Published : 09 Aug 2016 05:05 PM
Last Updated : 09 Aug 2016 05:05 PM

தவறான சித்தரிப்பு



>திராவிட இயக்கம், உயர் சாதி எதிர்ப்பு இயக்கமே தவிர, சாதி ஒழிப்பு இயக்கம் அல்ல என்ற ஆடிட்டர் குருமூர்த்தியின் விளக்கம் கண்டேன். ‘சாதி ஒழிப்பு’ என்ற சொற்றொடரை யாரும் அப்போது பயன்படுத்தவில்லை. குருமூர்த்தி மிகைப்படுத்திச் சொல்கிறார்.

சாதி மறுப்புதான் கொள்கை. உயர் சாதிக்காரர்களைக் குறிவைத்து திராவிட இயக்கம் துவக்கப்படவில்லை. பிந்தைய காலகட்டங்களில்தான், குருமூர்த்தி சொல்வதைப் போல முற்பட்ட சமூகத்தை (பிராமணர்களை) தி.க. எதிர்த்தது. தனிப்பட்ட எந்த ஒரு மனிதரோ, கட்சியோ, சாதியோ பெரியாரின் எதிரிகளே அல்ல என்பதை ஆதாரபூர்வமாக அறிந்துகொள்ள நூல்கள் ஏராளமாக இருக்கின்றன.

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

***********************************



*

தற்போதைய தேவை

‘என் மகன் ஒரு நாள் என்னைக் கொல்லக்கூடும்’ என்ற கட்டுரை படித்தேன். அந்தக் கட்டுரை ஒரு தாயின் பயத்தைக் காட்டவில்லை. ஆட்டிஸம் என்ற நோயின் உண்மை முகத்தை நமக்குக் காட்டியது. உடல் வளர்ந்து, அதற்கேற்ற மனவளர்ச்சி இல்லாதவர்கள் படும் துன்பமும், அவர்களால் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் படும் துன்பமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.

இவர்களுக்கான பள்ளியையும் பாடத்திட்டத்தையும் உருவாக்கிவிட்டால் போதும் என்ற மனப்பான்மையில் அரசுகள் செயல்படுகின்றன. ஆனால், பள்ளியைத் தாண்டி அந்தக் குழந்தை எப்படி நடந்துகொள்கிறது, அதற்கான தேவைகள் என்ன என்பது பற்றி சிந்தனை ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாவதற்கு முன் மத்திய - மாநில அரசுகள் விழித்துக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதுதான் தற்போதைய தேவை.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

*

மரம் நடுவோம்

‘சுவாசத்துக்காக மக்கள் ஆக்சிஜன் சிலிண்டரைச் சுமக்கும் நாள் நெருங்கிவிட்டது’ என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் எச்சரிக்கை மிகவும் கவனத்துக்குரியது. சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுவது சாதாரண நிகழ்வாக மாறிப்போனது வேதனைக்குரியது. ஒவ்வொரு மரம் வீழும்போதும், விழுவது மரம் மட்டுமல்ல, நம் வருங்காலச் சந்ததியினரின் சுவாசத்துக்கும், நீராதாரத்துக்கும் நாம் வைக்கும் வேட்டு என்பதை உணர்தல் வேண்டும்.

அரசு ஒவ்வொரு மாநிலம், மாவட்டம்தோறும் சாலை விரிவாக்கத்துக்கு மரங்கள் வெட்டும் முன்னரே, அதற்கு இரண்டு மடங்குக்கு மரங்கள் நடுவதோடு மட்டுமின்றி, அதனைப் பராமரிக்க ஆலோசனைகள் வழங்கி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இயற்கை நமக்குக் கிடைத்த வரம். அதை முறைப்படி பயன்படுத்திக்கொள்வதுதான் அறிவுடைய செயலாகும்.

-சு.தட்சிணாமூர்த்தி, ஆசிரியர், கோவை

*

மொழி என்பது உணர்வு

ஒரு உணர்வுபூர்வமான கட்டுரை ‘மேற்கை வெட்டுதல்’. கிழக்கு வங்கம் என்ற ஒன்று இல்லாமல் இருக்கும்போது மேற்கு வங்கம் என்பதும் அவசியமில்லைதான். உலக அளவில் பார்த்தால்கூட முன்பு இரண்டாக இருந்த கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி தற்போது இல்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஊர்களுக்கான ஆங்கிலப் பெயரை மட்டுமல்ல, வடமொழியில் இருந்த பெயரையும் மாற்றியுள்ளார்கள். உதாரணமாக ஸ்ரீவைகுண்டம் என்பது திருவைகுண்டம் ஆனது. அதுபோலவே மாயூரம் என்பதும் மயிலாடுதுறை ஆனது. மொழி என்பது எப்போதும் மக்களின் உணர்வு சார்ந்த ஒன்று. அதற்கு மதிப்பளிப்பதே ஆள்பவர்களுக்கு நன்மை பயக்கும்.

- கே.எஸ்.முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x