Published : 29 May 2017 10:40 AM
Last Updated : 29 May 2017 10:40 AM

இப்படிக்கு இவர்கள்: வள்ளலாருக்கு ஆய்வு நூலகம் வேண்டும்!

உலக அளவில் 19-ம் நூற்றாண்டில் புரட்சிக் கருத்துகள் சிந்தனையாளர்களின் எண்ணங்களில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. பிரித்தானியப் பேராதிக்க அரசு, இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளைத் துப்பாக்கி முனையில் தனது காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்தது. மண் வளங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தது. வறியவர்கள் வாடிவதங்கினர். தென் நாட்டில், வள்ளலார் பிறந்த ஆண்டான 1823-ல் தொடங்கிய பஞ்சங்கள், அவர் மறைவுக்குப் பின்னும் 1896 வரை தொடர்ந்தன. லட்சக் கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோயின. 18, 19-ம் நூற்றாண்டுகளில் இத்துணைக் கண்டத்தில் மட்டும் 32 பஞ்சங்கள் மக்களின் வாழ்வைச் சூறையாடின.

இக்காரணத்தால்தான் வள்ளலார், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே/ வீடுதோறிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்/ நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக்கண்டுளந் துடித்தேன்/ ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்’ என்று அன்றைய பஞ்சத்தின் கொடுமை கண்டு உளம் கொதிக்கிறார். நெறியற்ற, வெறிகொண்ட ஒரு கூட்டம் தோன்றி, காவியைத் தன் வசமாக்கி, மதத்தைத் தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்துவார்கள் எனத் தெரிந்துதானோ என்னவோ வள்ளலார் அன்றே வெண்நிற ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிந்தார்.

‘ஆதிக்க எண்ணம் கொண்டோரின் கொட்டத்தை வீழ்த்த / மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது/ வருணாச் சிரமம் எனு மயக்கமும் சாய்ந்தது/ குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று/குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று/வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது/ விந்தை செய் கொடுமாயயைச் சந்தையும் கலைந்தது’ என அவர் குறிப்பிட்டது, வருணாசிரமத்தின் கொடுங்கோன்மைக்கு எதிரான கொட்டு முழக்கம். ‘பொதுநிலை அருள்வது பொதுவினில் நிறைவது / பொதுநலம் உடையது பொதுநடம்இடுவது’ என்றபடியே சமரச சன்மார்க்கம் கண்டார்.

கொடி கண்டார். இயக்கம் கண்டார். ஏழைகள் பசியாற நாளும் உணவு வழங்கும் முறையை வடலூரில் அமைத்தார். சங்கராச்சாரியார், ‘‘சம்ஸ்கிருதம் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி’’என்று மொழிந்தபோது, ‘‘தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி’’ என்று முழங்கியவர் வள்ளலார்.

இப்படிச் சொல்லிலும் செயலிலும் பொதுமை போற்றிய புரட்சித் துறவியான வள்ளலாருக்கு, இன்று வரை சிறந்த ஆய்வகம் சென்னையில் அமையவில்லை என்பது தமிழ்ச் சூழலின் பேரவலங்களில் ஒன்று. தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

- பேராசிரியர். மு.நாகநாதன், முன்னாள் திட்டக் குழுத் தலைவர், சென்னை.



நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கும் நீதிமன்றம்!

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர் மாயாண்டி சேர்வை, அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பியதை மனுவாக நீதிமன்றம் ஏற்று விசாரணையை ஆரம்பித்திருப்பது நீதிமன்றத்தின் மீது பாமர மக்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு துறையிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் தங்களுக்கு நியாயப்படி வர வேண்டிய பணத்துக்காக வீதியில் நின்று போராடும் அவல நிலையை நினைத்து அரசு வெட்கப்பட வேண்டும்.

கோடிகளில் பணத்தை ஒதுக்கியிருப்பதாகக் கணக்குக் காட்டும் அரசாங்கம், எவ்வளவு நிலுவைத்தொகை ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்க வேண்டும் அதில் எவ்வளவு வழங்கியிருக்கிறார்கள் என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். வேலை செய்தவர்களுக்கும் அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் அரசாங்கம் தரும் தண்டனையா? நீதி தேவன் அவர்களைக் காக்க வேண்டும்!

- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x