Published : 22 Jun 2017 10:21 AM
Last Updated : 22 Jun 2017 10:21 AM
‘டாஸ்மாக்’ கடை தொடர்பான தீர்ப்பு குறித்து, நீதியரசர் சந்துருவின் கருத்தை ஜூன் 20 அன்று வாசித்தேன். “மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பி இருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனி பூரண மதுவிலக்கு வேண்டுமென்றால், நீதிமன்றங்களை நம்ப வேண்டாம். நம்பவும் முடியாது. சட்டப் பேரவைகளையே நாட முடியும் என்பதுதான் சமீபத்திய தீர்ப்பு நமக்குச் சொல்லும் படிப்பினை” என்ற அவரது கருத்து சரியானதுதான். ஆனால், அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை அரசியல் சட்டம் பாகம் மூன்றில் விவரித்ததுடன், பாகம் நான்கில் அரசின் நெறிமுறைக் கொள்கைகளை விவரித்துள்ளனர்.
பிரிவுகள் 36 முதல் 51 வரை அரசின் நெறிமுறைகளை விளக்கியவர்கள், பிரிவு 37-ல் பாகம் மூன்றில் காணப்படும் அரசியல் சட்டப் பிரிவுகளை நிறைவேற்ற நீதிமன்றங்களை நாட முடியாது என்று கூறியிருப்பதுதான், அரசியல் சட்டம் இயற்றியவர்களின் நாணயத்தைப் பற்றி ஒரு நியாயமான ஐயம் எழுகிறது.
இந்த அரசின் நெறிமுறைகள் ஆட்சியின் அடிப்படைக் கொள்கை என்று விவரிக்கும் அப்பிரிவு, நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதுதான் சுய முரண்பாடாகத் தெரிகிறது. எனவே, நீதியரசர் சந்துரு கருத்தின்படி நாடாளுமன்றத்தில் அரசியல் சட்டப் பிரிவு 37-ல் காணப்படும் இந்தத் தடை அகற்றப்பட, அரசியல் சட்டத் திருத்தம் வருவதுதான் சரியான பரிகாரமாக இருக்க முடியும்.
- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), உலகநேரி, மதுரை.
கல்வியாளர்கள் பெயரைச் சூட்டுக
பொதுக்கல்வி வளாகத்தில் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 1949-ல் அவ்வளாகத்தில் முதன்முறையாக நான் நுழைந்தபோது ஒரு தோப்புபோலத் தோற்றமளித்தது. பின்னர், எவ்விதத் திட்டமும் இன்றிப் புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டதால், ஒரு கான்கிரீட் காடாக மாறிவிட்டது.
எனவே, புதிய கட்டிடங்களை உரிய திட்டத்துடன் கட்டுவதோடு, அதற்கு அரசியல்வாதிகளின் பெயரைச் சூட்டுவதற்கு மாறாக கல்வியாளர் பெயரைச் சூட்ட வேண்டும். ஸ்டேதம் என்ற பொதுக் கல்வி இயக்குநர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அவர்போல பத்மஸ்ரீ நெ.து.சுந்தரவடிவேலு பட்டி தொட்டியெல்லாம் சென்று கல்வியைப் பரவலாக்க முதல்வர் காமராஜருக்கு உறுதுணையாக இருந்தார். எனவே, அவ்விரு இயக்குநர்களின் பெயரையோ, காமராஜர் பெயரையோ புதிய கட்டிடத்துக்குக் சூட்டுவதே பொருத்தமாக இருக்கும்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
ஹாக்கிக்கும் முக்கியத்துவம்
கிரிக்கெட் போட்டி நிகழ்வு, “இந்தியாவை வீழ்த்தி பட்டம் வென்றது பாகிஸ்தான்” என்ற தலைப்பில் ஜூன் 19ல் செய்தி வெளியாகி உள்ளது. இந்தப் போட்டி நடந்த அதே லண்டனில், நம் தேசிய விளையாட்டான ஹாக்கி உலகத்தொடரில் அரை இறுதி போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது மிகச் சிறிய செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை புகழ் பெற்ற நாளிதழான ‘தி இந்து’ தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
-ஆர்.எஸ்.ராகவன், பேகுர், பெங்களூரு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT