Published : 23 Feb 2017 09:36 AM
Last Updated : 23 Feb 2017 09:36 AM
பிப்ரவரி18-ம் தேதி வெளியான, ‘பாடநூல்களில் நவீன கவிஞர்கள் இடம்பெற வேண்டும்’ என்ற தலையங்கம் ஒரு நிகழ்வை நினைவூட்டியது. பாடச் சுமைக் குறைப்புக் குழுவின் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு, ஆல்காட் பள்ளியினின்று இரண்டு மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண் ‘‘செய்யுள் வடிவத்தில் ஒவ்வொரு வகைக்கும் ஒன்றிரண்டு இருந்தால் போதுமே, எதற்கு கம்பராமாயணம் முதல் சீறாப்புராணம் ஈறாக வெண்பாக்கள் மட்டும் அதிகம் இடம்பெறுகின்றன. புதுக் கவிதைகள் ஏன் இடம்பெறுவதில்லை.. மாணவர்களுக்கு அனைத்து வகைச் செய்யுள் வடிவங்களும் அறிமுகமாக வேண்டாமா?’’ என்று கேட்டார்.
“நளன் நள்ளிரவில் மனைவியை விட்டு ஓடியவர் தானே, அவர் எவ்வாறு முன்மாதிரியாகும், எதற்கு நளவெண்பா?” என்றும் கேட்டார். “பாடநூல் தொகுப்பாளர்கள் தங்கள் மூன்றாந்தரக் கவிதைகளை ஏன் புகுத்துகின்றனர். எங்களுக்கு கண்ணதாசன் தான் அதிகமாகத் தெரியும். அவர் கவிஞர் இல்லையா?” என்றும் வினவினார். இன்றைய மாணவர்களுக்கு ஆழமான புரிதல்கள் உண்டு என்பது புலப்பட்டது!
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
வாழ வழியற்ற மாநிலம்?
தமிழகம் முழுவதும் மழையின்றி, வறட்சியால் விவசாயம் பொய்த்து, வாழ வழி இல்லாமல் ஒருபுறம் தவித்து வருகின்றனர் விவசாயிகள். அவர்களில் சிலர் வேறு வழியின்றி தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
பொதுமக்களும் குடி தண்ணீர் இன்றி அலையும் நிலை. கர்நாடக அரசு, ஆந்திர அரசு, கேரள அரசு எல்லாமும் தமிழகத்தைச் சுற்றிலும் அணைகள் கட்டி தமிழகத்துக்கு வர வேண்டிய நீரைத் தடுத்து வருகின்றனர்.
‘ஹைட்ரோ கார்பன் திட்டம்’ என்ற பெயரில் மீதமுள்ள வளத்தையும் அழிக்க திட்டம் தீட்டப்படுகிறது. இப்படியே தொடர்ந்து வறட்சி நீடித்தால் பிழைப்புக்காக வேறு மாநிலங்கள் செல்ல நேரிடும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து தமிழக மக்களையும் தமிழகத்தையும் காக்க புதிய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?
- ஆ.பாரதிதாசன், திருவண்ணாமலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT