Published : 23 Aug 2016 10:02 AM
Last Updated : 23 Aug 2016 10:02 AM
பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கடுமையான சட்டநடவடிக்கைகள் தேவைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் அதேநேரத்தில், பிஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் நடவடிக்கைகள், பிரிட்டிஷ் ஆட்சியின்போது நடைபெற்ற இம்சைகளையும் தாண்டிவிடும்போலத் தோன்றுகிறது.
முதியோர், நோயாளி, விருந்தாளி ஆகியோரும் தண்டனை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது. 'நோக்கத்தைப் போலவே வழிமுறையும் முக்கியம்!' என்ற தலையங்கத்தின் அறிவுரையை பிஹார் முதல்வர் கடைப்பிடிக்க வேண்டும்.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
*
தங்க மகள்
பாரதத் தாய்க்குத் தங்களது பதக்கத்தால் மகுடம் சூட்டிய சிந்து, சாக்ஷியை இந்தியத் தாய் உச்சிமுகர்ந்து பாராட்டுகிறாள்.
இதுவரையில் வெற்றி பெற்ற பலர், தனி மனித முயற்சியால்தான் சாதித்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் விளையாட்டுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இலலை. தகுதியிருந்தும் கிராமக் குழந்தைகளின் திறமைகள் கண்டறியப்படவே இல்லை.
முன்னாள் ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டு வீரர்களைக் கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பதக்கப் பட்டியலில் நமக்குத் தேவை கூட்டு முயற்சியும் அரசியல் கலப்பற்ற ஈடுபாடும் மட்டுமே.
- ச.வைரமணி, மின்னஞ்சல் வழியாக.
*
பாராட்டு
நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரிடம் 'கல்பனா சாவ்லா விருது' பெற்ற செய்தி படித்தேன். நாமக்கல் மின்மயான மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார் இவர். அந்தப் பணியில் சிறப்பாகச் செயல்படுகிற அவரது ஈடுபாடு, மற்றவர்கள் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய செய்தி.
- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், காக்காவேரி.
*
பேராசைக்கு மருந்து
தேசங்களின் தலைவிதியை நிர்ணயிப்பது தங்கம் என்று எழுதியுள்ளார் 'கடவுளின் நாக்கு' பகுதியில் எஸ்.ராமகிருஷ்ணன். மக்களின் தலைவிதியையும் தங்கமே தீர்மானிக்கிறது. இந்தக் கட்டுரையை ஊன்றிப் படித்தால், தங்கத்தின் மீதுள்ள பேராசை சற்றே குறையும் என்று தோன்றுகிறது.
- பொன்.குமார், சேலம்.
*
தன்னம்பிக்கைத் தொடர்
வணிகம் பக்கத்தில், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதிவரும் 'தொழில் ரகசியம்' தொடர், வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு வழிகாட்டியாகவும், மற்ற துறையில் இருப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருக்கிறது. அவரது எளிய நடையும் அதை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் விதமும் நம்மைப் பெரிதும் கவர்கிறது.
'தோல்வியைத் தேடுங்கள்' என்ற கட்டுரையில், போர் விமானத்தை உதாரணம் காட்டி, சொல்லவந்த கருத்தை வெளிப்படுத்தியிருப்பது அவரது எழுத்தின் மீதான ஈர்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.
- சேவற்கொடியோன், மேலூர்.
*
இப்படியொரு குரங்கா?
சாந்தகுமாரி சிவகடாட்சம் சனிக்கிழமைதோறும் எழுதிவரும் 'அதிசய உணவுகள்' தொடர் வெறும் உணவு மட்டுமின்றி பயண அனுபவம், பல்லுயிர்ச் சூழல், வெளிநாட்டவரின் வாழ்க்கை முறை போன்ற பல தகவல்களைத் தருகின்றன. எனக்கு 35 வயதாகிறது.
இப்போதுதான் கம்பளிக் குரங்கு என்றொரு வகைக் குரங்கு இருப்பதை அறிந்துகொண்டேன். அதன் புகைப்படத்தைப் பார்த்தபோது, 'அமேசான் காட்டில் இவ்வளவு வித்தியாசமான குரங்கா!' என்று என் குடும்பத்தினருக்கும் ஆச்சரியம்.
- கே.ரோஸ்லின், தேவகோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT