Published : 25 May 2017 09:44 AM
Last Updated : 25 May 2017 09:44 AM
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் மகிழ்ச்சி தரும் அதேவேளையில் மத்திய அரசு பகவத் கீதையைப் பள்ளிகளில் கட்டாயம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொடுக்கப்படும் அதே பள்ளியில் மத நூல்களைப் புகுத்துவது சரியல்ல. பகவத் கீதை மதத்தைக் கடந்த நூல் என்று கூறும் மத்திய அரசின் கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அப்படியே இருக்கும்பட்சத்தில் ஏன் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும் இந்த மசோதா பொருந்தாது எனக் கூற வேண்டும்? மேலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ரூ.5,000 கோடி வரை செலவு செய்யப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தமிழக அரசு இது போன்ற நடவடிக்கைகளிலிருந்து தள்ளி நிற்க வேண்டும். இந்தச் செய்தி உண்மையென்றால் அது மிக ஆபத்தானதாகும்!
-பத்மநாபன், செய்யாறு.
மாற்றுச் சிந்தனை தேவை!
ரஜினியின் அரசியல் ஆசை குறித்த இரு கட்டுரைகளையும் வாசித்தேன். ரஜினி அரசியலுக்கு வரட்டும் அல்லது வராமல் போகட்டும். அதற்கு ஏன் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தோன்றுகிறது. ஏதோ ஆகாயத்திலிருந்து ஒருவர் குதித்துவிட்டது போலவும், தமிழகத்திற்கு விடிவோ அல்லது அரசியல்வாதிகளுக்கு இழப்போ ஏற்படுவது போலவும் தோற்றத்தை ஏற்படுத்துவது நியாயமற்றது. தயவுசெய்து இனிமேலாவது அத்தகைய நிகழ்வுகளை புறக்கணித்து, வருங்கால தலைமுறையினரைக் கருத்தில்கொண்டு புதிய மாற்றுச் சிந்தனையை மக்கள் மனதில் விதையுங்கள்.
-பி.தர்மலிங்கம், திருவல்லிக்கேணி, சென்னை.
நிதர்சனமறியா பேச்சு!
மே21-ல் வெளியான, ‘மலையகத் தமிழருக்கு விடிவு பிறக்குமா?' கட்டுரை வாசித்தேன். தங்கள் உழைப்புக்கும் கண்ணீருக்கும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எந்த அங்கீகாரமும் பெற்றிராத ஒரு சமூகத்திடம் போய், ‘ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா ஊக்க முடைய னுழை' எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பிரதமர் பேசியது நகைமுரண் என்று கூறியுள்ளார் கட்டுரையாளர் டி.ராமகிருஷ்ணன். நாம் நம்மை ஆள தேர்வு செய்கிறவர்களில் பெரும்பான்மையினரும், அவர்களுக்கு உரை எழுதுபவர்களும் களத்தின் சூழல் அறியாதவர்களாக இருப்பதுதான் அவலத்திலும் அவலமாக உள்ளது. உரையை எழுதியவரும், அதை வாசித்தவரும் மலையகத் தமிழர்களின் உண்மை நிலையை உணரத் தவறிவிட்டனர்.
-க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.
மாற்றுக்கொள்கையும் மதிப்பும்!
அத்வானி, வாஜ்பாய் போன்ற ஆளுமைகளைத் தனது அடையாளமாகக் கொண்டிருந்த பாஜக, மோடி என்ற தனியொருவரை நம்பி அவரின் பின்னால் அணிவகுத்தபோதே அக்கட்சியின் பொதுத்தளத்தில் ஜனநாயகம் என்பது கவலைக்குரியதாகிவிட்டது. ‘தமிழிசையிடமே பேச முடியாதபோது எப்படி மோடியுடன் பேசுவது?’ என்ற கட்டுரையாளரின் கேள்வி நியாயமானதே.
அவர்களுடன் கலந்து பேச, விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயார்தான். ஆனால், சூழல் அப்படியா இருக்கிறது? பெரியாரும், ராஜாஜியும், காமராஜரும் அண்ணாவும் கலைஞரும் மாற்றுக் கொள்கை உடையோருடனும் இணக்கமாக இருந்தார்கள் என்றால் அவர்கள் தங்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் கட்சியையும் கொள்கையையும் மட்டுமே முதன்மைப்படுத்தினர். அப்படிப்பட்ட உணர்வினை இன்றைய பாஜகவிடம் எதிர்பார்ப்பது சற்று கடினம்தான்.
-ரா.பிரசன்னா, ஜெய்ஹிந்துபுரம், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT