Published : 03 Mar 2017 09:19 AM
Last Updated : 03 Mar 2017 09:19 AM
தை எழுச்சிப் போராட்டத்தின் மற்றுமொரு நீட்சிதான் நெடுவாசல் போராட்டம். அரசின் முடிவுகளைப் போராட்டக் களத்தில் உள்ளவர்களிடம் தெரிவிப்போம். முடிவு அங்குதான் எடுக்கப்பட வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்தது வரவேற்கத்தக்கது. ‘எரிவாயும் வேண்டாம். வேலைவாய்ப்பும் வேண்டாம். நாங்கள் வேளாண்மை செய்து மற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறோம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று களத்தில் இருந்த பெண்மணிகள் பேசியதைக் கேட்டபோது கண்கள் பனித்தன. மக்களைக் காக்க வேண்டிய கடமையில் உள்ள அரசிடமிருந்து நம் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக்கொள்வதே சவாலாக இருப்பது எவ்வளவு பெரிய வேதனை?
- உமா மகேஸ்வரி அமர், சென்னை.
எழுத்தும் வேடிக்கையும்
கருத்துப் பேழை பகுதியில் வெளியான 'எழுத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்!' (அறிவோம் நம் மொழியை பிப்.27) கட்டுரை படித்தேன். வெளியிலிருந்து வரும் சொல் எந்த மொழிச்சொல், அந்த மொழியில் அச்சொல் எவ்வாறு உச்சரிக்கப்படுகிறது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது கட்டுரை. இதைப் படித்ததும் டெல்லி தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் செய்த தவறு ஒன்று நினைவுக்கு வந்தது. சீன அதிபர் இந்தியாவுக்கு வந்த செய்தியை வாசிக்கும்போது, அவர் பெயரான ‘ஜி ஜின்பிங்க்'( Xi Jinping ) என்பதை ‘லெவன் ஜின்பிங்க்' என்று உச்சரித்துப் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
நீராதாரத்தைக் காப்போம்
கடும் வெயில் காலத்தில் நீர்நிலைகள் அனைத்தும் நீர் வற்றி பறவைகளுக்கும் உணவின்றிக் காய்ந்துவிடுகிறது. எனவே, நீர்ப்பாசன ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், அணைகள் யாவற்றையும் பொது மராமத்துப் பணி அலுவலகத்தின் வாயிலாகவும் 100 நாட்கள் வேலைத் திட்டம் மூலமாகவும் பணிகளை மேற்கொண்டால், வரும் மழைக் காலத்தில் பயம் வேண்டியதில்லை. மேலும், அடுத்த ஆண்டு கோடையில் தண்ணீர் பிரச்சினையைத் தைரியமாக எதிர்கொள்ளலாம்.
- எஸ்.மாணிக்கம், மின்னஞ்சல் வழியாக…
வெற்றி ஆயுதங்களில் இல்லை
ஒரு முரட்டு எலியைப் பூனைகள் பிடிக்க முடியாமல் தவிப்பதையும் அதற்காக சாமுராய் வருத்தப்படுவதையும் 28.02.17 அன்று வெளியான ‘கடவுளின் நாக்கு’ கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் அருமையாக எழுதியுள்ளார். கடைசியில், ஒரு கிழட்டுப் பூனை அதைப் பொறுமையாகப் பிடிப்பதை அருமையாக விளக்கியுள்ளார். இது இன்றைய காலத்தில் அனைவருக்கும் பொருந்தும். ‘அவசரக்காரர்கள் தங்களின் பலவீனத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள்.
பலவான் தனது பேச்சிலும் செயலிலும் அமைதியாக இருப்பான். உலகம் அவனைப் பரிகசிக்கக்கூடும். ஆனால், தகுந்த நேரத்தில் அவன் தன் திறமையை நிரூபித்து வெற்றியடைவான்’ என்ற வரிகள் உண்மையானவை. கிழட்டுப் பூனை எவ்வாறு வெற்றி கொண்டது என்பதை விளக்கிவிட்டு, வெற்றியைத் தீர்மானிப்பது ஆயுதங்களில் இல்லை; மனத்தெளிவும், நிதானமும் தகுந்த நேரத்தில் தன் திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதுமே ஆகும் என்று கூறியிருப்பவை இன்றைய கால கட்டத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதக் கருத்துக்கள்.
- ஜீவன்.பி.கே. கும்பகோணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT