Published : 14 Feb 2017 10:09 AM
Last Updated : 14 Feb 2017 10:09 AM
மண்ணெண்ணெய் பயன்பாடு தொடர்பான மத்திய அரசின் புதிய கொள்கையை ‘தி இந்து’வில் (13.2.2017) படித்தபோது ஒரு பயம் கவ்விக்கொண்டது. ‘மண்ணெண்ணெய் அற்ற மாநிலங்களாக அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்படும்’ என்ற மத்திய அரசின் அறிவிப்பைப் படித்தபோது, எங்கே தமிழகமும் அந்தத் திட்டத்தில் இணைத்துவிடுமோ என்ற பயமே அது. ‘மண்ணெண்ணெய் இல்லா மாநிலம்’ என்று அறிவிக்கப்பட்டால், ரேஷன் கடைகளில் மானிய விலையில் அந்த எரிபொருள் கிடைக்காது. அப்படியானால், வெளிச் சந்தையில் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் என்ன விலையில் கிடைக்கும்? ஏனென்றால், தமிழகத்துக்கு வெளியே வாழ்ந்த நான் கண்டுணர்ந்த அனுபவங்கள் அப்படி!
பொதுவாக, குளிர் காலங்களில் பெரும் குளிர் சூழ்ந்துகொள்ளும். வயோதிகர்களும் குழந்தைகளும் குளிக்க, குடிக்க வெந்நீரின் தேவை மிக அதிகமாக இருக்கும். இப்படியான சூழலில், மண்ணெண்ணெய் இல்லா மாநிலங்களைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அங்குள்ள பெரும்பாலான மக்கள் தண்ணீரைச் சூடாக்க எந்த அடுப்பைப் பயன்படுத்துவார்கள்? சமையல் எரிவாயுவையா? எத்தனை வீடுகளில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரமும், கெய்சரும் இருக்கின்றன? இவை எதுவும் இல்லாமல் சுள்ளி, விறகைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அது அவர்கள் உடல்நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாபெரும் கேடு இல்லையா? “மண்ணெண்ணெய் இல்லா மாநிலம் என்ற சூழல் உருவாக்கப்பட்டால், அதனால் பாதிப்புக்குள்ளாகும் ஏழை, எளிய மக்களுக்கு ஐந்து கிலோ சிலிண்டரை அரசு தரும் அல்லவா?” என்று சிலர் கேட்கக் கூடும். அதன் விலை என்ன? நியாய விலைக் கடைகளில் கிடைக்கும் மண்ணெண்ணெய் விலைக்கு இணையாக அது இருக்குமா? இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.
அரசாங்கம் தொடர்ந்து நியாய விலைக் கடைகளை ஒழிக்கும், சாதாரண மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவைகளைப் புறக்கணிக்கும் மனோபாவத்திலேயே திட்டமிடுவது கடுமையான கண்டனத்துக்குரியது. ரேஷன் மானியம் ஆட்சியாளர்கள் கண்களை எவ்வளவு உறுத்துகின்றது என்பது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. மக்கள் வாழ்க்கை இயல்பாக மேம்பட்டு, ரேஷன் கடைகளுக்கான தேவைகள் நீங்கும் வரை நியாய விலைக் கடைகளும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகமும் தடையின்றித் தொடர வேண்டும்.
மத்திய அரசின் இப்படியான மக்கள் விரோதத் திட்டங்களில் தமிழகம் தவறியும் தன்னை இணைத்துக்கொள்ளக் கூடாது!
- ஸ்ரீஜா வெங்கடேஷ், சென்னை.
ஆறுதலான பேச்சு
சசிகலாவின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு குரல் கேட்காதா என்று மக்கள் எதிர்பார்த்திருந்த சூழலில் வாய்திறந்திருக்கிறார் ஓ.பி.எஸ். மக்களின் கொந்தளிப்பான உணர்வுகளுக்கு நீர் தெளித்த அவரது பேட்டி நடந்த நிமிடங்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் மகிழ்ச்சியான தருணங்கள். ‘ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரணை, அவரது வீடு நினைவில்லம்’ என்பது போன்ற அறிவிப்புகள், அவர் சசிகலாவைவிட தமிழக மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான், தனி ஒருவராக நின்ற அவரது பின்னால் மக்கள் சக்தி அணி திரள்கிறது.
- இரா.பொன்னரசி, வேலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT