Published : 17 Aug 2016 03:12 PM
Last Updated : 17 Aug 2016 03:12 PM

மொய்யில் என்ன இழிவு?

அவமானம், தர்ம சங்கடத்துடன், கை நீட்டி கடன் கேட்கும் கேவல உணர்வைத் தவிர்த்து பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள நம் முன்னோர்கள் உருவாக்கிவைத்த அருமையான சமூகப் பழக்கம்தான் மொய் விருந்து என்பதைத் தெளிவாகக் காட்டியது 'மொய்யில் என்ன இழிவு?' கட்டுரை.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தூத்துக்குடி மாவட்ட கிராமத்தில் ஒரு பழக்கத்தைக் கண்டிருக்கிறேன். விவசாய பம்பு செட்டில் குளிக்கும்போது ஒரு பெண்மணி தனது தங்கச் சங்கிலியைத் தொலைத்துவிட்டார். அந்த நேரம், உடன் குளித்துக்கொண்டிருந்த பெண்களைத் தவிர வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. அனைவருக்கும் விசாரணை, சோதனையென்றால் எவ்வளவு அவமானத்தை அவர்கள் சந்தித்திருக்க வேண்டும்!

மாறாக இந்த செய்தியைத் தண்டோரா போட்டு அறிவித்து, வீட்டுக்கு ஒரு கவளம் சாண உருண்டை கொடுத்து, குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் கோவில் முன் வைக்கப்பட்டுள்ள நீர்த் தொட்டியில் அனைவரும் இட வேண்டும் என்பது ஊர்க் கட்டளை. எடுத்தவர் மனந்திருந்தி, பயமின்றி திருப்பிக் கொடுக்க எவ்வளவு அருமையான வாய்ப்பு!

எதிர்பார்த்தபடியே, காணாமல் போன சங்கிலி திரும்பப் போடப்பட்டிருந்தது!

- இளவரசன்.வி, திருவான்மியூர்.

****

எது குடும்ப ஆட்சி?

ஒரே குடும்பத்தின் ஆட்சி காரணமாக இந்தியா வளரவில்லை என அமித் ஷா பேசியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இதேதான் பேசினார். இதே கோஷத்தை முன்னிலைப்படுத்தி 1977-ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தபோதே, குடும்ப ஆட்சி முடிவுற்றுவிட்டது.

அதன் பிறகு மொரார்ஜி தேசாய், சரண்சிங், சந்திரசேகர், தேவேகவுடா, ஐ.கே.குஜ்ரால், வி.பி.சிங், வாஜ்பாய் போன்ற 7 பிரதமர்கள் காங்கிரஸ் அல்லாத ஆட்சியைக் கொடுத்துவிட்டார்கள். உண்மை இவ்வாறு இருக்க அமித் ஷாக்களும் மோடியும் இன்னமும் இப்படிப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

*

எம்பிக்களும், தமிழக மானமும்!

டெல்லி விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஒரு பெண் எம்.பி., ஆண் எம்.பி.யைச் சட்டையைப் பிடித்து இழுத்துக் கன்னத்தில் அறைகிறார். அதே பெண் எம்.பி., ராஜ்யசபாவில் தனக்குப் பாதுகாப்பில்லை என்றும், கட்சித் தலைமை தன்னை அடிக்கிறது என்றும் அழுகிறார்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிப் பேச நேரம் ஒதுக்கினால் சம்பந்தமே இல்லாமல், “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என்று சினிமா பாட்டுப் பாடுகிறார் இன்னொரு எம்பி.

இதைப் பார்க்கும் மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தமிழக எம்.பி.க்கள் தமிழகத்துக்காகக் கடந்த இரண்டரை ஆண்டுக் காலமாக டெல்லியில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்று சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.

- ஈ.ஆர்.ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி.

*

நேரு அல்ல சாஸ்திரி

திங்கள் அன்று வெளியான 'புதிய கல்விக் கொள்கை: ஓர் அறிமுகம்' கட்டுரையில் டாக்டர் டி.எஸ்.கோத்தாரி தலைமையிலான கல்விக் குழுவை மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு உருவாக்கினார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் குழுவை அமைத்தது மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி என்பதே சரி.

- ஆர். ரமேஷ்குமார், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x