Published : 09 Jun 2017 09:48 AM
Last Updated : 09 Jun 2017 09:48 AM
காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப், 1920 ஜூலை 20, 21 தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரம் கோரும் தீர்மானம் நிறைவேற ராஜகோபாலாச்சாரியாருக்குப் பெரும் ஒத்துழைப்பு அளித்தவர். அப்போது அவருக்கு வயது 24. இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதே மில்லத், அதில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்ட ஒருவர். அவரது உடன் பிறந்த சகோதரர் கே.டி.எம் அஹமது இப்ராஹிம் சாகிபும் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராகச் செயல்பட்டவர். அரசியல் நிர்ணய சபையில் சகோதரர்களாக இடம்பெற்றவர்கள் இவர்கள் மட்டுமே.
1959-ல் அண்ணாவுடன் காயிதே மில்லத் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தவர் ஆ.க.அ.அப்துல் ஸமது. இந்தச் சந்திப்புக்குப் பின் இவர்களது நெருக்கம் அதிகமானது. திமுகவின் தனி திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட அண்ணாவிடம் காயிதே மில்லத் வலியுறுத்தினார். அண்ணாவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். 1962 தேர்தலில் திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டு சேர்ந்தது. 1967 தேர்தலில் திமுக, முஸ்லிம் லீக் சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்ட் கூட்டணி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. அன்று வீழ்ந்தவர்களால் இன்று வரை மீள முடியவில்லை. 1972 ஏப்ரல் 5-ல் காயிதே மில்லத் இறக்கும்போது தமிழக முதல்வராக இருந்தவர் மு.கருணாநிதி.
-காயல் மகபூப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்.
செழியனும் கருணாநிதியும்!
கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் கருணாநிதி என்று அவர்மீது பழி சுமத்தப்படுகிறது. கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டமன்றத்தில் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றினார். தமிழகம் எங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, அதன்மீது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினரான இரா.செழியன் அதைக் கீழ்த்தரமான படுமோசமான பாதகச்செயல் என்று தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார் என இரா.செழியன் நினைவஞ்சலிக் கட்டுரையில் (ஜூன் 7) குறிப்பிடப்பட்டுள்ளது. அது செழியனின் குரல் மட்டுமல்ல, திமுகவின் குரலுமாகும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
அநீதியான உத்தரவு!
ஜூன் 5-ல் வெளியான, ‘மாட்டை ஏன் கையிலெடுக்கிறார்கள்’ எனும் கட்டுரையை வாசித்தேன். இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான, அதேநேரத்தில் சிந்திக்க வைத்த கட்டுரை அது. தாய் - தகப்பனையே ‘இடத்தில் வைப்பதா, மடத்தில் வைப்பதா, படத்தில் வைப்பதா?’ எனும் தர்க்கரீதியாகச் சூழல் நிலவும் இன்றைய காலத்தில், மாட்டை - அதுவும் பால் வற்றிய மாட்டை - இறுதிவரை பராமரிப்பது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை அதை ஆழமாக அலசுகிறது. எனவே, மத்திய அரசின் இந்த அநீதியான முயற்சி மிகவும் பயனற்றது.
- தெய்வசிகாமணி, உங்கள் குரல் வழியாக.
வெறுப்பரசியல்!
இன்று மோடியின் வெறுப்பரசியல் பற்றிப் பரவலாகப் பேசுகிறோம். நாம் மிகப்பெரிய ஆளுமையாகக் கொண்டாடும், பெருந்தன்மையான நபர்களாகக் கருதுபவர்களும் வெறுப்பரசியலுக்கு விதிவிலக்கல்ல என்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் புலப்படுகிறது. இந்த வெறுப்பரசியலால் ராஜாஜி வீழ்த்தப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி மீதான வெறுப்பு அல்லது பொறாமை காரணமாக இரா.செழியன், நெடுமாறன், வைகோ போன்றோர் கருணாநிதியைக் காட்டிலும் அதிக விமர்சனத்துக்கு உரியவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டதோடு, அவர்களைக் கொண்டாடவும் செய்தார்கள் என்பது சமகால வரலாறு. ‘இரா.செழியன்: தமிழகம் அளித்த கொடை’ கட்டுரையில், அதிமுகவை விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டார் என்பதைக் கட்டுரையாளர் ஆழி.செந்தில்நாதன் சுட்டிக்காட்டியதும் இவை எல்லாம் எனக்குத் தோன்றின.
- ரா.முத்தையா, புதுக்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT