Published : 19 Sep 2016 04:49 PM
Last Updated : 19 Sep 2016 04:49 PM
'பணக்கார உலகுக்கான சூத்திரம் எது? சமத்துவம், சுதந்திரம், நீதி!' எனும் கட்டுரையில், கார்ல் மார்க்ஸ் காலத்திலிருந்தே மனித இனத்தின் முன்னேற்றத்துக்கான உலகாயதமான காரணங்களையே நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்கிறார் தெய்ர்த்ரே என்.மெக்கிளாஸ்கி. அப்படியென்றால், மார்க்ஸ் காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள உழைப்புச் சுரண்டல்கள் யாவும் பொய்யானவையா?
மூலதனப் பெருக்கத்துக்குக் காரணமான உபரி உழைப்பின் அளவை அதிகரிக்கும் அதீத பேராசை எப்படியெல்லாம் மனித உரிமைகளையும் குழந்தைகள் நலனையும் உழைப்பவரின் அவசியத் தேவைகளையும் புறக்கணித்தன என்பதை நாம் அறிவோம். மார்க்ஸ் இந்த உண்மையை அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்து வெளியிட்ட பிறகுதான், பல்வேறு உரிமைகளையும் உழைப்பவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் பல நாடுகளிலும் ஏற்பட்டது.
இன்று குறைந்தபட்ச ஊதியம் பற்றியெல்லாம் நாகரிக சமூகம் பேசுகிறதென்றால், அதற்குக் காரணம் மார்க்ஸ்தான். உலகின் பெரும்பகுதி செல்வமும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்துவருவது குறையுமானால், பணக்காரர்களிடமிருந்து பறிக்க வேண்டிய தேவையும் குறைந்துபோகும். பணக்கார உலகுக்கான சூத்திரம், 'சமத்துவம், சுதந்திரம், நீதி' என்கிறார் கட்டுரையாளர். ஆனால், பணக்கார உலகுக்கு இச்சூத்திரம் எப்படிப் பொருந்தும் என்றுதான் தெரியவில்லை.
- மருதம் செல்வா, திருப்பூர்.
*
சேவைக் குறைபாடே முதல் எதிரி
'ஏகபோகத்தை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் தயாரா?' தலையங்கம் படித்தேன். வணிகத்தில் போட்டி தவிர்க்க முடியாதது. போட்டிக்கேற்பத் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அரசு செய்ய வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய இணைய இணைப்பு பெற வேண்டி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டேன். தொடர்ந்து இரண்டு மணி நேரம் முயன்றும் யாரும் போனை எடுக்கவில்லை. பின்னர், மற்றொரு எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது, இதுதொடர்பான விவரங்கள் தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டனர். வாடிக்கையாளர் சேவை இப்படி இருந்தால், பிஎஸ்என்எல் நிறுவனத்தால் எப்படி வணிகப் போட்டியில் ஈடுகொடுக்க முடியும்?
- கே.சிராஜுதீன், முசிறி.
*
ஆளுநர் பதவி தேவையா?
ஆர்.முத்துக்குமார் எழுதிய 'ஆளுநர் அரசியல் அன்றும் இன்றும்' கட்டுரை படித்தேன். மத்திய - மாநில அரசுகளுக்கிடையில் ஒரு தூதுவராக இருப்பார் என்பது வெறும் கனவாகிவிட்டது. அரசியலிலிருந்து ஓய்வுபெற விரும்புபவர்கள், நிர்வாகப் பணியில் இருந்தபோது ரகசியமாக உதவியவர்கள் உள்ளிட்டவர்களைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு இடமாக ஆளுநர் மாளிகை மாறிவிட்டது.
புதுச்சேரியில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட முதல்வருக்கு கிரண்பேடி என்றால், டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலை இயங்கவிடாமல் செய்வதிலேயே அங்குள்ள துணை நிலை ஆளுநர் கவனமாக இருக்கிறார். மொத்தத்தில், ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.
- கணேஷ், கோவை.
*
தேசியமயமே தீர்வு
தமிழகத்துக்கு செப். 20 வரை காவிரி நீரைத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் புது உத்தரவு செய்தியை வாசித்தேன். இது தற்காலிக மகிழ்ச்சியே. கர்நாடக, கேரள மாநிலங்களுடன் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால், நதிகளை தேசியமயமாக்க வேண்டும். அதுவே நாடு முழுவதற்குமான நிரந்தரத் தீர்வாக இருக்கும். நதிகள் இணைப்பு திட்டமும் சாத்தியமாகும்.
- சின்னப்பன், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT