Published : 10 Feb 2017 10:39 AM
Last Updated : 10 Feb 2017 10:39 AM

இப்படிக்கு இவர்கள்: மற்றுமொரு இழப்பு

இலக்கியவாதிகளின் இருப்பையும், இறப்பையும் அர்த்தப்படுத்திவரும் ‘தி இந்து’ நாளிதழ், க.சீ.சிவகுமாருக்கு நல்ல முறையில் அஞ்சலி செலுத்தியிருந்தது. எளியவர்களின் உலகை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய அற்புதமான படைப்பாளி அவர். பவா செல்லதுரை சொன்னதுபோல், ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’மட்டும் போதும், நாம் அவரைத் தவறவிட்டதை உணர்ந்துகொள்ள. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு மற்றுமொரு இழப்பு.

-ரஞ்சனி பாசு, மின்னஞ்சல் வழியாக.

முடிவுகள் ரத்துசெய்யப்படுமா?

தனது இறப்பு வரையில் ஜெயலலிதா முதலமைச்சராகவே இருந்தார். அரசு இயந்திரம் வழக்கம்போல் இயங்கிக்கொண்டிருந்தது. யார் முடிவுகள் எடுத்துச் செயல்படுத்தினார்கள் என்ற மர்மம் தொடர்கிறது. அவர் சுயநினைவோடுதான் செயலாற்றுகிறாரா என்று நேரில் கண்டு உறுதிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஆளுநருக்குக் கூட வழங்கப்படவில்லை. ஆனால், ஜெயலலிதா தன் பணியிலிருந்து விலகவுமில்லை, விடுப்பு எடுக்கவும் இல்லை, தன் சார்பாக யார் முடிவெடுப்பார்கள் என்று சொல்லவும் இல்லை. எனவே, யார் யார் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களிடம் முதல்வர் என்ன சொன்னார் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும். ஆளுநர் கூட பார்க்க அனுமதிக்கப்படாதது சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அந்த 75 நாட்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் ரத்து செய்யப்படுவதும் தவறல்ல.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.

ஒற்றுமை உண்டு; பிரிவு இல்லை

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கேற்றது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்களைப் பிரித்துப் பார்ப்பது கிடையாது. மாமன், மச்சான் உறவு முறையே இன்றளவும் தொடர்கிறது. இதில் அரசியல் லாபம் கருதி, ஒரு சிலர் தரமற்ற விமர்சனங்களைச் செய்து, அனேக மக்களாலும் புறந்தள்ளப்பட்டனர். இந்த நிதர்சனமான உண்மையைத்தான் கோம்பை எஸ்.அன்வரின் கட்டுரை அருமையாக விவரித்துள்ளது.

- அ. அப்துல் ரஹீம், காரைக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x