Published : 23 May 2017 10:11 AM
Last Updated : 23 May 2017 10:11 AM

இப்படிக்கு இவர்கள்: மலையகத் தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கட்டும்!

மே 21 அன்று ‘ஞாயிறு அரங்கம்’ பகுதியில் வெளியான மலையகத் தமிழர்கள் பற்றிய கட்டுரைகளைப் படித்தேன். பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் பெற்ற இலங்கை அரசு, தனது முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, இந்திய வம்சாவளி தமிழர்களின் வாக்குரிமையைப் பறித்து நாடற்றவர்களாக்கியது. இவ்விஷயத்தில் இந்திய அரசும் உதவ முன்வரவில்லை. இந்தப் பிரச்சினை, 1964 அக்டோபரில் இந்திய இலங்கை அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலமாக ஒருவழியாக முடிவுக்குவந்தது. ஆறு லட்சம் பேரை இந்தியக் குடிமக்களாக ஏற்றுக்கொள்வதென்றும், நான்கு லட்சம் பேரை இலங்கை ஏற்றுக்கொண்டு இலங்கைக் குடியுரிமை வழங்குவதென்றும் இந்த மக்களைக் கூறுபோட்டுக் கொண்டது கடந்த கால வரலாறு.

இந்நிலையில், காலம் கடந்தேனும் இந்திய பிரதமர் ஒருவர், மலையகப் பகுதிக்குச் சென்று ‘இலங்கையின் இன்றியமையாத முதுகெலும்பு’ என புகழ்ந்துள்ளது இந்த மக்களின் உழைப்பை அங்கீகரித்துள்ளமைக்கு ஒரு சான்று. இந்திய-இலங்கை அரசுகள் 1964 மற்றும் 1974-ம் ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், குறிப்பாகத் தென் இந்தியாவில் , இந்திய அரசால் குடியமர்த்தப்பட்ட, தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் மேம்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள் அம்மக்களுக்குப் பலனளிக்கவில்லை. இந்தக் குறையை நிவர்த்திசெய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும்.

- கோத்தகிரி மா.சந்திரசேகரன், மின்னஞ்சல் வழியாக..



சிறக்கட்டும் கல்விப் பணி

தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பிறகு, கல்வித் துறைக்குத் தேவையான பயனுள்ள பல மாற்றங்களைத் திறம்படச் செயல்படுத்திவருகிறார். பிளஸ் 2வுக்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றி சரியான முடிவெடுப்பதற்கு உதவும்வண்ணம் மாவட்டம்தோறும் மேல்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புள்ள கல்வி பற்றி ஆலோசனை வகுப்புகள் நடத்துவது, தனியாரின் வளர்ச்சிக்கு உதவிய ரேங்கிங் முறையை ஒழித்தது, கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25% இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்குவதை உறுதிசெய்தது, உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூலகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது என்று பட்டியல் நீள்கிறது.

இதில் பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவரது அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமைச்சர் செங்கோட்டையன் 100% ஒத்துழைப்பை வழங்கிவருவதுதான். இவர்கள் இருவரின் நடவடிக்கைகளால் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை மீண்டும் புத்துயிர் பெறுமானால், அது தமிழக மாணவர்களுக்கு ஒரு அரிய வரப்பிரசாதமாக அமையும்.

- எஸ்.தணிகாசலம், கோபிசெட்டிபாளையம்.



தமிழ் வழியில்... கேரளமும்,

மேற்கு வங்கமும் பள்ளிக்கூடங்களில் தாய்மொழியைக் கட்டாயப் பாடமாக்கி உத்தரவிட்டிருக்கும்போது, மொழியுரிமைப் போராட்டத்தில் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்த தமிழ்நாடு, தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக அறிவிப்பதற்கு ஏன் காலதாமதம் செய்கிறது?' என்று மே 18-ம் தேதி தலையங்கத்தில் ( ‘தமிழைக் கட்டாயமாக்குவதில் என்ன தயக்கம்?’) கேட்டிருப்பது, நியாயமானதே. சமீபத்தில் 400 மொழிகளைக் கற்ற, தமிழகப் பள்ளி மாணவர் ஒருவரும் இதே கருத்தைச் சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.

சட்டம், மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் என யாருக்கு எது விருப்பமோ அதை ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளட்டும். ஆனால், பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை தாய்மொழியாம் தமிழை ஒரு மொழிப் பாடமாக எல்லோரும் படிக்க வேண்டும். புயலை மீறிப் பயணிக்கும் கப்பலைப் போல், உட்கட்சிப் பூசலால் தத்தளித்தாலும், மாணவர் நலன் கருதி பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு எண்ணியிருப்பதைப் போல, தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x