Published : 13 Sep 2016 12:21 PM
Last Updated : 13 Sep 2016 12:21 PM

கான் அகாடமி கருத்தும், கல்விக் கொள்கையும்!

புதிய கல்விக் கொள்கை குறித்த இரு வாரக் கட்டுரைகளின் தொடர்ச்சியாக வெளியான, 'கான் அகாடமி பாடத்திட்டத்தை ஏன் வரித்துக்கொள்ளக் கூடாது' என்கிற கட்டுரை வாசித்தேன். தேர்வு முறை சீர்திருத்தம், கற்றல் - கற்பித்தல் முறைகள், பள்ளிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தேவைப்படும் ஒருங்கிணைப்பு, அதன் பொருத்தப்பாடு ஆகியவற்றை அலசிப்பார்க்க வேண்டிய தேவைகளை அது உணர்த்துகிறது.

பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையுள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வி செயல்பாட்டாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு' ஒரு மாற்றுக் கல்விக் குழுவை, முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவியைத் தலைவராகவும், ஆயிஷா இரா.நடராசனைச் செயலராகவும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ச.சீ.இராஜகோபாலன் உள்ளிட்ட மிக சிறந்த கல்வியாளர்கள் பதினைந்து பேர் கொண்ட குழு இது. இந்த மாற்றுக் கல்விக் குழு பேரா.நீலகண்டன் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்குமாறு கூறுவோம். ஏற்கத்தக்கவற்றை உள்ளடக்கி, அதனை நடைமுறைப்படுத்தத்தக்க நிர்பந்தங்களையும் அரசுக்கு உருவாக்குவோம் என்பதை இந்து வாசகர்களுக்குத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

- பேரா.நா.மணி,அமைப்பாளர், கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு.

*

ராகுல் காந்தியின் நியாயம்

மத்திய அரசு பணக்காரர்களுக்காகச் செயல்பட்டுவரும் சூழலில், 'பெரும் செல்வந்தர்களின் கடனில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.50,000 கோடிகளைத் தள்ளுபடி செய்துள்ளது மத்திய அரசு. பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்யும் அரசால், விவசாயக் கடனை மட்டும் ஏன் தள்ளுபடி செய்ய முடியவில்லை?' என்று ராகுல் காந்தி கேட்டிருப்பது நியாயமே.

வறட்சி உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

- எம்.லோகநாதன்,சிகரலப்பள்ளி.

*

இரோம் ஷர்மிளாவுடன் நான்?!

இரோம் ஷர்மிளாவைப் பற்றிய முன்னுரை, அவரைப் பார்க்கச் சென்ற இடத்தின் சூழல் போன்றவற்றைப் பேட்டியாளர் விவரித்தபோது, நாங்களும் அவருடன் பயணம் செய்ததுபோலவே உணர்ந்தோம்.

இந்த நேர்காணல் நடைபெற்றபோது, நான் மூன்றாவது நபராகக் கன்னத்தில் கை வைத்து, ஆவலுடன் அவர் முன் அமர்ந்திருந்தது போன்ற பிரமை ஏற்பட்டது. இரோம் ஷர்மிளாவின் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்!

- கேசவன் ஸ்ரீனிவாசன், மின்னஞ்சல் வழியாக.

*

அளவிட முடியாதது

நிதர்சன உண்மையை விளக்கிக் கூறுகிறது ஆசிரியரைக் கவனிக்கும் கண்கள் கட்டுரை! ஆற்றல்களைப் பறிகொடுத்த ஆசிரியர்களின் வலி உண்மையானது. வெறுமனே பாடத்திட்டங்களை மட்டுமே முடிக்கும் ஆசிரியராக அல்லாமல், சிந்திக்கும் ஆற்றலைத் தருபவரே சிறந்த ஆசிரியராக விளங்க முடியும். கட்டுரையாளர் குறிப்பிட்டதைப் போல ஆயிரம் கண்கள் பார்த்தாலும், எதிர்காலத்தின் நம்பிக்கையாய் விளங்கும் அந்த இளங்கண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

காண்பவர் நெஞ்சில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்துவதே உண்மையான ஆசிரியரின் நோக்கம். தேர்வை மட்டுமே வைத்து மாணவர்கள், ஆசிரியரின் திறனை அளவிட முடியாது.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x