Published : 29 Dec 2016 10:21 AM
Last Updated : 29 Dec 2016 10:21 AM
முக்கியமான, மனிதநேயச் செய்திகளுக்கு முன்னுரிமை தருகிறது ‘தி இந்து’. இது பாராட்டுக்குரியது. ‘கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்’ ( டிச.27) கட்டுரையில் அலெப்போ நகர் குறித்த அக்கறை இல்லாமல் செயல்படும் ஊடகங்களுக்கு உருப்படியான அறிவுரையை வழங்கியிருக்கிறார் சகோதரர் ஷிவ் விஸ்வநாதன். இந்தியா வல்லரசாக மாற விரும்புவதைவிட, நல்லரசு என்று பெயர்பெற வேண்டும். அலெப்போ நகரத்தின் சிறார்களின் அழுகுரலுக்கு அனுதாபமாவது தெரிவிக்க வேண்டும். நமது ஊடகங்களும் அரசை வலியுறுத்த வேண்டும்.
-எம்.கபார், மதுக்கூர், தஞ்சாவூர்
இலக்கே தவறு!
‘மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்’ (டிச.27) செய்தியை வாசித்தேன். தமிழகத்துக்கு மிகச்சிறந்த மாற்றுத் தலைமையாய் வந்திருக்கவேண்டியவர் வைகோ. சமீப கால அவரது அரசியல் நிலைப்பாடுகள் அவர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகின்றன. 1993-ல் அவர் குடவாசலில் முதல் பொதுக்கூட்டம் நடத்தியபோது, அப்போது பதின்பருவத்திலிருந்த என்னைப் போன்றவர்கள் 'இதோ வந்துவிட்டார் உண்மையான மறுமலர்ச்சி நாயகன்' என்று நம்பினோம். அவரின் உரை வீச்சில் கட்டுண்டு மயங்கிக் கிடந்தோம்.
அது மட்டும் தொடர்ந்திருந்தால், இன்று தமிழகத்தின் ஏன் இந்தியாவின் ஒரு முக்கிய அரசியல் சக்தியாய் இருந்திருப்பார் வைகோ. ஆனால், அவர் தேர்ந்தெடுத்த பாதையைவிட்டு விலகி இன்று இலக்கே இல்லாமல், அல்லது தவறான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு தன் சக்தியை மட்டுமின்றி தொண்டர்களின் சக்தியையும் விரயமாக்குகிறார் என்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. யாரைத்தான் நம்புவதோ தமிழனின் நெஞ்சம்..!?
-தம்பி வேலு, மின்னஞ்சல் வழியாக.
எப்படி மீட்கப்போகிறது?
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் நாட்டில் ஏற்பட் டுள்ள பொருளாதாரத் தேக்கம் குறித்துத் தலையங்கம் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்தும் மிக முக்கிய மானவை (பொருளாதாரத் தேக்கத்தி லிருந்து மக்களை மீட்டெடுக்க வேண் டும், டிச.26). ஊழல் மற்றும் கறுப்புப் பண ஒழிப்பின் மிக முக்கியமான அங்கமாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தையே அசைத்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி பெரிதும் குறைந்துள்ளது.
சிறு வணிகர்கள், விவசாயிகள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான துறைகளைச் சார்ந்த மக்கள் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர். வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை விவசாயிகளுக்குக் கொடுத்த ஒரு சிறு நம்பிக்கையைப் பணப் பற்றாக்குறை தகர்த்துள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் மக்கள் அனைவரும் ரொக்கப் பரிவர்த்தனையை நம்பியே உள்ளனர். அவர்களை இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகளிலிருந்து அரசு எவ்வாறு மீட்கப் போகிறது?
-ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.
இறை வேறு, இயற்கை வேறா?
‘ஊழித்தாண்டவத்தின் உயிர் சாட்சியம்’ (டிச.27) என்ற நக்கீரனின் கட்டுரை படித்தேன். மாலத்தீவில் உள்ள மடுவ்வரித் தீவில் குடும்பத்தோடு சிக்கிக்கொண்டு உயிர் பிழைப்பதற்குப் பட்டபாட்டைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி யது கட்டுரை. இறை வேறு; இயற்கை வேறன்று! சுனாமி, வெள்ளம், புயல் என்று வரும்போதெல்லாம் இயற்கை தரும் பாடங்களை அடுத்த சில நாட்களிலேயே மறந்து விடுகிறோம். பணப் பேய் பிடித்தாட்டிச் செயற்கைக்குள் சிறைபட்டு விடுகிறோம். எப்போது விழித்தெழுந்து மனசாட்சி பேசுவதைக் கேட்கப் போறோம்? சிந்திக்க வைத்த கட்டுரைக்கு நன்றி!
-கோமல் தமிழமுதன், திருவாரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT