Published : 13 Jun 2017 10:24 AM
Last Updated : 13 Jun 2017 10:24 AM
‘அப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்’ கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, இதுபோன்ற விஷயங்களைப் பாரம்பரியச் சொத்தாக மேல் நாட்டில் கருதிப் போற்றுவார்கள். அம்மாதிரியான வழக்கம் நம்மிடம் மிகக் குறைவு. இந்தக் கட்டுரையை அந்த ரயில் நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது மத்திய - மாநில ரயில்வே துறை அமைச்சர்களுக்கோ அனுப்பிவைக்கலாம். குறைந்தபட்சம் உஸ்தாத் அப்துல் கரீம் கானின் படத்தையும் சிறிய விளக்கத்தையும் அவ்வழியே கடந்துபோகும் ரயில் பயணிகளின் பார்வையில் படுமாறு வைக்கப் பரிந்துரைக்கலாம்.
சிறு வயதில் தஞ்சையிலிருந்து என் அம்மாவின் ஊருக்கு திருவாரூர் ரயில் நிலையம் வழியேதான் போக வேண்டும். அந்த ரயில் நிலையத்தில் உள்ள சுவரில் கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோரின் உருவப்படங்களைச் சுவரில் இரண்டு இடங்களில் பார்த்திருக்கிறேன். இசை ஞானம் ஏதும் இல்லாதுபோனாலும் இவர்களின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டது அந்த ரயில் நிலையத்தில் இருந்த படங்களின் மூலமாகத்தான். உஸ்தாத் அப்துல் கரீம் கான் போன்ற ஆளுமைகள் நமது நினைவில் பதிய வேண்டுமானால், வரும் சந்ததியினருக்கு அறிமுகப்படுத்த வேண்டுமானால் இது போன்ற எளிய முன்னெடுப்புகள் மிகவும் அவசியம்.
- ப.ஜெகநாதன், வால்பாறை.
புத்தக வாசிப்பை விருப்பமாக்க வேண்டும்!
ஜூன் -10 அன்று வெளியான நூல்வெளி பகுதியில், ‘புத்தக வாசிப்பையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே’ என்கிற தலையங்கம் தக்க தருணத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள் சிறு வயதிலேயே புத்தக வாசிப்பை வழக்கமாக்கிக்கொண்டால் பொது அறிவு வளரும். வாசிப்புப் பழக்கம் மேம்படும்போது மனப்பாட முறை குறையும். பாட அறிவைத் தாண்டி தனிமனித வாழ்க்கை செம்மையுறும். 40 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி நீதிபோதனை வகுப்புகளில் புத்தக வாசிப்பும், கதை சொல்வதும் நடைமுறையில் இருந்தது. இதனை மீண்டும் கொண்டுவருவது மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், போட்டித் தேர்வில் பங்கேற்கவும் உதவும்.
- எஸ்.பரமசிவம், மதுரை.
சீருடைக்கும் கட்டுப்பாடு வருமா?
தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் நடந்துவரும் சீரமைப்புப் பணிகள் மகிழ்ச்சி தருகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளையைத் தொடர்ந்து சீருடையைத் தங்களிடமே வாங்க வேண்டும் என்று நிர்ப் பந்திப்பதன் மூலம் இன்னொரு கொள்ளையை நடத்து கின்றன. ஆனால், அது வெளிச் சந்தை விலையைவிட மிக அதிகமாகவும், தரத்தில் குறைந்ததாகவும் இருக்கிறது. ஓராண்டுக்குரிய சீருடையை அடுத்த ஆண்டு அதே குழந்தையோ, இளைய குழந்தையோ பயன்படுத்தி விடக் கூடாது என்று ஆண்டுதோறும் சீருடையில் மாற்றமும் கொண்டு வருகிறார்கள். இதேபோல நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை எல்லாவற்றையும் பள்ளியில்தான் வாங்க வேண்டும் என்கிறார்கள். இதற்கும் ஒரு முடிவுகட்டினால், பெற்றோர்கள் மகிழ்வார்கள்.
- ஏ.சி.ராஜன், மதுரை.
ஆச்சரியம்
ஒரு கட்டுரையாளர், நாவலர் நெடுஞ்செழியனின் சகோதரர் என்ற அளவுக்குத்தான் செழியனைப் பற்றி தெரியும். ஜூன் 6, 7-ம் தேதிகளில் வெளியான கட்டுரை அவரின் முழுப் பரிமாணத்தையும் காட்டியது. அன்றாடம் நாம் சந்திக்கும் பல்வேறு வெற்றுக் கூச்சல்களுக்கு மத்தியில், இப்படி ஒரு மனிதரைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்கிற குற்ற உணர்வும் மேலெழும்பியது. இந்திரா காந்தியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக நாடாளு மன்ற உறுப்பினர் என்கிற முறையில் அவரது வாதத்தையும், அவரது பல்வேறு பரிமாணங்களையும் படிக்கப் படிக்க ஆச்சரியம். இந்திய சமூகம் அவருக்குச் சரியான மரியாதையைத் செய்திருக்க வேண்டும்.
- முருக சரவணன், பட்டுக்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT