப்பினரும் இணைகிறபோது அதன் முழக்கங்களும் மாறுவது இயல்பே. பிரிட்டிஷ் அரசைப் போலவே, இன்றைய ஆட்சியாளர்களும் இந்த எழுச்சிப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் பய விதையை விதைத்து முடித்து வைத்தனர். உண்மையில், பயந்தவர்கள் ஆட்சியாளர்களே. இம்மாதிரியான போராட்டங்கள் தேசம் முழுவதும் பரவினால் என்னாகும் என்ற பயத்துடனேயே இதை ஒடுக்கினார்கள். கட்டுரையாளர் கூறுவதுபோல் அறவழிப் போராட்டம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்காது. அறவழிப் போராட்டத்துக்கு அடிப்படையாக இம்மாதிரியான எழுச்சிப் போராட்டங்கள் தேவை.
- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.
எதிர்கொள்ளவிருக்கும் சவால்!
ஜனவரி 26-ல் வெளியான, ‘ஒரு பண் பாட்டு மென்பொருளும் ஜல்லிக்கட்டுச் செயலியும்’ கட்டுரை வாசித்தேன். மிக நுட்பமான மனித உணர்வுகள் இப்போராட் டத்தில் கடந்து சென்றதை விவரித்திருந்தீர் கள். அரசியல், ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கம் என சகலத்தையும் சீர்தூக்கிய ஆய்வு, ஓர் அழகிய விளாசல். ஊடே சாதி அரசியலையும் இனி, தமிழகம் எதிர்கொள்ளப்போகும் சவால்களையும் தெள்ளத் தெளிவாக்கியது கட்டுரை.
- கோ.முருகன், புதுச்சேரி.
மாணவர்களுக்குப் பாராட்டு
ஜனவரி 25 அன்று வெளியான, ‘வாழ்க்கைக்கு அடையாளம் கொடுத்த ஆசிரியரை மறக்காத மாணவர்கள்’ செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற ஆசிரியரை நினைவிற்கொண்டு, அவரிடம் படித்த மாணவர்கள் தனக்குக் கல்வி தந்த ஆசிரியருக்குப் பாராட்டு விழா நடத்தியிருப்பது போற்றுதலுக்குரியது. பழைய மாணவர்களின் இந்தப் பண்பாடு, மற்ற மாணவர்களிடமும் உருவாக வழிவகுக்கும்.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
எம்.ஜி.ஆர். நூல்
‘தி இந்து’வில் வெளியான, ‘எம்ஜிஆர் 100’ தொடரை ரசித்துப் படித்தவர்களில் நானும் ஒருவன். அவரது மனிதநேயம், ஈகை குணம், நல்லவர்களை மறவாத தன்மைகளைப் படித்து வியந்தேன். அது நூலாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
- அ.இராஜப்பன், கருமத்தம்பட்டி.
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?
‘என்னருமை தோழி’ தொடர் ஒருதலைப்பட்சமானது. கட்டுரையில் ஜெயலலிதாவின் ஒவ்வொரு செய்கையும் அவரது புகழுரைக்கு உள்ளாகின்றன. மற்றவர் வாழ்க்கையில் நிகழாதவை அல்ல. யாரொருவர் இறந்தாலும் புகழஞ்சலி செலுத்துவது நாகரிகம். அதனால் சொல்லப்படுவதெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஜெயலலிதா அரசியலில் இருந்தவர். இரும்புக் கரங்களோடு தமிழ்நாட்டை ஆண்டவர். அவர் ஆட்சியில் நல்லதும் நடந்துள்ளன; நடக்கக் கூடாதவையும் அதிகம் நடந்துள்ளன. நிறை - குறை இரண்டையும் கண்டு, அவரையும் அவரது ஆட்சியையும் மதிப்பிடுதலே முறை. நாம் சிலரை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக வைத்திருக்கின்றோம்.. ஜனநாயகத்துக்கு இது உகந்ததல்ல.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT