Published : 05 Jun 2017 09:49 AM
Last Updated : 05 Jun 2017 09:49 AM

இப்படிக்கு இவர்கள்: விளக்கம் தேவை

உயர் கல்வித் துறையில் மீண்டும் துணைவேந்தர்கள் நியமனம் சர்ச்சையாகி இருக்கிறது. பட்டியலில் இல்லாத ஒருவரை, யார் பரிந்துரையின்படி ஆளுநர் துணைவேந்தராகத் தெரிவுசெய்தார்? இது விதிமீறலே. பட்டியலில் இருந்த அனைவரையும் எந்த அடிப்படையில் நிராகரித்தார் என்ற கேள்வியும் எழுகிறது.

குற்றப் பின்னணி கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்க யார் அழுத்தம் கொடுத்தார்கள்? அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில், தமிழ்நாட்டோடு தொடர்பில்லாத ஒருவரை நியமித்தது ஏன்? இவை குறித்தெல்லாம் ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். உயர் கல்வித் துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் இருக்கிறது.

- ச.சீ.இராஜகோபாலன், மூத்த கல்வியாளர், சென்னை.

கல்வித் துறையின் கவனத்துக்கு..

கற்றல் குறைபாட்டால் தனது பள்ளி படிப்பை 6-ம் வகுப்போடு கைவிட்ட நந்தகுமார், தானே வீட்டிலிருந்து படித்து, இன்று வருமானவரி அதிகாரியாகியிருக்கிறார் (மே 31) என்ற செய்தி மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியது.

‘தனக்கு ஏன் படிப்பு ஏறவில்லை எனத் தனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை பெற்றோருக்கும் தெரியவில்லை’என்று நந்தகுமார் கூறியிருப்பதில், ‘ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை’ என்பதுதான் கவலை அளிப்பதாக உள்ளது. எனவே, ஆசிரியர் சமூகம் இதுபோன்ற செய்திகளைப் படித்துத் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் கல்வித் துறையில் நல்ல மாற்றங்கள் தெரிகின்றன. எனவே, கல்வித் துறையும் இதுபோன்ற செய்திகளையும் கவனத்தில் கொண்டால் நல்ல தலைமுறை உருவாகும். சாதிக்கப் பிறந்தவர்கள் நிச்சயம் சாதித்துக்காட்டுவார்கள்!

- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்..

மே 31-ல் வெளியான, ‘மாநிலங்கள் மீதான அறிவிக்கப்படாத போர்’ கட்டுரை சிறப்பு. கூட்டாட்சித் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைப்பதுதான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார் கட்டுரையாளர். மொழிவாரி மாநில அமைப்பையே அழித்தொழிக்கும் ஆரம்பகட்டப் பணியே மாநிலங்களில் உரிமைப் பறிப்பு என்றும், நிதி ஆயோக் போன்ற திட்டங்கள் மாநிலங்களின் மிச்சசொச்ச உரிமைகளையும் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை என்பதையும் பதியவைத்திருக்கிறார். நீட் தேர்வு, மாட்டிறைச்சி உணவுக்கு நெருக்கடி போன்ற செயல்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தமான ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே உணவு, ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைமை எனும் நிலை நோக்கி நம்மை இழுத்துச்செல்லும் உத்தி என்பதைப் புரியவைக்கிறது கட்டுரை.

- கி.தளபதிராஜ், மின்னஞ்சல் வழியாக.

மதமும், மூடநம்பிக்கையும்

மத நம்பிக்கையில் ஆழ்ந்துபோனால், ஒருவரின் பகுத்தறிவு எவ்வாறு மட்டுப்பட்டுவிடும் என்பதற்கு உதாரணம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து (ஜூன் 2). எல்லா மதத்தினருக்கும் இது பொருந்தும். நன்கு படித்தவர்களிடமே இந்தக் குறையைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்வது தவறு என்று சுட்டிக்காட்டினால், மதத்திற்கு எதிராகப் பேசுவதாகச் சொல்லும் நிலையும் இருக்கிறது. கண்ணுக்கெதிரே கூடுகிற மயிலைப் பற்றியே இத்தனை மூடநம்பிக்கை என்றால், கடலுக்கடியிலும், மண்ணுக்கடியிலும் வாழ்கிற உயிரினங்களைப் பற்றி என்னவெல்லாம் கதை கட்டுவார்களோ தெரியவில்லை.

-ரோஸ்லின், தேவகோட்டை.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x