Published : 20 Sep 2016 06:06 PM
Last Updated : 20 Sep 2016 06:06 PM
ஞாயிறு அன்று வெளியான 'அண்ணா ஒருநாள் இந்தியாவுக்குத் தேவைப்படுவார்' கட்டுரையை வாசித்தேன். சரியான நேரத்தில் எழுதப்பட்ட சிறப்பான கட்டுரை. அண்ணா இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஒருநாள் தேவைப்படுவார்;
மாநில அரசியல் தலைவர்கள் அண்ணாவைப் படிப்பது இந்திய தேசியத்திற்கும், மத்தியில் தேவையான கூட்டாட்சி முறையைக் கொண்டுவந்து சீரமைப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதெல்லாம் சரிதான்.
முதலில் இன்றைய தமிழகத்துக்கு அவர் தேவைப்படுகிறார். இதை அவர் பெயரைச் சொல்லி அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்கள் எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறார்கள்?
முக்கியமாக அண்ணாவின் 'மாநில சுயாட்சி' முழக்கத்துக்கு இன்றைய திராவிடக் கட்சிகள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன? அடுத்தகட்ட இளைய தலைமுறையினரிடம் இதுபற்றியெல்லாம் விழிப்புணர்வு ஊட்ட திராவிடக் கட்சிகள் எடுத்துவரும் நடவடிக்கை என்ன என்று யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
தமிழகத்தின் இன்றைய இளைய தலைமுறையினருக்கு அண்ணா அரசியலின் முக்கியத்துவம் தெரியவில்லை என்றால், அதற்கான பொறுப்பை அவர் பெயரில் ஆட்சியை நடத்திவரும் இரு கட்சிகளுமே ஏற்க வேண்டும்.
- கு.மா.பா.திருநாவுக்கரசு, மயிலாப்பூர், சென்னை.
*
நம் பொறுப்புணர்வு
சரியான நேரத்தில் சரியான ஆலோசனையை எச்சரிக்கையுடன் தந்திருக்கிறது, 'நமக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது' என்ற தலையங்கம். தமிழகத்துக்கு எதிரான உணர்வுகளைக் கிளறி வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நேரத்தில், ஒற்றுமையாக எதிர்ப்பைப் பதிவு செய்யும்விதமாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் போராட்டத்தின்போது, நமது பொறுப்புணர்வுதான் வன்முறையைத் தவிர்த்திருக்கிறது. இந்தப் பொறுப்புணர்வு நீடிக்க வேண்டும்.
- கணேஷ், கோவை.
*
விருதும், அவரவர் நியாயமும்
விருதும், சர்ச்சையும் பிரிக்க முடியாதது என்றாலும், வழக்கமாக விருது வழங்கப்படுபவர் மீது விமர்சனம் எழும். இம்முறை கலைஞர் பெயரில் விருது வழங்கப்படுவது குறித்தே விமர்சனம் எழுந்துள்ளது. அவரவர் கூற்றிலும், வாதத்திலும் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது.
பிற மொழி படைப்பாளிக்கு வழங்குவதைவிட தமிழிலேயே ஏராளமான படைப்பாளர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. அவர்களை ஊக்குவிக்கலாம் என்பதே என் கருத்தும். நூல்வெளியில் வெளியான, 'கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி' கட்டுரையும் கவனம் ஈர்த்தது.
- பொன். குமார், சேலம்.
*
தொடரட்டும் விவாதங்கள்...
'கலை ஞாயிறு' பகுதியில் இடம்பெற்ற 'விவாத மரபு மீண்டும் வருமா?' எனும் கட்டுரையைப் படித்தேன். ஆரோக்கியமான விவாதங்கள், நயமான கருத்து மோதல்கள் நல்ல இலக்கியத்துக்கு வித்தாக அமையும் என்பதை உணர்ந்து கொண்டோம். அது வெறும் அரட்டை நடப்பதாகச் சொல்லப்படும், சமூக ஊடகங்களிலும் நடைபெறுவது மகிழ்ச்சி தருகிறது.
- சிவகாமிநாதன், தூத்துக்குடி.
*
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT