Published : 31 Mar 2017 10:42 AM
Last Updated : 31 Mar 2017 10:42 AM
மார்ச் 30 அன்று வெளியான வீ.பா.கணேசனின் ‘எளிமையின் உதாரணங்கள்’கட்டுரையின் முன்னுதாரணத் தலைவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட்டுகள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் சோரம் போகாத மாணிக்கங்கள் என்பதை உணர முடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிட்டுப் பொறுப்புக்கு வருபவர்களுக்கு, அரசு வழங்கும் ஊதியம் முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி முழு நேர ஊழியருக்கு மாதந்தோறும் வழங்கும் குறைந்த ஊதியத்தின் மூலம் எளிமையாக வாழ்கிறார்கள்.
இது குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பின்பற்றிவரும் நடைமுறை. இத்தகைய அப்பழுக்கற்ற தலைவர்களை ஊடகங்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். அக்கடமையை இக்கட்டுரை சரியாகச் செய்திருக்கிறது. இதன்மூலம் ‘அரசியலே சாக்கடை... எல்லோருமே ஊழல்வாதிகள்’ எனும் தவறான பிம்பம் தகர்க்கப்படும்.
- பெரணமல்லூர் சேகரன், சென்னை.
கோலியின் கருத்து ஏற்புடையதல்ல!
விராட் கோலியின், ‘இனி, ஆஸ்திரேலியர்கள் நண்பர்களல்ல’ என்ற கருத்து சிறுபிள்ளைத்தனமானது. ஆட்டத்தில் வெற்றிபெறக் கடைப்பிடிக்கும் பல உத்திகளில் எரிச்சலூட்டுவதும் ஒன்று. சதுரங்கத்தில்கூடத் தேவையற்ற காய் நகர்த்தல் எதிராளியைக் குழப்புவதற்குக் கையாளப்படும் ஒரு உத்தி. அதற்கு பதிலடி, எரிச்சல் அடையாமல் இருப்பதும் எதிராளியை எரிச்சலூட்டுவதுமே ஆகும். பிராட்மேனை எதிர்கொள்ள இயலாத நிலையில் இங்கிலாந்து அணித் தலைவர், ஜார்டைன், லார்வுட் என்ற வேகப்பந்து வீச்சாளரிடம் பிராட்மேனின் உடலைப் பதம் பார்க்கும் வகையில் பந்து வீசக் கூறினார். அதற்கும் அசையாது விளையாடி பிராட்மேன் சாதனை புரிந்தார். நேர்மையாக விளையாடுவதுதான் முக்கியமே தவிர, வெற்றி - தோல்வியல்ல என்பதையும், எந்த விளையாட்டிலும் மைதானத்தைவிட்டு வெளியேறியதும் பகைமை கூடாது என்பதையும் கோலி உணர்ந்துகொள்ள வேண்டும். ஸ்மித்தின் அழைப்பை அவர் ஏற்காதது சரியல்ல.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
மாநில அரசு எதற்கு?
ஹைட்ரோ கார்பன் குறித்த பிரச்சினைக்கு ‘முதலில் நெடுவாசல் மக்களிடம் பேசுங்கள்’ (மார்ச் 29) கட்டுரை, தற்போதைய நிலையின் சரியான பிரதிபலிப்பு. நமக்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசிடமே, அதுவும் பல போராட்டங்களுக்குப் பிறகே கேட்டுப் பெற வேண்டுமெனில், மாநில அரசு எதற்கு என்று தோன்றுகிறது.
- சத்யா செங்குட்டுவன், சென்னை.
வீரர்கள் வாழ்க... விவசாயிகள் வாழ்க!
இந்தியத் தலைநகரில் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கிறது. நமது முன்னாள் பிரதமர், காலஞ்சென்ற லால் பகதூர் சாஸ்திரி தமது ஆட்சியில், ‘‘வீரர்கள் வாழ்க.. விவசாயிகள் வாழ்க!’’ (ஜெய் ஜவான்.. ஜெய் கிஸான்) என்றார். தற்போது, இந்திய ராணுவத்துக்கு மிக அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது. வீரர்கள் இறந்துவிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடும், ராணுவ மரியாதையும் வழங்கப்படுகிறது. ராணுவ வீரர்களை மதிக்கும் அளவுக்கு விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். இல்லையெனில், உணவுப் பொருட்கள் அயல்நாட்டிலிருந்து வரவழைக்கப்படும் நிலை விரைவில் வரும்.
- எஸ்.மாணிக்கம், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT