Published : 28 Sep 2016 12:53 PM
Last Updated : 28 Sep 2016 12:53 PM
மேனிலைக் கல்விப் பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. அல்லது அதற்கும் மேம்பட்ட பாடத்திட்டத்துக்கு இணையாக மாற்றினால், தமிழக மாணவர் பலரும் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள இயலும் என்ற கருத்து பரப்பப்படுகின்றது. கற்றல், மேனிலைப் பள்ளியில் தொடங்குவதுமில்லை, முடிவதுமில்லை. பிறந்த குழந்தை தன் புலனறிவைக்கொண்டு தன் சுற்றுப்புறத்தை ஆய்கின்றது. எல்லாமே வியப்பு. வியப்பு மேலிட மேலிடக் கற்றலும் கூடுகின்றது.
இது இயற்கை வழி நடைபெறும் செயல். பின்னர் பள்ளியில் சேர்ந்ததும் பாடத்திட்டம், பாடநூல், ஆசிரியர் ஆகியவை குழந்தையின் சுதந்திரமான கற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. என்ன கற்க வேண்டுமென்று சொல்லப்படுகிறதோ அதனை மட்டும் கற்க வேண்டும். கூடுதலாக அறிய முற்படுவது வீண் செயல் என்று அறிவுறுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் கற்றல் முழுமையாக இருக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணே மாணவரது கற்றல் அளவை நிர்ணயிக்கிறது. பதினொன்றாம் வகுப்பு வரும்போது கற்றதைவிடக் கல்லாதது அதிகமாகவே இருக்கும். இக்குறைபாட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், தொடக்கப் பள்ளியிலிருந்தே ஒவ்வொரு வகுப்பிலும் கற்றல் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இருந்தால் பாடத்திட்டமல்ல, அவரது கற்றல் திறன் எந்தப் படிப்புக்கும் செல்ல உதவும்.
மேனிலைப் பாடத்திட்டம் நல்ல மருத்துவரை உருவாக்கும் என்று நினைப்பது வேடிக்கை. நல்ல மருத்துவரை மருத்துவக் கல்லூரிகள்தாம் உருவாக்கும். பள்ளிப் பருவத்தில் சாதாரணமாகத் தேர்ச்சிபெற்ற பலரும், நாடு போற்றும் சிறந்த மருத்துவர்களாக உருவாகியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர உதவித்தொகை அளிக்கப்பட்டு, மாணவரை ஈர்த்ததும் உண்டு. மேனிலைக் கல்வி மாணவரில் பெரும்பாலோர் தனிப் படிப்புக்கும், தனிப் பயிற்சிக்கும் செல்கின்றனர். பள்ளி மட்டும் அவர்களுக்கு உதவுவது இல்லை. ‘நீட்’ தேர்வு தனிப் பயிற்சி மையங்கள் வளரவே உதவும். உண்மையான கற்றலை நீட் தேர்வு காண இயலாது. எல்லா நுழைவுத் தேர்வுகளும் அடிப்படையில் வடிகட்டல் நோக்கமே கொண்டுள்ளன.
மேனிலைக் கல்விக்குப் பல நோக்கங்கள் உண்டு. அவற்றில் ஒன்று. உயர் கல்விக்குத் தகுதியாக்குவது.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
அந்நிய முதலீடு அடிமைப்படுத்தவே!
எல்ஐசி குறித்த ‘60 ஆண்டு ஆச்சரியம்’ என்கிற கட்டுரை படித்தபின், எல்ஐசி மற்றும் அந்நிய முதலீடு என்ற இரு தளங்களை ஆராய்ந்தால், ஞாபகம் வரும் மற்றொரு துறை இஸ்ரோ. அந்நிய முதலீடு என்று வரும்போது, இந்தியாவில் தொழில்நுட்பமே இல்லை எனில் 100% முதலீடு. இல்லையேல் 49% முதலீடு.
இன்றைய நிலையில், இஸ்ரோவின் ஏல்லா ராக்கெட்டுகளும் இந்தியாவின் சொந்தத் தயாரிப்பு. அதுவே இன்று இந்தியாவுக்குச் சில லட்சம் கோடிகளைப் பெற்றுத்தருகிறது.
வருங்காலத்தில் பல லட்சம் கோடிகளைப் பெற்றுத்தரும். இஸ்ரோவை ஊக்கப்படுத்தும் மத்திய அரசு, ஏன் மற்ற துறைகளை ஊக்கப்படுத்தவில்லை? இது கேள்விக்குரிய ஒன்று. அந்நிய முதலீட்டை மற்ற துறைகளில் புகுத்தத் துடிப்பது இந்தியாவை வளர்க்க அல்ல, அடிமைப்படுத்தவே செய்யும். இந்தியாவில் செய்யும் அந்நிய முதலீட்டின் லாபம் வெளிநாட்டுக்கே செல்லும்.
மன்னராட்சிக் காலத்தில்கூட ஏற்றுமதியே இந்தியாவில் அதிகம் இருந்தது.
மக்களாட்சியில் இந்தியாவில் அடிமைத்தனம் ‘அந்நிய முதலீடு’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம்.
- வெ.ரா.ஆனந்த், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT