Published : 01 Sep 2016 05:13 PM
Last Updated : 01 Sep 2016 05:13 PM
திருவுடையானை முதன்முறையாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கலை இரவு மேடையில் பார்த்தபோது, தபேலாவை வாசித்துக்கொண்டே தாளம் பிசகாது, பாவம் குறையாது, ராகம் இடறாது எப்படிப் பாட முடிகிறது என்ற உள்ளக்கிளர்ச்சி ஏற்பட்டது. பின்னர், எப்போது அவர் இசையைக் கேட்டாலும் அந்தக் கிளர்ச்சி வற்றாதிருந்தது.
வட சென்னையில் நடந்த கலைவாணர் என்.எஸ்.கே. நூற்றாண்டு விழாவில், அவரது பாடல்களை அருமையாகப் பாடிய திருவுடையான், “என்.எஸ்.கே. பாடல்களை மேலோட்டமாகக் கேட்டால் மிகவும் எளிமையாகத்தான் தெரியும். ஆனால், அதைப் பாடுவதற்குப் பயிற்சி எடுக்கையில்தான் அவரது மேதைமையின் ஆழத்தை உணர்ந்து அசந்துபோனேன்... அதில் நாற்பது சதவீதமே என்னால் வெளிக்கொணர முடிந்தது” என மிகுந்த தன்னடக்கத்தோடு பேசியதை மறக்க இயலாது.
அந்த மக்கள் பாடகன் குறித்த பன்முகச் செய்திகளைச் சுமந்து வந்திருக்கும் நாறும்பூநாதனின் கட்டுரை, அவரது இழப்பின் வலியை உணரச்செய்கிறது.
- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை
*
பயனுள்ள திறப்பு
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுடனான நேர்காணல், பல பயனுள்ள திறப்புகளைக் கொண்டுள்ளது. பின்பற்றத்தக்க பல வாழ்க்கை அனுபவக் குறிப்புகளையும், துணிச்சலான கருத்துகளையும் முன்வைத்துள்ளார்.
மாறுபட்ட கருத்துக்கள் மோதும்போதுதான் சிந்தனை செழுமையுறும். இவர் வெளிப்படையாக உண்மையான கள நிலவரத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார். இவருடைய அறச் சீற்றம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கும் என்பது திண்ணம்.
- ஜெ.சாந்தமூர்த்தி, மன்னார்குடி.
*
எளிய நடையில் அறிவியல்
விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிவரும் 'அறிவியல் அறிவோம்' தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். 'ஒட்டுண்ணிக்கெல்லாம் ஒட்டுண்ணி' என்ற கட்டுரையைச் சமீபத்தில்தான் படித்தேன். அருமையாக இருந்தது. கொடுக்கும் உதாரணங்களும் கருத்துக்களும் அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. ஒரு மாணவனாக தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.
- அபுசித்திக், மின்னஞ்சல் வழியாக.
*
தமிழகத்தின் முதல் செவாலியே!
சிவாஜிக்கு முன்பே 1960-களில் தமிழர் ஒருவர் செவாலியே விருது வாங்கியிருக்கிறார். அவர் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் பெயர் அப்துல் அஜீஸ். 2008-ம் ஆண்டு நான் வியட்நாமில் உள்ள ஹோசிமின் சிட்டி (பழைய பெயர் சைகோன்) நகரத்தில் முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்துக்குச் சென்றபோது அங்கு 'செவாலியே அப்துல் அஜீஸ், கூத்தாநல்லூர்' என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. பார்த்து வியந்தேன்.
ஜவுளித் தொழிலில் அவர் கொடிகட்டிப் பறந்தவர் என்றும், பொதுத்தொண்டு பல புரிந்தவர் என்றும் தெரிந்தது. அவருடைய கூத்தாநல்லூர் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது, அவர் பெற்ற செவாலியே விருதை அவரது புதல்வர் என்னிடம் காட்டினார்.
- பைதுல்லாகான், 'தி இந்து' இணையதளம் வழியாக.
*
ரகசியம் ரகசியமாக இருக்கட்டும்
'இந்திய நீர்முழ்கிக் கப்பலின் ரகசியங்கள் கசிவு' என்ற செய்தி படித்த அதிர்ச்சியில் புலப்பட்டது, இன்றைய உலகமயமாக்கலின் பக்க விளைவுகள். Hacking மற்றும் Hadoop தொழில்நுட்பங்கள் செய்தியைச் சேகரிக்கக் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவை. இந்தத் தொழில்நுட்பத்தை யார் பயன்படுத்துவது, எப்படிப் பயன்படுத்துவது என்பதில்தான் விஷயமே இருக்கிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை அரசாங்கம் பயன்படுத்தினால், அது நாட்டு நலன் கருதி எதிரிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கிறது என்று பொருள். தனிநபர் இந்த தொழில்நுட்பத்தைத் தவறான செயலுக்குக் கையாள்வது பெரும் ஆபத்தில் போய் முடியும். இந்திய அரசாங்கம் துரிதமாகச் செயல்படவேண்டிய தருணம் இது.
- வெ.ரா.ஆனந்த், மின்னஞ்சல் வழியாக.
*
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT