Published : 04 May 2017 10:25 AM
Last Updated : 04 May 2017 10:25 AM
தொடர்ந்து ‘மோடியின் காலத்தை உணர்தல்!’தொடரை வாசிக்கிறேன். எனக்கு நெருக்கமான கருத்துகளைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ‘நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?’ கட்டுரை அற்புதம். மிகப் பெரிய அவதானிப்பு. சில ஆண்டுகளுக்கு முன் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?’ என்னும் தலைப்பில் சிறுநூல் ஒன்றை எழுத வேண்டும் எனத் திட்டமிட்டேன். ஆனால், நம் சூழல் பற்றிய தயக்கத்தால் அப்படியே தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரை அந்த நூலை உடனே எழுதும்படி தூண்டுகிறது. ‘தி இந்து’வின் துணிச்சலான பயணத்துக்கு வாழ்த்துகள்!
- பெருமாள்முருகன், திருச்செங்கோடு.
அரசியல் அறுவடைக்கான கலாச்சார சாகுபடி!
‘தி இந்து’வில் ‘மோடியின் காலத்தை உணர்தல்!’ தொடரைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். இஸ்லாமியர்கள் தொடர்பான கட்டுரைகளில் ஏற்படுகிற அபூர்வமான சில தவறுகள், தகவலாளிகளின் மனோநிலை சார்ந்து உருவாகின்றன என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. கட்டுரையாளரின் நோக்கமும் முயற்சிகளும் பணிகளும் பாராட்டுக்குரியவை. 03.05.2017 அன்று வெளியான கட்டுரையில் குறிப்பிட்டபடி, கீரனூர் ஜாகிர் ராஜாவைப் பாதித்த ‘தவ்ஹீது மர்கஸ்’ போன்ற மேனிலையாக்கச் சொல்லாடல்களால் அனுதினம் நானும் மனதுக்குள் அந்நியப்படுபவன்தான்.
முன்பெல்லாம் மார்க்கக் கல்வி பயிலும் இடங்களை ‘லெப்பை வீடு’ என்பார்கள். மார்க்கக் கல்வியைப் போதிப்பவர்களைக் குறிப்பிடும் லெப்பை என்ற சொல்லுக்கு ஆன்மிகம் சார்ந்த மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணிகள் இருந்தும், மர்கஸைத்தான் மக்கள் இன்று விரும்புகிறார்கள் அல்லது தங்கள் மீது திணிக்கப்படுபவற்றில் ஆன்மிகம் சார்ந்தவற்றைக் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்கிறார்கள்.
நாகர்கோவிலில் நாகரம்மன் கோயில், பெருமாள் கோயில், முத்தாரம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் இளமையின் பெரும்பகுதியைக் கழித்தவன் நான். அன்று, இசக்கியம்மன் கோயிலை ஏக்கியம்மன் கோயில் என்றுதான் சொல்வோம். இன்று அதை, இசக்கி அம்பாள் கோயில் என்று வாசிக்கும் போது, லெப்பை வீட்டை மர்கஸ் என்று சொல்லக் கேட்கும்போது ஏற்படுகிற அதே அந்நியத்தன்மை உருவாகிறது. கட்டுரை சொல்வதுபோல், இவை அனைத்துமே அரசியல் அறுவடைக்கான கலாச்சாரச் சாகுபடிகள்தான்.
- முஹம்மது யூசுஃப், குளச்சல்.
புள்ளிவிவரங்கள் மட்டுமே, திட்டங்கள் ஆகிவிடாது!
மே 2, 2017 அன்று வெளியான ‘திட்டங்கள் இனி வெறும் கனவுகளா’ என்ற தலையங்கம் படித்தேன். தேசத்தின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் தொலைநோக்குப் பார்வையில் உருவான திட்டக் குழு, மத்திய - மாநில அரசுகளுக்கு ஒரு உறவுப் பாலமாக அமைந்ததை மறக்க இயலாது. கூட்டாட்சித் தத்துவத்தின், முன்மாதிரியாகத் திகழ்ந்த திட்டக் குழு மூலம், மாநிலங்கள் பலன் பெற்றன. ஒரு சில நேரங்களில் அரசியல் சர்ச்சைகளிலும் சிக்கின. இருந்தபோதிலும், பணிகள் தொய்வின்றி நடந்தேறின.
ஆனால், தற்போதைய நிதி ஆயோக் அமைப்பின் வேலைத் திட்டங்கள்.. புள்ளிவிவரங்கள் மட்டுமே திட்டங்கள் ஆகிவிடாது. இவ்வமைப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் பிரதமர் தலைமையில் கூடியிருப்பது உண்மையில் வருத்தத்துக்குரியது. இன்னும், காலம் கடத்தாமல், உரிய அதிகாரம் கொடுத்து, நிதி ஆயோக் அமைப்பைப் பலப்படுத்துவதோடு, பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புகளுக்கு உரிய செயல்வடிவம் கொடுக்கும் அமைப்பாக மாறியாக வேண்டும். இல்லையெனில், திட்டக் குழு முறையே சரியானது என்ற எண்ணம் மாநிலங்களில் எழுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.
- முருகன் கோவிந்தசாமி, புதுச்சேரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT