Published : 19 May 2017 10:32 AM
Last Updated : 19 May 2017 10:32 AM
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் ஆகியவற்றிலிருந்து ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை’ மாறுபட்டு இயங்குகிறது. சமூக அக்கறையுடன் செயல்படுபவர்கள், நடக்கிற எந்தப் பிரச்சினையிலாவது இ.க.க மா.லெ கருத்து என்ன என்று கேட்டிருக்கிறீர்களா? அதையும் மக்கள் மத்தியில் சொல்வது நடுநிலை காக்கும் அறத்துக்குள்தான் அடங்கும். வர்க்கங்களின் சமநிலைக்கேற்ப அரசியல் நிகழ்வுகள் நகர்கின்றன.
இந்தச் சமநிலையை ஏகப்பெரும்பான்மை மக்களுக்கு உகந்ததாக மாற்றும் பணி, பெரும்பான்மை வர்க்கத்துக்கு அதிகாரம், பின்னர் அதன் மூலம் வர்க்கங்கள் அற்ற நிலைக்கு நகர்த்தும் பணி கம்யூனிஸ்ட்டுகளுடையது. அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறோம். வர்க்கங்களாகப் பிளவுண்டுள்ள சமூகத்தில், அந்த வர்க்கங்கள் சார்ந்த நிலைப்பாடுகள்தான் இருக்க முடியும். நடுநிலை என்ற ஒரு பார்வை இருக்க முடியாது. சமூக மாற்றத்தை நிகழ்த்தவிருப்பது பாட்டாளி வர்க்கம்.
அதை நிகழ்த்த அந்த வர்க்கத்துக்கு ஓர் அமைப்பு தேவை. அந்த அமைப்பு கம்யூனிஸ்ட் கட்சி. அப்படி ஓர் ஆயுதம் இல்லாமல் காற்றில் கத்தி சுழற்ற முடியாது. அந்த ஆயுதத்தை பலவீனப்படுத்தாமலாவது இருப்பது, இன்றைய கருத்து உற்பத்திச் சூழலில், மூளைக்குப் போடப்பட்டுள்ள விலங்குகளை மேலும் இறுக்கும் பிற்போக்கு சக்திகள் பலம் பெற்றுள்ள நேரத்தில், சமூக மாற்றத்துக்குப் பங்காற்றியதாக இருக்கும்.
- ஜி.ரமேஷ், மாலெ தீப்பொறி ஆசிரியர் குழு உறுப்பினர், மின்னஞ்சல் வழியாக.
அரசியல் சூழல் வரட்டும்!
கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நிற்க வேண்டும் என்பது கட்டுரையாளரின் நோக்கம் மட்டுமல்ல, பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பும்கூட. பொதுவுடைமை குறித்த காந்தியின் பார்வையைக் கட்டுரையாளர் தனது கட்டுரைகளில் குறிப்பிடும்போது அடிப்படை மதவாதம் குறித்த காந்தியின் கருத்துக்களையும் சேர்த்தே குறிப்பிடுவது சரியாக இருக்கும்.
‘‘இந்துக்கள் மட்டுமே வாழும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என இந்துக்கள் நினைப்பார்களேயானால், அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள்” என கொல்கத்தா நவகாளி பிரச்சினையின் போது காந்தி கூறினார். அதைத்தான் இன்றைக்கு பல்வேறு பிரிவுகளாக கம்யூனிஸ்ட்டுகள் பிரிந்திருந்தாலும் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தத்துவார்த்தங்களை நடைமுறைப்படுத்துவதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே மேடையில் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக காந்தியின் கருத்துக்களுக்கு உயிர் கொடுப்பதில் எந்தவிதச் சமரசமும் இல்லாமல் கரம் கோக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைவதை காலமும், அரசியல் சூழலும்தான் முடிவு செய்யும்.
-சே.செல்வராஜ், தஞ்சாவூர்.
வாராக் கடன்கள் மீது கடும் நடவடிக்கை தேவை!
வாராக் கடன்கள் வசூலுக்காக மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்துள்ளது போதுமானதாக இல்லை. இன்றைய தினம் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் ரூ.7 லட்சம் கோடி மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் ரூ.6 லட்சம் கோடிகளைத் தாண்டியுள்ள நிலையில், மிகக் கடுமையான நடவடிக்கைகள் தேவை. பெருநிறுவனங்கள், அரசியலில் செல்வாக்கு பெற்றுள்ளவர்கள் பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று, அவற்றைத் திரும்பச் செலுத்தாமல் உள்ளதை, மக்கள் மத்தியில் வங்கி ஊழியர் சங்கங்களால் பல்வேறு காலகட்டங்களிலும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாணியாக உள்ள பொதுத் துறை வங்கிகளை எந்தச் சூழலிலும் நலிவடைய விடாது மத்திய அரசு காத்திட வேண்டும்.
- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT