Published : 04 Jan 2017 10:46 AM
Last Updated : 04 Jan 2017 10:46 AM

இப்படிக்கு இவர்கள்: நஷ்டத்தில் பங்குகொள்வோம்!

பருவமழை பொய்த்ததாலும், பயிர்கள் கருகியதாலும் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே மிகப்பெரும் இழப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்வோர் வேறு தொழில்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலை நீடிக்கா வண்ணம், மத்திய அரசும் மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் தொழில் நஷ்டத்திலும் அரசு பங்குகொள்ள வேண்டும். இஸ்ரேல் நாட்டில் விவசாயத் தொழிலில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி சாதனை படைத்துக்கொண்டிருப்பதை நாமும் பின்பற்ற வேண்டும்.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், காக்காவேரி.



சுவாரசியத் தொடர்

டி.ஏ.நரசிம்மனின், ‘என்னருமைத் தோழி’ புதிய தொடர் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. ஜெயலலிதாவைப் போல சுவாரசியமான வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அவரது வாழ்வில் நிகழ்ந்த பழைய சம்பவங்களை இத்தொடர் மூலம் அறிய ஆவலாக உள்ளோம்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.



பிம்ப அரசியல் ஒழியுமா?

நாயக பிம்பம், கருணாநிதி எதிர்ப்பு என்கிற தாரக மந்திரத்துடன் பெரிய கொள்கைகள் எதுவுமின்றித் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. 40 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில் ஒரு தனிநிகர் இயக்கமாக இருந்த அந்த இயக்கத்துக்கு இப்போது பிம்பம்தான் பிரச்சினை. தேசியக் கட்சிகள் எதாவது கொள்கை கொண்டு அரசியல் புரியும்போது, மாநிலக் கட்சிகளில் திமுக, பாமக, விசிக தவிர்த்து எந்தக் கட்சிக்கும் தனித்த கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை. மிகச் சிறந்த அரசியல் ஆளுமைகள் இருந்த, இருக்கின்ற தமிழகம் இவ்வளவு காலம் பிம்பச் சிறைக்குள் இருந்தாகிவிட்டது. இனியாவது அதிலிருந்து மீண்டு வருமா?

- விளதை சிவா, சென்னை.



வேடிக்கை நாடகம்

முதல்வர் பொறுப்பினை சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையினை அமைச்சர்கள், மக்களவைத் துணை சபாநாயகர் (டிச.3) உள்ளிட்ட பலரும் முன்வைப்பது வேடிக்கையாக இருக்கிறது. நேரடியாக ஓ.பி.எஸ்.ஐச் சந்தித்து ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக்கொள்வது சரியான அணுகுமுறையாகும். அவர் மறுத்தால், அவர்களது கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும். மேடைகள், அறிக்கைகள் மூலம் இவ்விவாதம் நடைபெறுவது, முதல்வரைச் செயலிழக்கச் செய்யும். சசிகலா கூறிய ராணுவ கட்டுப்பாடு இதுதானோ? தனக்கு விருப்பமில்லாததுபோலவும் பெரும்பான்மையோர் விருப்பத்துக்குத் தலை வணங்கிப் பொறுப்பேற்பதாகவும் சொல்ல இப்படியொரு நாடகம் போடப்படுகிறது என்பதை மக்கள் அறிவார்கள்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



பாதுகாப்பும் சர்ச்சையும்!

டிச. 30-ல் வெளியான, ‘தமிழகம் பேசியது 2016’ பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை, தன்னம்பிக்கை, ஆட்சியின் நிறை-குறை பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் தேர்தல் கூட்டணி குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு, தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது அவரது வரலாற்றுச் சாதனை. அதனை முறியடிப்பது கடினம். மத்திய அரசின் 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் இருந்த ஜெயலலிதாவின் மரணம் சர்ச்சையாகி, சிகிச்சை குறித்த சந்தேகம் மூலம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. எனவே, உண்மை நிலை அவரை நேசித்த மக்களுக்குத் தெரிய வேண்டியது அவசியம்.

-வி.சந்திரமோகன், கோவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x